ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்

-தந்தை பெரியார்

அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் ஹிந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் ஹிந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது விபரம் தெரியாது இருந்த குந்தைகளுக்கும்தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழிய, மற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் ஹிந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான். சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி, இதே ஹிந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடர் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டுமென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னை யில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற் பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூறவேண்டுமானால், இக் காய்ச்சல் மிக “விருலன்ட் பாரத்தில்” அதாவது மிகக் கொடூர மான, வேகமான, ஆபத்துக்கிடமான தன்மையில் வந் துள்ளது என்று கூறுவார்கள். அதே போல் நமது கலாச்சாரத் திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமான, சற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய ஹிந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில், இதே ஹிந்தி கட்டாய பாடமாகக்கூட அல்ல, இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப்பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். 

நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், ஹிந்தியை இஷ்டப்பட்டுப் படிப்பவர்கள் கூட, இஷ்டப்பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம், சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.

எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது ஹிந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக, “இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்” என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர், முதல் முதலாக ஹிந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

“நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரி. மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன். நான் உத்தரவிடுகிறேன் என்றால், மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள். அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும், ஒரு சோமசுந்தர பாரதியாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது” என்று ஆணவத் தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் ஹிந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம் பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன்டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனே! வேறு யாருமில்லை. இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள 

தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார் “இப்போது ஹிந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு ஹிந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானா” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் “இது வெறும் வீம்புதானே, ஹிந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்து விடுவதுதானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறினேன். அதற்கு அவர் சொன்னார்.

“இந்த 40 பள்ளிகளில் கூட ஹிந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானா” என்று கேட்டார். “அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் ஹிந்தி மொழி எடுக்கப்பட்டுவிடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள், எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. 

அந்தத் தேதிக்குள் எடுக்கப்படாவிட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

“இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு ஹிந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்துவிட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே ராஜகோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார். ராஜகோபாலாச் சாரியாரும் “தாளமுத்துவுக்கும், நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோ” என்று அஞ்சி “உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்” என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு ஹிந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களை, அவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம், கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி ஹிந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்! வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலேயிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்துவிட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள். இதுதான் பழைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய ஹிந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்திர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும். உத்தரவு பிறப்பித்தவர்களும், திடீரென்று ஹிந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். ஹிந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்க வில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப் பட்டது, தமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப் பகுதியில் ஹிந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சே பிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாயமாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

“ஹிந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது” என்று இவ்வுத்தரவைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதி இருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக்குப் போவானேன், இஷ்டப்பட்டவர்கள் வேண்டுமானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்.........

தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெச்சலை உண்டாக் கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்தபோது “ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஹிந்தி இஷ்டப்பாட மாக்கப்பட்டது” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா?

“வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் ஹிந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் ஹிந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம். அந்த உத்தரவிற்கு ஆட்சேபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது” என்று பதில் கூறியிருக்கிறார். இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக “ஹிந்தியும் கட்டாய பாடமும்” என்கிற தலைப்பில் வெளி வந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். “வேண்டுமென்றுதான் ஹிந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்பட வில்லை. பொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம். இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட் சேபணை வரவில்லையே. அப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி ஹிந்தியைக் கட்டாயப்படுத்துவது” என்று பதில் கூறியிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆட்சேபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார். அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, “ஹிந்தி கட்டாயமாகத் தேவை” என்று “சுதேசமித்திரன்” ஒரு தலை யங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டது. அதற்கு ஆதாரமாக 

உத்தரவில் “சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்க வில்லை” என்று கூறியிருப்பதைக் காட்டி “கட்டாய ஹிந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது” அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதா? என்று கேட்டிருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்பவர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டுவிடுவதா? நல்லகாரி யத்திற்குக்கூட ஒருசிலர் ஆட்சேபணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்க வில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், “சுதேசமித்திரனுடைய” ஆட் சேபணையைக் கண்டதும், உடனே தம் உத்திரவை மாற்றி விட்டார். மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ்நாட்டி லும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார். முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப் பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டி ருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம் “நாங்கள் ஹிந்தி கட்டாயம் என்று சொல்லவில்லையே” என்பது தான். சர்க்கார் உத்திரவிலும், மந்திரிகள் பேச்சுக்களி லும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் - எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் ‘ஹிந்தியை எங்கு கட்டாயம் என்றோம்’. ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு ஹிந்திய மொழி ஒன்றைத்தானே கட்டாயமாக்கியிருக்கிறோம். இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய ஹிந்தியல்லவே என்கிறார்கள். ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவ தொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, ஹிந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப் படும், சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால், ஹிந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் ஹிந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? ஹிந்தி வாத்தியார்களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப்பானேன்? ஹிந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல்லையா? இதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!
சாகஸப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் “சென்னைச் செய்தி” என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும், கையெழுத்துடனும் வெளிவந்துள்ளது. என்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இப் பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோவையும் காட்டி) ஹிந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு “இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம். எனவேதான் எல்லா ஹைஸ்கூல்களிலும் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு பிறப்பித் துள்ளார்கள்” என்று எழுதியிருக் கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே ஹிந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளைகள் எப்படி ஹிந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் ‘அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா’ என்று மந்திரியார் கேட்கிறார். ‘நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே’ என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்று, நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார். நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயே, அதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு ஹிந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

பார்ப்பனரோடு ஹிந்திப் போட்டி பலிக்குமா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. ஹிந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் ஹிந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர் களைக் கொடுமைப்படுத்தலாமா? என்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 - தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ் நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமேயல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங் கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு, மறந்து போய்விட்டதென்றால், சரிவர கற்க, சரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் எப்படி ஹிந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 14.08.1948


No comments:

Post a Comment