தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

வல்லம், நவ.19 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பாக ஆதிதிராவிட மக்களுக்கு அரசின் மூலமாக கொடுக்கப்பட்ட கடன் பெற்ற பயனாளிகளிடம் கருத்து கேட்பது மற்றும் அவர்களிடத்தில் தொழில்முனைவோர்களை கண்டறியவும் ஆய்வு நடத்து வது தொடர்பாக சமுகப்பணித்துறை பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந் தம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆய்வினை தாட்கோ  நிர்வாக இயக்குநர் கந்தசாமி அய்.ஏ.எஸ். அவர்கள் ஆலோசனையின் படி மாவட்ட அளவில் மாநிலம் முழுவதும் இந்த ஆய்வினை நடத்த திட்டமிடப்பட்டது. மேலும் இதனை ஒவ்வொரு மாவட்டத்திலும்  சமூகப் பணித்துறையில்  பயின்று வரும் மாணவர்களைக் கொண்டு ஆய்வினை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பேசும் போது ஆதிதிராவிட மக்கள் மத்தியில் அவர்களின் பொருளாதார மேம்பாட்டில் தாட்கோ மிக முக்கிய பங்கினை வகித்து வருவதாகவும், தமிழ்நாடு அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் மிகவும் முனைப்புடன் செயல்படுவதாகவும் கூறினார்.  இப்படிப்பட்ட ஆய்வுகளில் சமூகப்பணித்துறை மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அரசு திட்டங்கள் மக்கள் மத்தியில் எவ்வகையான மாற்றங்களை உருவாக்கி உள்ளது என்றும், அதனை எளிய முறையில் பெறுவதில் உள்ள தடைகளைத் தெரிந்து கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார். 

பெரியார் நூற்றாண்டு கல்லூரி பாலிடெக்னிக் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தாட்கோவுடன் இணைந்து வல்லம் பகுதியில் உள்ள ஆதி திராவிட மக்களுக்கான தரமான குடியிருப்பு வீடுகளை சமூக நோக்கத்தோடு செயல்படுத்தியதாக நினைவு கூர்ந்தார்.  இந்த திட்டத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தோடு இணைந்து செயல்படுத்த முன்வந்த தாட்கோ நிர்வாக இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் தனது பாராட்டினை தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்க ராஜன் அவர்கள் கலந்துகொண்டு தாட்கோ திட்டங்களைப் பற்றியும், இந்த ஆய்வினை மேற்கொள்ள வேண்டிய அனைத்து பயிற்சிகளும், வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதின் மூலம் ஆதி திராவிட மக்கள் மேம்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி, பதிவாளர் பேராசிரியர் பி.கே.சீறிவித்யா, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.மல்லிகா வாழ்வியல் அறிவியல் மய்ய மேலாண்மை புல முதன்மையர் பி.விஜயலெட்சுமி, ஆராய்ச்சி புல முதன்மையர் பேராசிரியர் ச.குமரன், பெரியார் ‘புரா' ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ), முனைவர் ஆனந்தஜெரார்டு, பல்கலைக்கழக மாணவ ஆலோசகர் தே. அ.லில்லிபுஷ்பம், சமூகப் பணித்துறை தலைவர் முனைவர் பரமேசுவரன், உதவி பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் மற்றும் சமூகப் பணித்துறை மாணவர்கள் பங்குபெற்றனர். 

No comments:

Post a Comment