அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் ‘ஸ்டென்ட்' சுகாதார அமைச்சகம் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் ‘ஸ்டென்ட்' சுகாதார அமைச்சகம் அறிக்கை

புதுடில்லி, நவ 22- குருதி நாள அடைப்பு நீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘ஸ்டென்ட்’ உபகரணம், தேசிய அத்தியா வசிய மருந்துகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் வகையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் முதல்முறையாக கடந்த 1996-இல் வகுக்கப்பட்டது. அதன்பிறகு, 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்டது.

இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு பட்டியல் மீண்டும் திருத்தி யமைக்கப்பட்டு, ‘தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல்-2022’ கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இதில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள் என 34 புதிய மருந்துகள் சேர்க்கப்பட்டதுடன், 26 மருந்துகள் நீக்கப்பட்டன. உயிர்காக்கும் மருத்துவ உபகரணமான ‘ஸ்டென்ட்’ இப்பட்டியலில் தொடர்வது குறித்து மருந்துகள் மீதான தேசிய நிலைக்குழு மறுஆய்வு மேற்கொண்டு, தனது பரிந்துரைகளை சுகாதார அமைச்சகத்திடம் வழங்கியது. 

அதில், ‘இதய தமனி நோய், பொது சுகாதார பிரச்னையாக நீடித்து வருகிறது. உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக இந்நோய் உள்ளது. எனவே, ஸ்டென்ட் சிகிச்சைக்கான தேவை அதிகம் இருப்பதால், அது அத்தியாவசிய மருத்துவ உபகரணமாக தொடர வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது. மேலும், கடந்த 1940ஆம் ஆண்டைய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின்கீழ் ஸ்டென்ட் உபகரணம் ஒரு மருந்தாக வகைப்படுத்தப்பட்டிருப்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டது. 

இப்பரிந்துரையை ஏற்ற சுகாதார அமைச்சகம், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல்-2022இல் ஸ்டென்ட் இடம்பெறுவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டென்ட் உபகரணங்கள் மேலும் மலிவான விலையில் கிடைக்கும்; தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தால் விலை நிர்ணயிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, கடந்த 2015-இல் அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தனி அறிவிக்கை மூலம் அதில் ஸ்டென்ட் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment