இங்கே ஜாதி, மதத்திற்கு இடமில்லை; தமிழுக்குத்தான் இடம்! தமிழ் எல்லோரையும் இணைக்கும்; தமிழ் யாரையும் பிரிக்காது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

இங்கே ஜாதி, மதத்திற்கு இடமில்லை; தமிழுக்குத்தான் இடம்! தமிழ் எல்லோரையும் இணைக்கும்; தமிழ் யாரையும் பிரிக்காது!

 பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர்  நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் பொற்கிழி வழங்கி பாராட்டுரை!

சென்னை, நவ.13. அன்னை சேதுமதியின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவுப் பரிசு, பொற்கிழி வழங்கி உரையாற்றினார்.

அன்னை சேது அறக்கட்டளை அமைப்பின் சார்பில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று 12-11-2022  மாலை நடைபெற்றது. 

நிகழ்வில் அறிஞர் மருதநாயகம் தலைமையேற்க, தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். முனைவர் பேரா.வா.மு.சே. ஆண்டவர் அறிமுக உரையாற்றினார். பெருங்கவிக்கோ பாராட்டுப்பெறும் பெருமக்களின் பட்டியலை அறிவிக்க, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமிழ் தொண்டறச் செம்மல்களுக்கு ஆடை போர்த்தி பொற்கிழி வழங்கி அனைவரையும் பாராட்டிப் பேசினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இதயதுல்லா, பாக்கம் தமிழன்,தமிழறிஞர் பெருமக்கள் முன்னிலை வகித்தனர்.

படைச்செருக்குள்ள பாசறை விழா!

தமிழர் தலைவர் தனது பாராட்டு உரையில், இது பாராட்டுவிழா அல்ல, படைச்செருக்கு உள்ள, ஒரு பாசறையை உருவாக்குகின்ற அருமையான விழா என்றும், ஆகவே நீங்கள் அறிவாயுதத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் பலத்த கைதட்டல்களுக்கிடையே குறிப்பிட்டார். பெருங்கவிக்கோ அவர்களின் தமிழ்த்தொண்டினை பாராட்டும் போது, பெருங்கவிக்கோ குடும்பத்தை கவனிக்காமல் உலகமெல்லாம் தமிழ்த்தொண்டு செய்து வந்ததால், குடும்பத்தை ஆளாக்கி அனைவரையும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்கு அவரது இணையர் சேது அவர்களுக்குத்தான் உண்டு. ஆகவே அவரை இரண்டு பங்கு பாராட்ட வேண்டும். காரணம் அவர்தான் அடிக்கல் போன்றவர் என்று  பாராட்டினார்.

அன்னை சேதுமதியின் சிறப்பு!

தொடர்ந்து பேசிய அவர், அம்மா என்ற சொல்லின் சிறப்பைச் சுட்டிக்காட்ட கடவுள் மறுப்பு வெளியிடப்பட்ட விடயபுரத்தில் தந்தை பெரியார் ஒரு கேள்விக்கு சொன்ன பதிலை எடுத்துரைத்து, அம்மாவுக்கு இருக்கிற இடம் தனித்த பெருமைக்குரியது என்று அம்மா சேதுமதியின் சிறப்பை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, "வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்! வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்! நம் செயல்கள், ஒழுக்கங்கள் அனைத்தையும் அழித்தார்! நாம் உணர்ந்தோம் அவர் அஞ்சி விழித்தார்!" என்ற புரட்சிக் கவிஞர் பாடலை சொல்லி, நாம் உணர்ந்தோமா? அவர்கள் அஞ்சி விழித்தனரா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று எச்சரிக்கையும் செய்தார்.

தமிழ்தான் நம்மை இணைக்கும்!

மேலும் பெரும்புலவர் ப.கி.பொன்னுசாமி, கவிதை உறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன், பேராசிரியர் சோதிவாணன், பெருங் கவிஞர் இரவிபாரதி, பாவலர் கோ.கடவூர் மணிமாறன், பாவலர் ம.கணபதி, பொறிஞர் பீட்டர்ராசன், பெருங்கவிஞர் வேணுகோபால், பெரும்புலவர் த.இராம லிங்கம், பெரும்புலவர் இலந்தை இராமசாமி, தமிழ்த்திரு பொறிஞர் கோ.கோபாலகிருட்டிணன், தமிழ்த்திரு பாதுசா, குறளோன் வேலரசு, நத்தம் ஊராட்சித் தலைவர் துரை.போத்தி போன்ற நினைவுப்பரிசும், பொற்கிழியும் பெற்ற தமிழ்ப் பெருமக்களின் பட்டியலைச் சுட்டிக்காட்டி, "தெரிந்தோ, தெரியாமலோ எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் பாராட்டு பெற்றிருக்கிறார்கள். பீட்டர் இருக்கிறார்! பாதுசா இருக்கிறார்! எங்களைப் போன்ற மதத்திற்கு அப்பாற் பட்டவர்களும் இங்கே இருக்கிறோம்" என்று குறிப்பிட்டு விட்டு, "இங்கே ஜாதி மதத்திற்கு இடமில்லை! தமிழுக்குத்தான் இடம்! காரணம், தமிழ் தான் நம்மை இணைக்கும்! தமிழ் தான் நம்மைப் பிரிக்காது! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுதான் நமது பண்பாடு" என்று பலத்த கைதட்டல்களுக் கிடையே குறிப்பிட்டார். 

அத்தோடு "இன்னமும் தமிழிலும் அர்ச்சனை என்றுதான் இருக்கிறது என்பதையெல்லாம் மாற்ற போராட வேண்டும். திராவிடம் வெல்லும்" அதை நாளைய வரலாறு சொல்லும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்து  மருத்துவரிடம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அனுமதி பெற்று வந்திருப்பதால் இறுதிவரை இருக்க முடியாததற்கு வருந்துகிறேன் என்று விடை பெற்றுக் கொண்டார்.

தமிழர் தலைவருக்கு வாழ்த்துக் கவிதை!

தொடர்ந்து கவிச்சிங்கம் கண்மதியன் தமிழர் தலைவர் குறித்த ஒரு வாழ்த்துக் கவிதை வாசித்தார். இறுதியாக பெருங்கவிக்கோ ஏற்புரை வழங்கினார். முனைவர் 

சோ.கருப்பசாமி நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார். நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் 

ஆ.வெங்கடேசன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திகேயன், கழகத் தோழர்கள் ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், பூவை பகுதித் தலைவர் தமிழ்ச்செல்வன், வை.கலையரசன், க.கலைமணி, இளைஞ ரணி மாநில துணைச் செயலாளர் சோ. சுரேஷ், அரும்பாக்கம் சா.தாமோதரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment