மனிதநேயக் கொடியின் பட்டொளி பாரீர்!
மனிதப் பண்புகளில் தலையாய பண்பு அவர்தம் கொடை உள்ளத்தினால் செய்யும் கொடைகள்.
கொடை என்னும்போது அதற்கு ஒரு குறுகிய பொருள் கொள்ளத் தேவையில்லை. பரந்துபட்ட - விரிவடைந்த "கொடைகளாக" அவற்றை நாம் பகுத்துப் பார்த்து அறிவுக்கு வேலை கொடுக்கலாம்!
'கொடை' என்பது ஏதோ தம்மிடம் உள்ள செல் வத்தை - மற்றொரு தேவையாளருக்கு அளித்தல் என்பதான பொருளோடு அடக்கி விடக் கூடாது!
பொருளாதாரத்தாலானவை கொடைகளே அல்லவெனவும் நாம் பொருள் கொள்ளத் தேவையில்லை.
ஆசிரியரின் அறிவுக் கொடை, மருத்துவர்கள் பலரது மருத்துவ சிகிச்சைக் கொடை - கட்டணம் வாங்கினாலும், வாங்கவிட்டாலும் - காரணம் அவர்களது வாழ்வாதாரத்திற்குரிய தக்க பொருளை அவர்கள் தேடுவது குற்றமல்லவே! (சிலரது பகற்கொள்ளைகளை நியாயப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்ற போதிலும்கூட)
ஏழை, எளிய மனிதர்களால்கூட கொடை யுள்ளம் இருந்தால் கொடை கொடுத்தல் சாத் தியமே! உடல் உறுப்புகளை - தமக்கு உற்றவர்களுக்கு, உறவுகளுக்குத் தேவைப்படும்போது தருவதும் கொடை உள்ளம் அல்லவா!
பலருக்கு சிறுநீரகம் ஒன்றை (நமக்கு இரண்டு உள்ள நிலையில்) கொடையாகக் கொடுக்க முன் வருவோர் சிறந்த வள்ளல்கள் தானே! விழிக்கொடை ('கண்தானம்'), குருதிக் கொடை ('ரத்த தானம்') - இவை எல்லாம் சிறந்த கொடைகளல்லவா?
அதையெல்லாம் தாண்டி, முழு உடற்கொடை என்பதை, மறைந்த பிறகு - மருத்துவக் கல்லூரிக்கு அளித்துவிட தங்கள் விருப்பத்தை 'மரண சாசனமாக' நமது இயக்கத் தோழர்கள் பாலின வேற்றுமை இன்றி - எழுதி வைத்தும், அவரது குடும்பத்தினரும் அவர் விருப்பத்தை செயல்படுத்துவதும் மிகப்பெரும் தொண்டறம் அல்லவா?
இறந்த பின் உடற்கொடை தருவது என்பதால், எத்தனை எத்தனை புதிய மருத்துவர்கள் - வருங்கால நோயாளிகளுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றுவதற்கு இந்த உடற்கொடை மறைமுக நன்மை, 'செயலூக்கி' அல்லவா?
இப்போது மற்றொரு வகையிலும் 'மனிதம்' தனது கொடைப் பண்பை வாய்ப்பாக அமைத்துக் கொள்ள முன் வந்திருப்பது, பழங்காலத்தில் கேள்விப்படாத இந்த பகுத்தறிவு யுகத்தின் பாராட்டத்தக்க வளர்ச்சியாகும்!
விபத்துக்களால் மூளைச்சாவு பெற்று, மரணமடையும் பல இளைஞர்கள் - வாலிபர்கள் - ஆகியவரின் உடல் உறுப்புகளை - காவல்துறையின் - மற்ற மற்ற அரசு அதிகாரிகள் - மருத்துவமனை மருத்துவர்கள் முதலியோரின் ஒருங்கிணைந்த தொண்டறத் தின் பயனாக, மூளைச் சாவுக்கானவர்களது உடல் உறுப்புகளை அவர்கள் பெற்றோர்களும், நல்ல மனிதநேயப் பண்புடன், அவ்வுறுப்புகள் தேவை எனப் பதிவு செய்து பல மருத்துவமனைகளில் காத்திருப்போருக்கு உதவிடும் வகையில் கொடையாக கொடுக்கும் மானுட நேயப் பெரு உள்ளங்களை எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை!
அதன் மூலம் இறந்து போன தங்கள் பிள்ளைகள் - உறவுகள் மற்றவர்கள் மூலம் இறக்காத வாழ்வை இரந்து கொடுப்போர்மூலம் பெற்று வாழ்ந்து மகிழ்கின்ற அரிய வாய்ப்பினை அல்லவா பெறுகின்றனர்.
பரிசோதனைக்கு, முன்பு எலிகள், முயல்கள் போன்றவை பெரிதும் பயன்படுத்தப் பட்டன. இப்போது உடற்கூறுப் பாடத்தைப் படிக்க - போதிக்க மனித உடல் உறுப்புகளும் உதவுகின்றன என்று என்னும்போது - அதையும் தாண்டி மற்றவரை வாழ வைக்க, இந்த உடற்கொடை, உறுப்புக் கொடைகள் முக்கிய காரணிகளாக அமைந்து வருகின்றன.
கருணையுள்ளம் தரும் புதுவாழ்வு - மற்றவருக்கு இந்த உலகில்!
சென்னையில் மூளைச் சாவு பெற்ற ஒரு பெண்ணின் உடல் உறுப்புகளை சென்னையில் உள்ள முக்கிய பிரபல மருத்துவக் கல்லூரிகள் பலவற்றிற்கும் பிரித்து அளித்துள்ளனர் அரசு மருத்துவத் துறையினர் என்ற செய்திதான் (13.11.2022) எப்படி நம்முடைய காதுகளில் மனிதநேய இசையாக ஒலித்து மகிழ வைக்கிறது பார்த்தீர்களா?
எனவே வாழும்போது நாம் பிறருக்குப் பயன்பட்டோமோ இல்லையோ - மறைந்த பிறகும் பயன்பட இது ஓர் அருமையான, கொடை அல்லவா?
செத்தும் வாழத் தயாராகவே உள்ள "பெரியார் உடற்கொடை, உறுப்புக் கொடை"யில் உறுப்பினர் களாகவும் பதிவு செய்து கொள்ளுங்கள் - மற்றும் எங்கும் இதில் தயக்கம் இன்றி முன்வந்தால் மனிதநேயக் கொடி பட்டொளி வீசிப் பறப்பது உறுதி!