இலங்கை கடற்படை அட்டூழியம் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

இலங்கை கடற்படை அட்டூழியம் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம் நவ 16 கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம்  (14.11.2022) 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்து இருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயல்களால் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே குறைந்த அளவிலான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். பெரும்பாலான மீனவர்கள் பெருத்த இழப்பு ஏற்பட்டதாக கூறினர்.

சிறப்பாக செயல்பட்ட அரசு விடுதி காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை- ஆட்சியர் வழங்கினார்

ஈரோடு நவ. 16 ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு விடுதி காப்பாளர்களுக்கு பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். விடுதி காப்பாளர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு விடுதிகளில் சிறப்பாக பணியாற்றிய காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய காப்பாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிவகிரி அரசு மகளிர் விடுதி காப்பாளர் சுலோச்சனாவுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், அவல்பூந்துறை அரசு மகளிர் விடுதி காப்பாளர் செல்விக்கு 2-ஆவது பரிசாக ரூ.5 ஆயிரமும், நம்பியூர் அரசு ஆண்கள் விடுதி காப்பாளர் குமாரசாமிக்கு 3-ஆவது பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது.   இதேபோல் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மய்யத்தின் சார்பில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போட்டித்தேர்வு பயிற்சி முகாமில் குரூப்-2 முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பவித்ரா, கிருஷ்ணன் ஆகியோரையும், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ரமேஷ் என்பவரையும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பாராட்டினார். முன்னதாக குழந்தைகள் தின விழாவை ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூட மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது மாணவிகளுக்கு அவர் இனிப்பு வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment