சென்னை,நவ.5- வானிலை ஆய்வு மய்ய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று (4.11.2022) கூறியதாவது:
இலங்கையை ஒட்டி, தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 9ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, வரும் 10, 11ஆம் தேதிகளில் தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும். இதன் முன்னேற்றம் பின்வரும் நாட்களில் தெரியும்.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரமாக உள்ளது. நவ. 4ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக சென்னை தண்டையார்பேட் டையில் 14 செ.மீ., காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 12 செ.மீ., நாகை மாவட்டம் வேதாரண்யம், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தலா 10 செ.மீ., சென்னை பெரம்பூரில் 9 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடம்பூர், சிறீவைகுண்டம், சென்னை ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நவ. 5, 6, 7, 8ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 5ஆம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக் குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் 8, 9ஆம் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் 4 நாட்களில் சராசரியாக 27 செ.மீ. மழை பொழிவு
சென்னையில் கடந்த 4 நாட்களில் மட்டும் சராசரியாக 27 செ.மீ. மழை பொழிந்துள்ளது. அக் டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அக்டோபர் மாதம் இறுதியில் பருவமழை தொடங்கி னாலும், அக் டோபர் 1-ஆம் தேதியில் இருந்து பதிவாகும் மழை அளவு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 4.11.2022 வரையிலான நிலவரப்படி, 41 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பைவிட 27 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த மாதம் (அக்டோபர்) 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சென்னையில் 14 செ.மீ. மழைதான் பதிவாகியிருந்தது. அப்போது இயல் பைவிட 48 சதவீதம் குறைந்திருந்தது. சென்னையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, கடந்த 4 நாட்களில் மட்டும் சராசரியாக 27 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இயல்பைவிட மழை குறைந் திருந்த நிலையில், தற்போது இயல்பை காட்டிலும் அதிகம் மழை பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment