பேராவலைத் தூண்டும் பொருளாதார நிலையில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பற்றிய வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

பேராவலைத் தூண்டும் பொருளாதார நிலையில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பற்றிய வழக்கு

கார்த்திக் ராஜா கருப்பசாமி

இட ஒதுக்கீடு என்பது சூத்திரர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வரலாற்று ரீதியில் இழைக்கப் பட்ட அநீதிகளுடன் இரண்டறக் கலந்து இருப்பது. ஜாதி ஒழிப்பு இயக்கத்தின் போது பிறந்ததுதான் இது. பிறப்பின் அடிப் படையில், சற்றும் மனித நேயமே இன்றி, தேசிய நீரோட்டத்தில் கலக்கப்படாமல் ஒதுக்கி வைக் கப்பட்டிருக்கும் அவர்களின் துன்பங்களைக் குறைக்கவும், இழப்பீடு அளிக்கவும், சமூக அரசியல் களங்களில் ஒரு நியாயமான பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்து கொள்வ தற்குமான ஒரு வழியாக இந்த இடஒதுக்கீடு என்ற கருத்து இருந்து வந்தது. தேச நிர்மாணப் பணிகளில் அனைத்துப் பிரிவு மக்களும் சமமான உரிமையுடன்  பங்கேற்றுக் கொள்வதற்காக அர சியல், கல்வி மற்றும் பொதுப் பணிகளில் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தங்களை தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு அன்றும் சரி, இன்றும் சரி, இந்த கருத்து ஏற்புடையதாக இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தேசம் என்பது, பாரம்பரியமான பிறப்பின் அடிப்படையிலான ஜாதிகளின் செல்வாக்கின் தகுதிகளின்படி அமைந்ததே அன்றி, எதிர்கால சமத்துவத்தின் அடிப்படையி;ல் அமைந்தது அல்ல.

இட ஒதுக்கீடு என்பதன் பொருள் என்ன ?

டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார்  ஆகி யோர் அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவம்  அளிப்பதற்கான ஒரு வழி என்றே இடஒதுக் கீட்டைப் பற்றி பேசினரே அன்றி, அதை ஒரு வறுமை  ஒழிப்பு திட்டம் என்று கருதவோ பேசவோ செய்யவில்லை. நூறு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான செயல் பாட்டைப் புரிந்து கொள்ளும் முயற்சிகளையும், நுணுக்கமான விவாதங்களையும் புறந்தள்ளி விட்டு, பொருளாதார நிலையில் பின்தங்கிய பொதுப் பிரிவுகளைச் சேர்ந்த  உயர் ஜாதி யினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீ;டு அளிக்க வகை செய்யும் அரசமைப்பு சட்ட 103 ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

இடஒதுக்கீடு என்ற கருத்துக்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிராக வழக்க மாகப் பயன்படுத்தப்படும் ஒரு மந்திரம்தான் தகுதி என்பது. கடவுள்களுக்கு பலி கொடுப்பது, தானங்கள் பெற்றுக்; கொள்வது,  அர்ச்சகர்களாக வருவது, ஆன்மிக ஆசான் நிலையை ஏற்றுக் கொள்வது மற்றும் கல்வி போதிப்பது போன்ற அனைத்துப் பணிகளிலும் பார்ப்பனர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். செல்வம் ஈட்டும் தொழில் களில் வைசியர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களின் இந்த ஆதிக்கம், மனுஸ்மிருதி அர்த்தசாஸ்திரம் மற்றும் வேத புராணங்களில் அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள அதிகாரத் தின் கீழ் வேர் கொண்டவையாக இருப்பதாகும். மூன்று மேல்தட்டு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி கற்க முடிந்திருக்கிறது. ஆங்கிலேயரின் காலனி ஆட்சியின் போதுதான், நவீனமயமாக்கல், ஜனநாயகமயமாக்கல்; போன்ற முன்னேற்றத்துக்கான அழுத்தங்கள் காரணமாக, பிறப்பின் அடிப்படையிலான உயர் ஜாதியினரின் பாரம்பரியமான ஆதிக்கம் அரசுப் பணி அதிகார வர்க்கம் சட்ட வழக்குரைஞர்கள், பேராசிரியர் போன்ற  மதம் சாராத களங்களில் மதிப்பிழந்து போனது. சமூகத்தில் சமத்துவத்தை வலியுறுத்திய ஜோதிராவ் பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள், புதுமையான புராணங்களின் அடிப் படையில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் சில குறிப்பிட்ட தொழில்களில் யதேச்சதிகாரமாக இட ஒதுக்கீடு செய்யும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று விரும்பினர்.  

மிக முக்கியமாக, விரல்விட்டு எண்ணக் கூடிய ஜாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய ஏனைய ஜாதியினருக்கும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த இயக்கம் தோன்றி செயல்பட்டது.

இந்த உயர்ஜாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ,  தகுதி என்ற மந்திரம் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள உயர்ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா 2019இல் நாடாளுமன்றத்தில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டபோது, தகுதி பற்றி யாரும் எந்த கவலையும் படவேயில்லை. 

ஏழைகளை வகைப்படுத்தல் 

இந்த இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை "நாட்டு ஏழைகளுக்கான சமூகநீதி’’ என்று பா.ஜ.க. வரவேற்று பாராட்டியுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வரும் உயர் ஜாதியினர் உண்மையிலேயே இந்தியாவின் ஏழைகளா? ஆண்டு வருவாய் 

8 லட்சம் ரூபாய் ஈட்டுவதுடன், 1000 சதுர அடி வீட்டினை வைத்திருக்கும் உயர் ஜாதி தனி மனிதர்கள் இப்போது ஏழைகள் என்று அழைக் கப்படுகின்றனர். நகர்ப்புறங்களில், நாளொன்றுக்கு 32 ரூபாய் செலவு செய்பவர்களும்; கிராமப் புறங்களில் 27 ரூபாய் செலவு செய்பவர்களுமான 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்ந்து வருகின்றனர் தாழ்த்தப்பட்ட பிரிவின ரிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரிலும் உள்ள ஏழைகள், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் வாழும் ஏழைகளை விட பெரும் பகுதியினராக இருக்கிறார்கள் என்பதை, மாநி லங்கள் மற்றும் இந்தியாவின் ஒட்டு மொத்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாளொன் றுக்கு 75 ரூபாய்களுக்கு மேலாக ஈட்டும்  ஒரு குடும்பம் வறுமைக் கோட்டுக்கும் மேலே வாழ் பவர்களாகக் கருதப்படுகின்ற, இன்று நாம் வாழும் இந்தியாவில், நாளொன்றுக்கு 2,222 ரூபாய் ஈட்டும் உயர்ஜாதியினர் பொருளாதார நிலையில் நலிந்தவர்கள் என்று கருதப்படுகிறது. வருவாய் புள்ளிவிவரத் துறையின் அறிக்கையின் படி  10 லட்ச ரூபாய்களுக்கு மேல் ஈட்டும் குடும் பங்கள் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.

1990 ஆம் ஆண்டுகளில் உயர் சலுகை பெறும் உயர் ஜாதி சமூகங்களின்  புகழ் பெற்ற மெத்தப் படித்தவர்கள் மண்டல் குழுவை முரட்டுத்தனமாக தாக்கியதுடன், நம்பத்தக்க புள்ளி விவரங்கள் அதனிடம் இல்லை என்று கூறினர். உண்மையிலேயே,  1891 மற்றும் 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அதிகார பூர்வமான புள்ளி விவரங்களின் அடிப் படையில்தான் மண்டல் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. பல்வேறுபட்ட ஜாதி மற்றும் சமூகங்களில்  சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பவர்களின் கண்ணோட்டத்தைக் கொண்டே பிற்படுத்தப்பட்ட தன்மை என்ற கோட்பாட்டை பி.பி. மண்டல் வடிவமைத்துள்ளார். ஆனால், இப்போது உயர்ஜாதி ஏழைகளுக்கு 

10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடும்போது, அதற்கான நியாயத் தையோ, நம்பத் தகுந்த புள்;ளி விவரங்களையோ அவர்கள் அளிக்கவில்லை. மண்டல் ஆணையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சமத் துவத்தை நிலவச்செய்வதற்காக, சமமற்றவர்களை சமப்படுத்துவது’’. பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அனுமதித்ததன் மூலம்,  ஆக்கபூர்வ செயல்பாட்டுப் பிரிவினருள் சமமற்றவர்களை உச்சநீதி மன்றம் சமப்படுத்தியிருக்கிறது.  இந்த இடஒதுக்கீடு நியாயமற்றதாகும். இதன் காரணம், அடக்கு முறையிலான ஜாதி நடைமுறையில் இருந்து வரலாற்று ரீதியில் பயனடைந்து வரும்  சமூகங்களுக்கு மேலும் சலுகை தரும் விதத்தில், சமூகநீதி என்னும் கருத்தை அது திரித்து விடுவதேயாகும்.

1990ஆம் ஆண்டுகளில் மண்டல் ஆணையத் தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்போது, நாடு முழுவதிலும் இருந்த அரசியல்வாதிகள் அதனை எதிர்த்தனர். வலதுசாரிகள் ரத யாத் திரையை அறிவித்து, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் கவனத்தை மண்டல் கேள்வியில்  இருந்து வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டனர். ராமர் கோயில் பாபர் மசூதி என்ற தங்களது மத செயல்திட்டத்திற்கு கீழ்ஜாதி மக்களின் கவ னத்தை ஈர்த்ததன்  மூலம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு நியாயமான அளவு பங்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தங்களது கோரிக்கையில் இருந்து இந்த சமூகங்களை அவர்கள் வெளியே தள்ளிவிட்டனர். மண்டல் ஆணையத்துக்கு எதிராக எழுந்த நாடு தழுவிய எதிர்ப்புக்கு நேர்மாறாக, இந்த உயர் ஜாதி ஏழை களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

முன்மாதிரியைப் பற்றி சிறிதும் அக்கறை காட்டாமல், இட ஒதுக்கீட்டில் உச்சநீதி மன்றம் விதித்த 50 சதவிகித உச்சவரம்பு இப்போது மாற்ற முடியாதது அல்ல என்றும் மீறமுடியாதது அல்ல என்றும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இது 50 சதவிகித உச்சவரம்பை உடைத்துவிட்டுச் செல்வதற்கான ஒரு வாய்ப்பு என்பதுடன் பெரியார் கண்ட மக்கள் தொகைக்கு ஏற்ற அளவிலான இடஒதுக்கீடு அளிப்பதற்கு வழி வகுக்கக் கூடும்.

நன்றி: 'தி இந்து' 13-11-2022 

தமிழில் : த.க.பாலகிருட்டிணன் 

No comments:

Post a Comment