காசி தமிழ்ச் சங்கமத்தின் புனிதத்துவம் இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

காசி தமிழ்ச் சங்கமத்தின் புனிதத்துவம் இதுதான்!

இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை காசி - தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு பிரதமரும் கலந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

இதில் 2500 பேர் இராமேசுவரம் - கோயம்புத்தூர் - சென்னையிலிருந்து இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியக் கலாச்சாரத்தை உலகிற்கே பறைசாற்ற இந்த ஏற்பாடாம்.

கைவினைகள், இலக்கியம், ஆன்மீகம், வர்த்தகம், ஆசிரியர்கள், பாரம்பரிய தொழில்கள், தொழில் முனைவோர், தொழில்கள், கோயில்கள், கிராமப்புறம், கலாச்சாரம் என்று 12 பிரிவுகளிலிருந்தும் பாடங்கள், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவாம்.

ஆன்மீகம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்ற பெயரில் ஹிந்து மத அடிப்படை வாதத்தைப் பயிற்றுவிப்பதுதான் இதன் நோக்கம். ஹிந்து மதத்தில் சார்வாகம் லோகாயுதம் எல்லாம் இருக்கின்றனவே  - அவற்றை எல்லாம் சொல்லிக் கொடுப்பார்களா?

காசிக்கு மட்டும் என்ன அப்படியொரு தனித்தன்மை புனிதம், வெங்காயம்?

கங்கை என்ற 'புனித' நதி ஓடுவதாலா? கங்கை உண்மையில் புனித நதிதானா?

கங்கை நதியின் மொத்த நீளம் 2525 கிலோ மீட்டர். இந்தப் புனித  நதியில் தான் காசி நகரத்தின் சாக்கடைகள் நாள்தோறும் சங்கமம் ஆகின்றன.

நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் காலன் சாக்கடை கலக்கிறது. நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு கங்கையில் வீசப்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 9000 கிழட்டுப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்படுகின்றன.

காசியில் இரண்டு லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  பட்டுத் தொழிலின் அத்துணை இரசாயனக் கழிவுகளும் கலப்பது இந்த கங்கை மாதா என்று கூறப்படும் ஆற்றில்தான். 

1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் புனித (?) கங்கை ஓடும் காசி நகரத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் தொற்று நோய் பயங்கரமாக வெடித்துக் கிளம்பி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்துத் தீர்த்தது.

இந்தியாவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் குழந்தைகள் மரணம் காசியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் தான் அதிகம். வாரணாசி என்று சொல்லப்படும் காசியில் ஓடும் புனித கங்கையில் காலையில் முழுக்கு - இரவில் மது, மாமிச விருந்து பற்றி விலாவாரியாக வரைந்து தள்ளியுள்ளது. 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' (19.6.2003)

உத்தரப்பிரதேச கோயில் நகரங்களில் 'எய்ட்ஸ்' நோய் அச்சுறுத்தல் அதிகம் என்று கூறுவது 'விடுதலை' அல்ல - டில்லி 'தி பயனீர்' (21.7.1997).

காசி கங்கைக் கரைக்கு இன்னொரு 'சிறப்பு அம்சம்' - அகோரிகள் எனப்படும் அகோர ஹிந்து சாமியார்கள் - மனிதர்களைக் கொன்று மனித மாமிசம் சாப்பிடுபவர்கள், பிணத்துடன் உடலுறவு கொள்பவர்கள்!

இந்தக் கலாச்சார கங்கையைச் சுத்திகரிக்கத்தான் 20 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி அழுகிறது ஒன்றிய அரசு. கங்கை நதிதான் புனிதமானதாயிற்றே - அதைச் சுத்திகரிப்பது என்பதே நாத்திக செயல் அல்லவா!

புரட்சிக் கவிஞரிடம் ஒருவர் காசியில் பிறக்க முக்தி - கயிலையில் இறக்க முக்தி - என்ற வரிகளை எழுதிக் கொடுத்து கடைசி வரியை முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். புரட்சிக் கவிஞரோ "என்னும் கூற்றில் இல்லை புத்தி" என்று முடித்துக் கொடுத்தார்.

விசுவநாதர் குடி கொண்டிருக்கும் அந்தக் காசி நகரத்தில் ஒரு நிகழ்ச்சி - அதை இப்பொழுது நினைத்தாலும் இரத்தம் கொதிக்கிறது.

பாபு ஜெகஜீவன் ராம் சுதந்திரப் போராட்ட வீரர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் எனப் பல்வேறு ஒன்றிய அமைச்சரவை பதவிகளை  வகித்தவர். மொராஜி தேசாய் பிரதமராக இருந்தபோது  துணைப் பிரதமராகவும் இருந்தவர்.

இந்தியாவின் இராணுவ அமைச்சராக இருந்த நிலையில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சம்பூர்ணானந்து சிலையைப் பாபு ஜெகஜீவன்ராம் திறந்தார். அப்போது மாணவர்கள் மற்றும் பார்ப்பனப் பேராசிரியர்கள் 'ஜெகஜீவன் சமார்' தாழ்த்தப்பட்ட ஜாதி என்று உச்சரித்து வெளியே போ என்று அவருக்கு முன்பாகவே முழக்கமிட்டனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் திறந்தார் என்பதால் அந்த உயர் ஜாதிக்காரரின் சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, அப்பல்கலைக் கழக பார்ப்பன மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள பார்ப்பனர்கள் கங்கை நீரைக் கொண்டு வந்து அந்தச் சிலையைக் கழுவினார்கள். 

In 1978, when Babu Jagjivan Ram, as a Deputy Prime Minister in 1978, had gone to unveil the statue of Sampurnanand, he was humiliated. "Jagjivan, chamar, go away," they said, washing the statue with Ganga jal.

(17-Aug-2022 'அவுட்லுக்' இந்தியா)

இதனை அறிந்த பாபு ஜெகஜீவன் ராம் மிகவும் மனம் நொந்து போனார்.

அந்த அவலம் நடந்த மறுநாள் பாபு ஜெகஜீவன் ராம் சென்னைக்கு வந்தார். மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த நிகழ்ச்சியில் தன் மனக்கொதிப்பைக் கொட்டினார். தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை - பெரியார் பிறந்த மண்ணில் என் உணர்வைத் தெரிவிக்காமல் வேறு எங்கு போய்த் தெரிவிப்பேன் - என்று கனல் தெறிக்கப் பேசினார்.

வாரணாசியில் தனது தந்தைக்கு தண்ணீர் கூடத் தரமுன்வரவில்லை என்று அவரது மகளும் மேனாள் மக்களவைத்தலைவருமான மீராகுமாரி 17.08.2022 அன்று சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

முப்படைகளை ஏவும் அதிகாரம் படைத்த பாதுகாப்புத் துறை அமைச்சருக்கே இந்த நிலை.

சக்கிலி எல்லாம் அமைச்சரவையில், உயர் ஜாதிக்காரரின் சிலையைத் திறந்தால் எங்கள் செருப்புகளை யார் தைப்பார்கள்? என்று பச்சையாகப் பார்ப்பனர்கள் ஏசினர் - பேசினர்.

அந்தப் புனித நகரில் தான் தமிழ்ச் சங்கமமாம். பல மொழிகளில் திருக்குறள் வெளியீடாம்.

திருவள்ளுவரின் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தத்துவம் எங்கே? பிறப்பிலேயே 'வருண - ஜாதி' பேதம் பேசும் இவர்களின் ஆன்மிகம் எங்கே?

தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகக் கால் ஊன்றிட இந்துத்துவச் 'சித்து' விளையாட்டு என்பதை தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாடு துல்லியமாக, சிந்தனை ரீதியாக உணர்ந்த மண்!

ஆன்மிகத்தை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்களாம் - அங்கே "அறிவியல்" என்ற தலைப்பு இடம் பெறவில்லையே ஏன்?

கடைசியாக ஒரு கேள்வி. திருவள்ளுவரையும் திருக்குறளையும் தூக்கிப் பிடிக்கும் கூட்டத்தைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி.

திருவள்ளுவர் சிலையை அரித்துவாரில் நிறுவுவதற்காக எடுத்துச் சென்றாரே தருண்விஜய் என்ற பிஜேபி பிரமுகர், அந்தத் திருவள்ளுவர் சிலை எந்தக் குப்பைமேட்டில் கிடக்கிறது - கூறுங்கள் காசி -தமிழ்ச் சங்கம சங்கிகளே!

No comments:

Post a Comment