10 விழுக்காடு இடஒதுக்கீடு யார் வயிற்றில் அறுத்து வைக்க? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

10 விழுக்காடு இடஒதுக்கீடு யார் வயிற்றில் அறுத்து வைக்க?

இடஒதுக்கீடு என்பதை முதன் முதல் உருவாக்கியதே பார்ப்பனர்கள்தான். இன்ன ஜாதியினருக்கு இன்ன தொழில் என்னும் மனுதர்மத்தை இன்று வரை கட்டி அழக் கூடியவர்கள் யார்?

வெள்ளையர் ஆட்சியில் பார்ப்பனர்கள் தாம் கல்வி, வேலை வாய்ப்பில் போட்டியில்லை என்கிற அளவுக்கு எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டனர். வெள்ளைக்காரனுக்கு ஜே! போட்டார்கள்.

இஸ்லாமியர்களும், மற்றவர்களும் பங்கு கேட்க ஆரம்பித்த நிலையில், கொஞ்சம் இடங்களைப் பெற்றுக் கொண்ட போது, வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை வரலாறு.

ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும். இப்படிக்கூட நடந்திருக்குமா என்ற அய்யப்பாடு கூட ஏற்படக் கூடும்.

ஆனால் ஆதாரத்தோடு சொன்னால் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

ஆந்திராவின் சில பகுதிகள் அடங்கிய சென்னை மாநிலத்தில், கடப்பை மாவட்டத்தில் டி. கிருஷ்ணராவ் என்ற பார்ப்பனர் ஒருவர் 'ஹுஸீர்சிராஸ்தார்' என்ற மாவட்ட ஆட்சியருக்கு இணையான பதவியில் இருந்தார்.

தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கடப்பை மாவட்டத்தில் மட்டும் 116 உறவினர்களுக்கு அரசுப் பணிகள் கிடைக்குமாறு செய்தார்.

கடப்பை மாவட்டத்தில்தான் இந்த நிலையென்றால்  அனந்தப்பூர் மாவட்டத்திலும் மூக்கை நுழைத்து, தனது உறவினர்கள் 108 பேர்களுக்கு அரசுப் பணிகள் கிடைக்கும்படிச் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஒரே ஒரு பார்ப்பனரல்லாத நீதிபதியாக இருந்தவர் சங்கரன்நாயர்.

திருமதி அன்னிபெசண்டு அம்மையாருக்கு நீதிபதி சங்கரன் நாயர் எழுதிய ஒரு கடிதத்தில் ('தி இந்து' 10.11.1911) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"அரசருக்கோ, ஆட்சிக்கோ கீழ்ப்படிந்து இருக்க வேண்டியது எப்போது என்றால், எதுவரை அவ்வரசர் அல்லது அவ்வாட்சி சாஸ்திர விரோதமாக நடக்காதிருக்கிறதோ, அதுவரைதான் - புரோகித வகுப்பார் மாத்திரமே பாஷ்ய கர்த்தாக்களாக இருக்க முடியும் என்ற ஒரு மதத்தின் (இந்து மதத்தின்) தயவில் அரச விசுவாசம் தொங்கிக் கொண்டிருப்பது - மிகவும் ஆபத்தான ஒன்றாகும் - என்று அந்தக் கடிதத்தில் நீதிபதி சங்கரன் நாயர் குறிப்பிட்டிருந்தார்.

இன்று வரை அதே நிலைதான். ஆச்சாரியார் (ராஜாஜி) ஆட்சியை விழுந்து விழுந்து ஆதரித்த பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர் காமராசரை கருப்புக் காக்கை என்று சாடவில்லையா?

இன்றைக்கு மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான ஆட்சி இடஒதுக்கீட்டை ஒழிக்கும் தந்திரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் ('நீட்', பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு போன்றவை)  கண்மூடித்தனமாக ஒன்றிய அரசை  பார்ப்பனர்கள் ஆதரிக்கும் காட்சியைக் கண் முன்னே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

இடஒதுக்கீடு ஏன் கொண்டு வரப்பட்டது? காலம் காலமாகப் பிறப்பின் அடிப்படையில் முத்திரை குத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவர்களை இத்துறைகளில் கை தூக்கிவிடக் கொண்டு வரப்பட்டதுதானே இடஒதுக்கீடு - அதுதானே சமூகநீதி என்கிறோம்.

75 ஆண்டு காலத்திற்குப் பிறகும் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா என்று வினா எழுப்புகிறார்கள். 75 ஆண்டு இடஒதுக்கீடு இருந்தும் இவர்களுக்கென்று சட்ட ரீதியாக அளிக்கப்பட்டுள்ள விழுக்காடு இடங்களைகூடக் கைப்பற்ற முடியவில்லையே!

அதுவும் ஒன்றிய அரசு துறைகளில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு 1992ஆம் ஆண்டிலும் - கல்வியில் இடஒதுக்கீடு 2006ஆம் ஆண்டிலிருந்து தானே கொண்டு வரப்பட்டது. 

உண்மை நிலை என்ன? 27 விழுக்காடு சட்டப்படி இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோர் 15 விழுக்காட்டைத் தாண்டவில்லையே. பட்டியலின மக்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய விழுக்காடு கிடைத்துள்ளதா?

இன்னும் கீழ் மட்ட நிலையில்தானே பேசிக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் 23 அய்.அய்.டி.கள் உள்ளன.

சென்னை அய்.அய்.டி.யில் மொத்தம் உள்ள பேராசிரியர் எண்ணிக்கை 596. 

பட்டியலின மக்கள் - 16 (2 புள்ளி 7 விழுக்காடு)

பழங்குடியின மக்கள் - 3 (0 புள்ளி 5 விழுக்காடு)

இதர பிற்படுத்தப்பட்டோர் 62 (10 புள்ளி 4 விழுக்காடு)

- தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளி விவரம் இவை.

('இந்துஸ்தான் டைம்ஸ்' 30.6.2021)

மக்களவை உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் (சி.பி.எம்.) நாடாளுமன்றத்தியீல எழுப்பிய வினாவுக்கு ஒன்றிய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியா தந்த அதிர்ச்சித் தகவல் இதோ:

முனைவர் பட்டக் கல்வியில் அனுமதிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஒபிஎஸ் மாணவர் எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவில் 23 அய்.அய்.டி.க்கள் உள்ளன. மொத்த  மாணவர்கள் 7,186. (2020ஆம் ஆண்டு)

இதில் இதர பிற்படுத்தப்பட்டோர் - 1635

பட்டியலின மக்கள் - 707

பழங்குடியினர் - 321

21 அய்.அய்.டி.களில் ஒரே ஒரு பழங்குடியின மாணவர்கூட இல்லை. எஞ்சியுள்ள 4523 இடங்கள் இவர்கள் கூறும் உயர் ஜாதியினர் தானே - அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் தானே.

இதுதானே யதார்த்த நிலை. இந்தச் சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடாம். யார் வயிற்றில் அறுத்துக் கட்ட இந்த ஏற்பாடு? எண்ணிப்பாரீர் - ஒடுக்கப்பட்ட மக்களே!


No comments:

Post a Comment