ஈரோட்டில் இது ஒரு 'இடு பொருள்' பயிர் விளைச்சல் 'இடது' என்ற முற்போக்கு காலாண்டிதழ் மூலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

ஈரோட்டில் இது ஒரு 'இடு பொருள்' பயிர் விளைச்சல் 'இடது' என்ற முற்போக்கு காலாண்டிதழ் மூலம்!

 ஈரோட்டில் இது ஒரு 'இடு பொருள்' பயிர் விளைச்சல்  'இடது' என்ற முற்போக்கு காலாண்டிதழ்  மூலம்! 

 கொங்கு நாட்டுப் பகுதியில் அந்நாள் முதலே மக்களது பேரன்பைப் பெற்றது பழையகோட்டை பட்டக்காரர் குடும்பம். அந்நாளில் கருஞ்சட்டை அணிந்த இளையபட்டக்காரரும் இணையற்ற திராவிடர் இயக்க கொள்கைக் கோமானும் ஆகிய தளபதி ந. அர்ச்சுனன் அவர்களின் நூற்றாண்டு விழா துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 14.10.2022 அன்று ஈரோட்டிற்குச் சென்றிருந்தேன்.

அப்போது காலையில் சந்தித்த பல முக்கிய நண்பர்கள், சான்றோர்கள் பலரில் தோழர் முற்போக்கு சிந்தனையாளர் மானமிகு ஈரோடு கண. குறிஞ்சி அவர்கள் சந்தித்து உரையாடியபோது, அவர்களது அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வரும் 'இடது' என்ற சமூக, அரசியல், கலை, இலக்கிய காலாண்டிதழ் என்ற கருத்துப் பேழைகள் மூன்றினை தந்தார்.

ஆகஸ்டு - அக்டோபர் 2022 காலாண்டு இதழ் 'இடது' - வ.உ.சி. ஆவணச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளதும் அவற்றில் ஒன்று.

அன்று சில மணி நேரம் தங்கியிருந்த இடத்தில் ஓய்வு கிட்டிய போதே, அந்த இதழ்களைப் புரட்டிப் படித்து மகிழ்ந்து, மாலை, தளபதி அர்ச்சுனன் அவர்களது நூற்றாண்டு விழா மேடையில் கண. குறிஞ்சி அவர்களை மீண்டும் சந்தித்தேன்.  அது மிகவும் சிறப்பான முறையில் - நல்ல கருத்தியல் இதழாக - அறிவுக்கு விருந்தளிக்கும் பல்வகை ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர் பெருமக்கள் பலரும் எழுதியிருப்பது, மற்ற இதழாளர்களிடம் காணாத புதுமையைப் பாய்ச்சிய இதழாக இது தனித்துவத்துடன் திகழ்கிறது. பாதுகாத்து வைக்க வசதியாக புத்தக வடிவமைப்புடன் அது அமைந்துள்ளது சிறப்பானது என்று பாராட்டி மகிழ்ந்தேன்.

விலை 100 ரூபாய் - 4 காலாண்டு இதழ்களுக்கு 400 ரூபாய் கட்டணம் - புரவலர் ரூ.1000 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோட்டிலும், பிற ஊர்களிலும் வாழும் முற்போக்கு சிந்தனையாளர்கள் - ஆதரவாளர்கள் பலர் தரும் நன்கொடைகளை வைத்து 'இந்த வெள்ளை யானையைக்' கட்டித் தீனி போட முன் வந்துள்ள துணிவுக்காக கண. குறிஞ்சியாரை மிகவும் பாராட்டியே ஆக வேண்டும்'.

நம் நாட்டில் ஏடு நடத்துவது என்பது பெரிய பெரிய சுமையாகும். அதற்குரிய பணம் தேடுதல், கட்டுரைகளைத் தேடுதல், உரியவர்களை ஒத்துழைக்கக் கண்டறிதல் என்பதெல்லாம் எளிதானதல்ல.

இந்த காலாண்டு இதழ் வ.உ.சி. 150 ஆண்டு ஆவணச் சிறப்பிதழாக - அவரது முகப்போவியம் தாங்கி வந்துள்ளது. முழுமையாகப் படித்தபோது, இதுவரை பலரும் அறியாத அரிய தகவல்கள், பல்சான்றோர்கள் ஆய்வுக் கட்டுரைகளாகவும், கவிதையாகவும் படைத்துள்ளனர்.

எல்லாக் கட்டுரைகளும் கருவூலத்தில் கருத்து பளு மிக்கவைகளாகவும், வ.உ.சி. பற்றி பலரும் அறிந்திராத அருமையான செய்திகள் - தகவல்களின் தொகுப்பாகவும் உள்ளன. வெறும் கப்பலோட்டிய தமிழராக மட்டுமே அவரை அறிந்திருக்கிற தலைமுறைக்கு,  அவரது தலைசிறந்த சமரசம் செய்து கொள்ளாத சமூகம் சார்ந்த புரட்சிகர சிந்தனைகள் - சமூக நீதிக்காக 1920லேயே திருநெல்வேலி மாநாட்டில் அவர் கொணர்ந்த வகுப்புரிமைத் தீர்மானம் பற்றிய வரலாறும் மூடநம்பிக்கைகளைத் தோலுரித்த தலை சிறந்த முற்போக்கு கொள்கைகளை - பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து நலம் காக்க, உரிமைப் போராளியாக குரல் கொடுத்திருப்பது -

இதுவரை கண்டிராத, கேட்டிராத ஒரு வைராக்கிய வீரர் வ.உ.சி.யை அவரின் கொள்கையுள்ளம் - துணிவு கொப்பளிக்கும் துல்லியமான முற்போக்கு - பகுத்தறிவு கொள்கை முழக்கம் பற்றிப் படிக்கையில் எவரையும் வியப்பின் எல்லைக்கே தள்ளி விடுகிறது.

கண. குறிஞ்சி அவர்களது கட்டுரை, 

ப. திருமாவேலனின் செறிவுள்ள - எப்படி பெரியார் வழியில் சுயமரியாதை சமூக நீதி - இறுதியில் களம் காணத் தயார் என்ற புதிய பல பயனுறு தகவல்கள் தரும் கட்டுரை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

அவற்றை நமது ஏடுகளில் - நாட்டில் மீள்பரப்ப வேண்டியதும் -  வ.உ.சி. அவர்களது 150ஆம் ஆண்டு விழாக் காலத்தில் பரப்ப வேண்டும்.

'இடது' இதழ் வளர பலரும் வாங்கிப் படிப்பதுடன் கருத்து வளத்தை செழுமைப்படுத்திட முன் வருதல் வேண்டும். அனைவருக்கும் நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டு - நல்ல ஏடுகள் நாடெங்கும் பரவ வேண்டும்.

No comments:

Post a Comment