தாய்ப்பாலில் நெகிழி நுண்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

தாய்ப்பாலில் நெகிழி நுண்துகள்

அண்டார்டிகா பனிக்கட்டியில் கண்டறியப் பட்ட நெகிழி நுண்துகள்கள், தற்போது தாய்ப்பாலிலும் இருப்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

உலகில் நெகிழி இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, எல்லா மூலை முடுக்கிலும் நெகிழி புகுந்துள்ளது. இந்நிலை யில், அப்பழுக்கற்ற தாய்ப்பாலிலும் நெகிழி நுண்துகள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

இத்தாலியின் ரோமில் குழந்தை பெற் றெடுத்து ஒரு வாரமான ஆரோக்கியமான தாய்மார்கள் 34 பேரிடம் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அவர்களின் தாய்ப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் 75 சதவீதம் பேரின் தாய்ப்பாலில் மிக நுண்ணிய நெகிழி துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

‘பாலிமர்ஸ் ஜர்னல்’ என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. ‘ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தாய்மார்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்களை உட்கொண்டவர்கள். நெகிழி டப்பாவில் அடைக்கப்பட்ட, ஊட்டச் சத்து துணை உணவுப் பொருட்களையும் உட்கொண்டுள்ளனர். ஆனால், இவைகளால் தான் அவர்களின் தாய்ப்பாலில் நெகிழி நுண் துகள் வந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,’ என ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

இந்த ஆய்வில் இடம் பெற்ற இத்தாலியின் பாலிடெக்னிகா பல்கலைக் கழக பேராசிரியர் வாலன்டினா கூறுகையில், ‘‘தாய்ப்பாலில் பிளாஸ் டிக் நுண்துகள்கள் இருப்பது குழந்தைகளை மிகவும் பாதிக்கக் கூடியதாகும். இதனால் எதிர்கால சந்ததி பற்றி கவலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நெகிழி நுண்துகள்களால் ஏற்படும் தீமைகளை விட தாய்ப்பாலில் அதிக நன்மைகள் உள்ளன. ஆகவே, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை எப்போதும் குறைக்கக் கூடாது,’’ என்றார்.

No comments:

Post a Comment