Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பதிலடிப் பக்கம்
October 17, 2022 • Viduthalai

இந்து என்ற தொகுப்பும், ஜாதி என்ற பிரிவினையும் 

அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூல் குறிப்பிடும் வழக்கை ஆராய்வோம்!


(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அது வழங்கப்பட்ட நாள் 1941 பிப்ரவரி 5. தீர்ப்பின் சாராம்சம்: Under Hindu law, a marriage between a Brahmin and a Sudra woman is not valid - ஒரு பார்ப்பனர் சூத்திரப் பெண்ணை மணப்பதை இந்து சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை.

உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிதானே இருந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்தானே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது எப்படி இது போன்ற ஜாதிப் பிரிவினையை ஆங்கிலேய அரசு அனுமதித்தது. ஒரே மதத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை அந்த மதம் அனுமதிக்காது என்றால் என்ன பொருள் என்று பல கேள்விகள் இதைப் படிக்கும் இளம் வயதினருக்கு ஏற்படலாம்.

இந்த வழக்கு நடந்து இரண்டு ஆண்டுகளில் வெளியான தனது ‘ஆரிய மாயை’ நூலில் அறிஞர் அண்ணா இந்த வழக்கைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் இப்படியான தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொண்டுள்ள பார்ப்பனர்கள், சூத்திர ஜாதியினரை மணப்பதே தவறு, அவர்கள் தாழ்ந்த குலத்தினர் என்று கூறிவிட்டு, ஆனால் அனைவரும் இந்துக்கள் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேட்கிறார்.

ஆரிய இனமும், திராவிட இனமும் கலந்துவிட்டன, அந்த வேற்றுமையை எல்லாம் இனி பேசக் கூடாது என்று கூறுபவர்கள், ஏன் இப்படி பிராமணரும், சூத்திரரும் மணப்பதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அவர்களே அனைவரும் இந்து என்று சொல்கிறார்கள். பின்னர்  நாங்கள் இரு பிறப்பாளர்கள், உயர்ந்தவர்கள், நீங்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இதை ஏன் பிராமணரல்லாதோரான திராவிடர்கள் ஏற்க வேண்டும் என்று கேட்கிறார்.  

அண்ணா

இன்றைக்கு அது போல ஒரு சட்டம் இல்லை. நடைமுறையில் ஜாதி மறுப்பு திருமணங்கள் குறைவாக இருந்தாலும், சட்டப்படி யாரும் யாரையும் மணக்கலாம் என்பது இப்போது குடி நபர்களுக்கான அடிப்படை உரிமை. ஜாதியோ, மதமோ இரண்டு குடி நபர்கள் மணப்பதைத் தடுக்க முடியாது. அதனால் இப்படி ஒரு சட்டம் இருந்ததையோ, இது போல அப்பட்டமான ஒரு ஜாதி வெறி தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் என்பதையோ நம்புவது கடினமாக இருக்கலாம்.

உள்ளபடி சொன்னால் சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உருவான பிறகும் இந்துக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான புதிய சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. சனாதனவாதிகள் பழைய தர்ம சாஸ்திரங்கள் மாற்றப்படுவதை விரும்பவில்லை. பாபா சாகேப் அம்பேத்கர் அதன் காரணமாகவே தன் சட்ட அமைச்சர் பதவியை உதறித் தள்ளினார்.

காங்கிரஸ் கட்சி முதல் பொதுத்தேர்தலில் 1952இல் வெற்றி பெற்று, நேரு மீண்டும் பொதுமக்கள் காங்கிரசுக்கு அளித்த அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமர் ஆன பிறகுதான் Hindu Personal Law  என்ற வகையில் நான்கு சட்டத் தொகுப்புகள்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டன.

ஆனாலும் 150 ஆண்டுகளாக கம்பெனி, காலனிய ஆட்சியில் இந்து தர்மசாஸ்திரங்களே சட்டமாக இருந்ததன் விளைவாக ஜாதி படி நிலை இறுகிப்போய், அகமணமுறை என்பது அகற்ற முடியாத ஒரு சமூக வழக்கமாக நிலைபெற்றுள்ளது.

எப்போது உருவாகியது பொதுவான இந்து அடையாளம்?

இந்து மதம் என்ற பொது அடையாளம் எப்போது உருவானது, எதன் அடிப்படையில் உருவானது, எந்த நோக்கத்திற்காக உருவானது என்ற கேள்விகளை எழுப்பும்போது பலரும் மன வருத்தம் அடைகிறார்கள். ஏன் மதம் தொடர்பான பிரச்சினைகளில் கேள்வி எழுப்ப வேண்டும்? இது பலருடைய நம்பிக்கையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறதே, அவர்கள் மனம் புண்படுமே என்று சொல்கிறார்கள்.

இந்திய நாடே இந்து ராஷ்டிரம்தான், இந்துக்களின் நாடுதான் என்று இந்துத்துவ அரசியல் செய்பவர்களோ தொடர்ந்து இந்திய முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுடன் பலவிதமான மோதல்களும், வன்முறையும் தோன்றுவதற்கு வகை செய்கிறார்கள். வெறுப்பரசியல் செய்கிறார்கள்.

திடீரென முஸ்லிம் பெண்கள் தலைக்கு முக்காடு அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது என்பார்கள், மாட்டுக்கறி சாப்பிடுகிறார் என்று யார் வீட்டிலாவது புகுந்து அடித்துக்கொல்லுவார்கள், மசூதிக்குள் இந்து கோயிலின் அடையாளங்கள் இருக்கின்றன என்று சொல்லி அதை இடிக்க வேண்டும் என்பார்கள். அதுவும் இல்லாவிட்டால் தீவிரவாதிகள் என்று சந்தேகம் என்று சொல்லி கும்பலாக கைது செய்வார்கள்.

இப்படி இந்துத்துவம் என்ற பெயரில் இந்திய மக்களை மத அடிப்படையில் பிரிக்கிறார்களே, அந்த இந்து என்ற அடையாளம் எப்படி உருவாகியது என்பதை விசாரித்தால், உடனே சில அப்பாவிகள், “அடடா, மத அடையாளத்தை கேள்விக்கு உள்ளாக்கலாமா?” என்று  நம் மீது வருத்தப்படுகிறார்கள்.

நாம் மக்கள் சிவனையோ, விஷ்ணுவையோ, வெங்கடாசலபதியையோ, முருகனையோ, மாரியம்மனையோ வழிபடுவதை கேள்வி கேட்கவில்லை. அவர்கள் பக்தியையோ, பரவசத்தையோ பழிக்கவில்லை. ஆன்மிக வாழ்வில் தலையிடவில்லை. ஆனால், அனைவரும் இந்துக்கள் என்று பொது அடையாளத்தில் அடைக்கப்பட்டது எதனால், எப்போது என்றுதான் கேட்கிறோம்.

ஆங்கிலேயர்களும், 

அய்ரோப்பியர்களும்

பதினேழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ஆங்கிலேயர்களுக்கும், அய்ரோப்பியர்களுக்கும் யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று நிறுவன ரீதியாக அடையாளம் காணக்கூடிய மதங்களைத்தான் தெரியும்.

கிறிஸ்துவர்களிடையே கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து சென்று பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் உருவாக்கிய பிரிவு புரொடெஸ்டண்ட் என்று அறியப்பட்டது. கத்தோலிக்க மதத்தை எதிர்க்கும் பல பிரிவுகள் தோன்றின. அவையெல்லாம் புரொடெஸ்டண்ட் பிரிவுகள் (கத்தோலிக்க எதிர்ப்பு கிறிஸ்துவ மதங்கள்) என்று பொதுவாக அறியப்பட்டன.  

நவீன அரசியல் சிந்தனைகளும் உருவாகிப் பெருகிய அதே காலகட்டத்தில், மக்களுக்கு அரசு மத ரீதியான சுதந்திரம் தருவது அவசியம் என்ற எண்ணம் உருவாகியது. அதுவே அரசின் மதச்சார்பின்மை குறித்த கருத்தாக்கமாக அமைந்தது. அதே சமயம் அரசர்கள் எதேச்சதிகாரமாக ஆட்சி செய்யாமல் சட்டங்களை தொகுத்து அதன்படி சுதந்திரமான நீதித்துறை மக்களிடையே எழும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றது.

அதன் காரணமாக மதச்சார்பற்ற அரசு குடிமக்களின் மத அடையாளங்களை அறிவதுடன், அவர்கள் வாழ்க்கை நெறிகள் அந்தந்த மத அடிப்படையில் அமைவதையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில்  ஒரு மதத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சினை ஏற்பட்டு வழக்கு, விசாரணை என்று வந்தால் சட்ட ரீதியாக அதை எப்படித் தீர்ப்பது என்பது அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  நவீன அரசு மதச்சார்பற்ற அரசு என்பதால் வழக்கில் தீர்ப்பு கூறும் உரிமையை மத அமைப்புகளுக்கு விட்டுவிட முடியாது.

இந்த நிலையில்தான் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டில் அய்ரோப்பியர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியர்களின் மத அடையாளத்தைப் புரிந்துகொள்ள விரும்பினார்கள். இஸ்லாம் குறித்து அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் முஸ்லிம்கள் பிரச்சினை இல்லை. ஆனால் இன்னொரு பெரிய ஜனத்திரள் ஏகப்பட்ட கடவுள்களை வழிபட்டுக்கொண்டு, பல்வேறு மொழிகளைப் பேசிக்கொண்டு, பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்துக்கொண்டு வாழ்வதைக் கண்டு குழப்பமடைந்தார்கள்.

அவர்கள் நல்வாய்ப்பாக, இந்தியாவின் ஒரு பண்டைய மொழி, சமஸ்கிருதம் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்துடன் மூலாதார தொடர்பினை கொண்டிருப்பதைக் கண்டார்கள். எளிமையாகச் சொன்னால் ஆங்கிலம் மதர் என்றால் இவர்கள் மாதா என்று சொல்கிறார்கள். ஆங்கிலம் ஃபாதர் என்றால் இவர்கள் பிதா என்கிறார்கள்.  (தமிழில் அம்மா, அப்பா அதுபோல இருந்தாலும்; தந்தை, தாய் முற்றிலும் வேறு வேர்ச்சொற்களாக இருப்பதைக் காணலாம்).

இந்த சமஸ்கிருத மொழியில் இருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், புராணங்கள், சுமிருதிகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை எழுதிப் பயின்ற பார்ப்பனர்கள் இந்தியாவின் பல பகுதியிலும் குடியேறியதன் பலனாக பரவலாக அறியப்பட்டிருப்பதை கண்டார்கள்.

எட்டாம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை ஹிண்ட் என்றும், அராபிய மொழியில் அல்-ஹிண்ட் என்றும் கூறியதன் தொடர்ச்சியாக இந்த சமஸ்கிருத நூல்களைப் பயின்று பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்றும், இவர்கள் மதம் ஹிண்டுயிசம் என்றும் முடிவு செய்தார்கள்.

ஹிண்டுயிசம் குறித்து நிறைய நூல்களை எழுதி, சமஸ்கிருத நூல்களை மொழியாக்கம் செய்து அய்ரோப்பிய பல்கலைக்கழகங்களில் பாடம் எடுக்க தொடங்கினார்கள். இந்து தர்மசாஸ்திரங்களை, சுமிருதிகளை மொழியாக்கம் செய்தார்கள். ஆங்கிலம் கற்ற பார்ப்பனர்களையும் மொழியாக்கம் செய்யச் சொன்னார்கள்.

அங்கேதான் ஒரு முக்கிய பயன்பாடு உருவாகிறது. அது என்னவென்றால் இந்த தர்ம சாஸ்திர மொழியாக்கங்களை இந்துக்கள் என அவர்கள் அடையாளப்படுத்திய அனைத்து மக்கள் தொடர்பான வழக்குகளிலும் தீர்ப்பு சொல்ல ஆதாரங்களாக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

விதிமுறையும், நடைமுறையும்

விதிமுறைகள் இரண்டு வகையானவை. வியாபாரம், கொடுக்கல், வாங்கல், வணிக, தொழில் தகராறுகள், வரி, வட்டி ஆகிய பொது விவகாரங்களில் அரசாங்கத்தின் சட்டங்கள்தான் விதிமுறைகள். தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம், விவாகரத்து, பரம்பரை சொத்தை பகிர்தல், வாரிசு உரிமைகள், குடும்ப உறவு சிக்கல்கள், மத வழிபாடு, கோயில் நிர்வாக பிரச்சினைகள் ஆகியவையெல்லாம் அந்தந்த பகுதியிலுள்ள பழக்க வழக்கங்கள் படிதான் தீர்த்து வைக்கப்படும் என்பது அக்கால வழக்கம்.

பலகாலமாக பிரச்சினைகளை உள்ளூர் பஞ்சாயத்துக்களோ, மதகுருமார்களோ, மடாதிபதிகளோ விசாரித்து தீர்ப்பு சொல்வார்கள். சில பிரச்சினைகள் அரசர் வரை செல்லக்கூடும். அதில் எல்லாமே அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கத்தான், உள்ளூர் நடைமுறைக்கு ஏற்பத்தான் தீர்ப்பு வழங்கப்படும் எனலாம். இது எதேச்சதிகாரம், முறையான நீதியல்ல என்று கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் நினைத்தார்கள்.  

அதனால் ஆங்கிலேயர்கள் கம்பெனி ஆட்சிப் பகுதிகளிலேயே புதிய நீதிமன்ற நடைமுறைகளை அறிமுகப்படுத்த முனைந்தார்கள். அதன் பொருட்டே அவர்கள் இந்து என்ற பொது அடையாளத்தையும், இந்துக்களுக்கான சட்டங்களையும் கண்டறிவதில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்களுக்குக் கிடைத்த தர்ம சாஸ்திரங்கள், சுமிருதிகள் எல்லாவற்றையும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தும், சுருக்கி வரைந்தும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் விதிமுறை தெளிவாக இல்லாவிட்டால், நடைமுறை என்னவென்று விசாரித்து அதையே விதிமுறையாகக் கொள்வது வழக்கம். சில தீர்ப்புகள் வழங்கப்பட்ட பிறகு நடைமுறை விதிமுறை ஆகிவிடும். விதிமுறைக்கு மாறான நடைமுறைகள் செல்லாதவையாக மாறிவிடும்.

ஆரிய மாயை-வழக்கில் நடந்தது என்ன?

ஜானகி ராமமூர்த்தி என்று  நெல்லூரைச் சேர்ந்த பணக்கார பார்ப்பன ஜாதி வழக்குரைஞர், பள்ளி ஆசிரியையான நீலா வெங்கட சுப்பம்மா என்ற காபு ஜாதி பெண்ணை 6.9.1926 அன்று திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகனும், மகளும் பிறந்தனர். அவருக்கு ஏற்கனவே ஒரு பார்ப்பன பெண்ணுடனும் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அப்போது பலதார மண தடுப்புச் சட்டம் (bigamy act) இருக்கவில்லை.

அந்த வழக்குரைஞர் இறந்துபோனவுடன் நீலா வெங்கட சுப்பம்மா தனக்கும், குழந்தைகளுக்கும் பார்ப்பன மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு போடுகிறார். ஜில்லா கோர்ட்டில் நீதிபதி பார்ப்பனரல்லாதவர். அவர் மாதம் இருபது ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்கும்படி தீர்ப்பு வழங்குகிறார் (அந்த ஆண்டு தங்கம் விலை ஒரு சவரன் இருபத்தெட்டு ரூபாய்).

வழக்குரைஞரின் பார்ப்பன மனைவி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறார். சர்.ஏ.கிருஷ்ணசுவாமி அய்யர், எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் ஆகிய இருவரும் பார்ப்பன மனைவிக்காக வழக்காடுகிறார்கள். வழக்குரைஞர்கள் பி.வி.ராஜமன்னார், கே.சுப்பா ராவ் ஆகிய இருவர் காபு ஜாதி மனைவிக்காக வழக்காடுகிறார்கள்.

வழக்குரைஞர் ராஜமன்னார் பின்னாளில்  நீதிபதியாக விளங்கியதுடன், பல்வேறு உயர் பதவிகளையும் வகித்தவர். அவர்தான் 1969ஆம் ஆண்டு தி.மு.க அரசு நியமித்த ஒன்றிய- மாநில அரசு அதிகாரப் பகிர்வினை ஆராயும் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். அந்த குழுவின் பெயரே ராஜமன்னார் குழு என்பதுதான்.

பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். இரண்டு கேள்விகள்: பார்ப்பன வழக்குரைஞருக்கும், காபு ஜாதி பெண்ணுக்கும் திருமணம் நடந்ததா? அப்படி நடந்திருந்தால் அது சட்டப்படி செல்லுமா? சோமையா திருமணமே முறைப்படி நடக்கவில்லை; நடந்திருந்தாலும் செல்லாது என்று தீர்ப்பு கூறுகிறார். பாண்டுரங்கராவ், திருமணம் நடந்தது என்பது உண்மைதான், ஆனாலும் அது சாஸ்திரங்களின்படி செல்லாது என்று தீர்ப்பளிக்கிறார்.

பார்ப்பனரல்லாத பெண்ணுக்காக வழக்காடியவர்கள் அனுலோம திருமணங்கள் நடைமுறையில் இருந்திருப்பதை சுமிருதிகள் ஏற்றுக்கொள்வதை சுட்டிக்காட்டுகிறார்கள். அனுலோமம் என்றால் உயர்ஜாதி ஆண், தாழ்ந்த ஜாதி பெண்ணை மணப்பது.

பிரதிலோமம் என்றால் தாழ்ந்த ஜாதி ஆண், உயர் ஜாதி பெண்ணை மணப்பது; இது எந்தக் காலத்திலும் ஏற்கப்பட்டதில்லை. கடும் தண்டனைக்குரியது. இந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டி இந்தத் திருமணம் அனுலோமம்தானே; அதனால் ஏற்கலாம் என வாதிடுகிறார்கள்.

ஆனால் நீதிபதிகள் மனு சுமிருதி, யாக்ஞவல்க்ய சுமிருதி உள்ளிட்டவை அனுலோம திருமணங்கள் நடைமுறையில் இருப்பதை சொன்னாலும், அவற்றை கண்டிப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அவை நடைமுறையே தவிர விதிமுறை அல்ல. புராண காலத்தில் அவை அதிகமாக கண்டிக்கப்படுவதன் காரணமாக, கலியுகத்தில் இவ்வகையான திருமணங்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையே பல்வேறு சமஸ்கிருத சாஸ்திர நூல்கள் சொல்கின்றன என்பதை நிறுவுகிறார்கள்.

டி.கிருஷ்ணசாமி அய்யர்

உதாரணமாக டி.கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் 1869ஆம் ஆண்டு மொழியாக்கம் செய்த சுமிருதி சந்திரகா என்ற நூல் விவாதத்துக்கு வருகிறது. ராஜமன்னார் இந்த மொழியாக்கத்தில் பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

சமஸ்கிருத மூலத்தில் “இந்த நாளில் பின்பற்றப் படக்கூடாது” என்று சொல்வதை அய்யர் “பின்பற்றப்படுவதில்லை” என்று பிழையாக மொழியாக்கம் செய்துவிட்டார் என்கிறார். அதாவது விதிமுறையை  நடைமுறையாக மாற்றிவிட்டார் என்கிறார். நீதிபதியோ இதனால் அர்த்தம் பெரிதாக மாறுபடவில்லை என்று கூறிவிடுகிறார்.

சுருங்கச் சொன்னால் ஒரு காலத்தில் நடைமுறையாக இருந்தாலும், விதிமுறையாக இல்லை. பின்னாளில் நடைமுறையிலும் இல்லை. அதனால் அப்படிப்பட்ட திருமணம், அதாவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாத பெண்ணை திருமணம் செய்துகொள்வது நிகழ்ந்தாலும், கலியுகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்பதே தீர்ப்பு.

(வழக்கு குறித்த முழு விவரங்களையும், வாதங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணற்ற சுமிருதிகள், சமஸ்கிருத நூல்கள், அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் அறிந்துகொள்ள பார்க்க: Indian Law Reports, Madras Series, 1941; pages 989-1019)

இன்றைய நிலை என்ன?

தமிழ்நாட்டு பிராமணர் சங்கம் ஒன்றில் ஒரு பெரியவர் இளம் வயது ஆண்களையும், பெண்களையும் பிற ஜாதிகளில் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைக்கிறார். பிராமணர் சங்க ஏடுகளிலும் எழுதுகிறார்கள்.

கேட்டால் மற்ற ஜாதிகளும் அகமணமுறையைப் பின்பற்றுகிறார்களே என்று சொல்வார்கள். தர்ம சாஸ்திரங்களை எழுதி சட்டமாக்கியதே நீங்கள்தானே என்றால் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியாது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வர்ணம், ஜாதி எல்லாம் கடந்த கால பிழைகள். அதெல்லாம் இப்போது கிடையாது என்கிறார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின், இந்துத்துவத்தின் தீவிர ஆதரவாளர்களே மேலே சொன்ன பிராமண சங்கத்தினர்தான். யார் சொல்வதை நம்புவது?

இதற்கு நடுவில் சனாதன தர்மம் என்பது மிகவும் உயர்ந்தது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலரும் கூறுகிறார்கள். ஆனால் சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெளிவுபடுத்த மாட்டேன் என்கிறார்கள். வர்ண பாகுபாடு, பார்ப்பனர்களின் இரு பிறப்பாளர்கள் என்ற உயர்ந்த நிலை ஆகியவை சனாதன தர்மமா, இல்லையா?

குறைந்த பட்சமாக, இந்துக்கள் அனைவருமே இரு பிறப்பாளர்கள், அனைவரும் பூணூல் அணியலாம், அனைவரும் கருவறைக்குள் சென்று  பூஜை செய்யலாம் என்று அறிவிப்பார்களா?

அதையெல்லாம் செய்யாமல் இந்து என்பது பொது அடையாளம் என்று தொடர்ந்து சொன்னால் என்ன பொருள் என்று வியப்பாக இருக்கிறது. முஸ்லிம்களைத் தாக்குவதற்கு மட்டும் பொது அடையாளம் என்பது பாசிச அரசியலே தவிர ஆன்மிகமோ, மதமோ அல்ல.

கட்டுரையாளர்: ராஜன்குறை கிருஷ்ணன்

பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி. 

நன்றி: மின்னம்பலம் இணையம்


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn