தீட்சதர்களிடையே குழந்தைத் திருமணம் கிரிமினல் குற்றம்- கடும் நடவடிக்கைக்கு உட்பட்டதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

தீட்சதர்களிடையே குழந்தைத் திருமணம் கிரிமினல் குற்றம்- கடும் நடவடிக்கைக்கு உட்பட்டதே!

 சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தமானதல்ல!முறையாக வழக்கு நடத்தினால் மீண்டும் 

இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது!

சட்டப்படி சந்திக்காமல் தீட்சதர்கள் அடாவடித்தனமாக போராட்டம் நடத்துவதா?

சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தமானதல்ல - ஏற்கெனவே தீர்ப்பு இருக்கிறது - முறைப்படி வழக்கு நடத்தினால், இந்து அறநிலையத் துறையின்கீழ் வர வாய்ப்புண்டு. தீட்சதர்களிடையே குழந்தைத் திருமணம் நடப்பது கிரிமினல் குற்றமே - அதன்மீது நடவடிக்கை எடுத்தால் அடாவடித்தனமாக வீதிக்கு வந்து போராடுவதா? மீண்டும் அரசு கட்டுப்பாட்டுக்குக்கீழ் கொண்டுவர சட்ட நடவடிக்கை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கட்டியவர்கள், காலம் காலமாய் படியளப்போர் எல்லாம் தமிழ் மன் னர்கள் -நம் மக்கள்தான்.

கோவில் கட்ட எந்தப் பார்ப்பான் - எந்த உழைப்பைத் தந்தான் - பொருளைத் தந்தான்?

எந்தப் பார்ப்பனரும் - சிலை வடித்து, கோவிலில் சுவர் எடுத்து கருங்கல்லை அடுக்கியவர்கள் உள்பட எதையும் கட்டியவர்களோ, காசு செலவழித்தவர்களோ, உடலுழைப்புத் தந்தவர்களோ கிடையாது!

இவர்கள் தந்திரங்கள், இட்டுக்கட்டிய கற்பனைக் கதைகள்மூலம் ‘தில்லைவாழ் அந்தணன்' மூவாயிரம் என்று பிறகு தாமே தம் கூலிகளை விட்டுப் புராணம் எழுதி, ஏகபோக உடைமையாக்கி இன்றைக்கும் உடல் நோகாமல் சுரண்டி வாழும் கூட்டமாக  உள்ளார்கள் - சட்டத்தை சிறிதும் மதிக்காத சனாதனப் பாம்புகளும்  படமெடுத்தாடுகின்றன!

இந்த நடராஜன் கோவில் இவர்களுக்கே சொந்தம் என்று கூறப்பட்டதை மறுத்து 134 ஆண்டுக்குமுன்பே தீர்ப்புக் கூறப்பட்டது.

1887 இல் சபாநாயகர் ஆலயத்தில் தீட்சதர்களிடையே இரண்டு கட்சிகள் ஏற்பட்டன.

குத்தகை வசூல் செய்தல், சம்பந்தங்களுக்குச் சம்பள பட்டுவாடாச் செய்தல், கோவில் பழுது பார்த்தல், திருவிழா நடத்தல் ஆகியவற்றிற்கு செலவு செய்வதுபற்றி இரண்டு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டு, இவர்களுக்குள்ளே சண்டை முற்றி, கோர்ட்டுக்குப் போனார்கள்.

சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தமானதல்ல - முத்துசாமி அய்யர் தீர்ப்பு!

ஒரு கட்சி இன்னொரு கட்சியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டு, வழக்கை தென்னார்க் காடு மாவட்ட நீதிமன்றத்தில் - ஓ.எஸ்.எண்.7/1887 என்று வழக்குத் தாக்கல் செய்தார்கள்.

ஓ.எஸ். 7 டிக்கிரியின்மீது, மீண்டும் இரண்டு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.எஸ். எண் அப்பீல் 108, 159/1888 தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கினை ஜஸ்டீஸ் திருவாரூர் டி.முத்துசாமி அய்யர், ஜஸ்டீஸ் ஷெப்பர்டு (வெள்ளைக்காரர்) ஆகிய இருவரும் விசாரித்து தீர்ப்பு எழுதினர்.

‘‘முற்காலந்தொட்டே இத்திருக்கோவில் ஒரு பொது வழிபாட்டிற்குரிய இடமாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை; மேலும் இக்கோவிலானது தீட்சதர்களுக்குச் சொந்த சொத்து என்பதற்கு சிறு துளியளவுகூட ஆதாரம் கிடையாது'' என்றுதான் முத்துசாமி அய்யரே தீர்ப்பளித்தார்!

அதற்குப் பல ஆண்டுகளுக்குப்பின் 1951 இல் தீட்சதர்களுக்குச் சாதகமாக தீர்ப்புப் பெற்றனர் - சத்திய நாராயணராவ், ஜஸ்டீஸ் ராஜகோபாலன் ஆகியோர் மூலம் (இருவரும் பார்ப்பன நீதிபதிகள் - சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு தந்த இரு நீதிபதிகள்).

அதில்கூட சிதம்பரம் நடராஜன் கோவில் ஒரு பழைமை வாய்ந்த பொதுக் கோவில் என்பதையும் குறிப்பிட்டார்கள்.

தீட்சதர்கள் ஏதோ பிரம்மதேவனால் காசிக்கொடி படைக்கப்பட்ட ‘ஸ்பெஷல்' என்று கதை கட்டினார்கள்.

இதை மறுத்து பேராசிரியர் வில்சன் என்ற பிரபல ஆய்வாளர் இந்தப் புரட்டை அம்பலப்படுத்தி, இந்த தீட்சதர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதியில் வாழ்ந்த கன்னோஜ் பார்ப்பனர்களின் ஒரு (பார்ப்பனர்) பிரிவினர் என்பதை விளக்கியுள்ளார்.

தனியார் திருமணத்திற்கு 

வாடகைக்கு விடவில்லையா?

இந்தக் கோவிலை காலங்காலமாக இவர்கள் தங்களது ‘சொந்த இராஜ்யமாகவே' ஆக்கிக்கொண்டு, எந்தச் சட்டத்தையும் மதிக்காத மமதையாளர்களாக உள்ளனர்.

அங்கே நாள்தோறும் குழந்தை மணங்கள் ஏராளம் நடைபெறுகிறது; பல்வேறு சட்டமீறல்கள் நடைபெற்று வருகின்றன! சனாதனம் பேசும் இவர்கள், கோவிலை ஒரு தனியார் திருமணத்திற்கு வாடகைக்கு விட்டதாகப் புகார்கள் எழுந்தன - இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு - என்பதும் செய்தியாக உலா வந்துள்ளன!

குழந்தைத் திருமணம் கிரிமினல் நடவடிக்கைக்கு உட்பட்டதுதானே!

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறை யினர் குழந்தை மணங்களைத் தடுக்கவும், அதை மீறியதற்காக சட்டப்படி விசாரணைக்குத் தக்க ஆதாரங்களோடு நடத்தி வைத்தவர்கள் உள்பட தீட்சத குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினர் சென்றால், சட்டத்திற்குக் கட்டுப்பட மறுத்ததோடு, காவல்துறை அதிகாரிகளை கீழ்த்தரமாக ஒருமையில் வசைபாடி உள்ளது எவ்வகையில் நியாயம்?

இதற்கே தனி வழக்கு இவர்கள்மீது பதிவு செய்யப்படவேண்டும்.

அது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கைக்கு உகந்த குற்றம் அல்லவா?

உடனே தீட்சதர் வீட்டுப் பெண்மணிகள், வீதிக்கு வந்து அமர்ந்துகொண்டு ‘போர்-ஆட்டம்' நடத்தி யிருப்பது எவ்வகையில் சட்டத்திற்கு உள்பட்டது?

(7 ஆம் பக்கத்தில் முழு விவரம் வெளிவந்துள்ளது- காண்க).

நீதிமன்றத்தில் இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபித்து அல்லவா வெளியே வர முயலவேண்டும்; அதைச் செய்யவில்லை.

இந்த சிதம்பரம் கோவில் கணக்கு வழக்குகளில், ‘‘கோயிற்பூனைகளின்'' கொட்டமும், கொண்டாட்டமும் மிக அதிகம். இதற்கு ஒரு தனிக் கமிஷனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்யவேண்டியது அவசர அவசியமாகும்.

சிதம்பரம் கோவில் தீர்ப்பின்மீது 

மறுவழக்குத் தொடரப்படவேண்டும்!

முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வாய்ப்பளிக்கப்படாமல் இருந்தது போல் அல்லாமல், ஆதாரங்களைத் திரட்டி நடத்தப் பட்டால், 1888 இல் வழங்கப்பட்ட முத்துசாமி அய்யர், ஜஸ்டீஸ் ஷெப்பர்டு ஆகியோரின் தீர்ப்புப்படி, கோவில் மக்களின் சொத்தாகும். அரசின் அறநிலையப் பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்து நடைபெற்றால், ஊழல் பெருச்சாளிகளுக்கு இடம் இராது!

இதில், தமிழ்நாடு அரசு - இந்து அறநிலையத் துறை எவ்வித பூச்சாண்டிகளுக்கும் முகம் கொடுக்காமல், மேல் நடவடிக்கைகளை எடுத்தால், உண்மையான பக்தர்களும், சிதம்பரம்வாழ் பெருமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

17.10.2022

No comments:

Post a Comment