ஆ.இராசா மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய ‘பா.ஜ.க.வின் மாயமான்' மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

ஆ.இராசா மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய ‘பா.ஜ.க.வின் மாயமான்' மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, அக்.17 திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

 சென்னை பெரியார் திடலில் கடந்த மாதம் 6 ஆம்தேதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் தி.மு.க., துணைப் பொதுச்செயலாளரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா உரையாற்றினார். 

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, ‘‘ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்கச் சொன்னால் தான் அது சனா தனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை ‘விடுதலை'யும், ‘முரசொலி'யும், திராவிட முன்னேற்ற கழ கமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது'' என்றும், மனுதர்மத்தைக் குறிப்பிட்டு அதில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டி உரையாற்றி இருந்தார்.

இவரது உரை குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், "ஆ.இராசா வின் உரை மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற் படுத்தியுள்ளார். 

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஆ.இராசா மீது காவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.  

இந்த நிலையில் இன்று (17.10.2022) காலை இந்த வழக்கு விசாரணைக்கு  வந்தபொழுது, ஆ.இராசாமீதான புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லாததால், அது முடித்து வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சிவஞானம், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.

No comments:

Post a Comment