வாடாமலர்-மணக்கும் மலர்-கருத்து மலர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

வாடாமலர்-மணக்கும் மலர்-கருத்து மலர்

நம். சீனிவாசன்

நேற்றையத் தொடர்ச்சி

எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். ராஜ கோபாலாச் சாரியார் ஆட்சிக் காலத்தில் தந்தை பெரியார் போராட்டம் நடத்தி தன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்தார்.

காமராஜர் ஆட்சிக் காலத்தில், "பெரியார் சொல் கிறார் ; காமராஜர் செய்கிறார்" என்று பத்தி ரிகைகள் தலையங்கம் தீட்டும் அளவிற்குப் பெரியாரின் சிந்தனைகள் கல்வித் துறையில் செயல் வடிவம் பெற்றன. அண்ணா பெரியாரின் சீடராக இருந்தார். தம் ஆட்சியையே 'பெரியாருக்குக் காணிக்கை 'என சட்டமன்றத்தில் அறிவித்தார். அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் சென்னை ராஜ தானிக்கு 'தமிழ்நாடு' எனப் பெயர்ச் சூட்டல், சுயமரியா தைத் திருமணங்கள் செல்லும், 'இந்திக்கு இடமில்லை, இருமொழிக் கொள்கையே நடைமுறைப்படுத்தப் படும்' என்று பெரியாரின் கொள்கைகளைச் சட்ட மாக்கினார்.

கலைஞரின் ஆட்சிக் காலத்தில், பெண்களுக்குச் சொத்துரிமை, தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் முதலியன சட்டங்களாகின. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சாதனைகளாகும். தொடர்ச்சியாகத் தமிழகத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகள் சட்டங்களாகிவந்த வரலாற்றை தெளி வுற எடுத்துரைத்து 'இது பெரியார் மண்' என்பதை உறுதிப்படுத்துகின்ற முதலமைச்சரின் கட்டுரை வாசகர்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் திராவிட மாடலை மய்யமாகக் கொண்டு நான்கு கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நான்கு கட்டுரைகளையும் நுட்பமான ஆய்வு எனலாம். உயர் கல்வித் துறையில் திராவிட மாடல் , திராவிட மாடல் பொறியியல் கல்வியும் தொழில் வளர்ச்சியும் , திராவிட மாடல் மருத்துவக் கட்டமைப்பு, நோர்டிக் மாடலும் திராவிட மாடலும் - ஒரு பார்வை என்கின்ற தலைப்புகளில் கட்டுரைகள் பிரசுரமாகி யுள்ளன .ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து எழுதிய, ' உயர்கல்வித்துறையில் திராவிட மாடல் ' எனும் கட்டுரையில்,

All India Survey on Higher Education 2019 - 2021,Govt.of India, Ministry of Education, Dept.of Higher Education,New Delhi. 

வெளியிட்டுள்ள அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு ஒரு புள்ளி விவரத்தை தருகிறார். முனைவர் பட்ட (Ph.D..,) ஆராய்ச்சிப் படிப்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனைப் பெண்கள் பயில்கிறார்கள் என்பதே அப்புள்ளி விவரம். மகாராட்டிரம் 4861, கேரளா 5687, குஜராத் 3050 , தமிழ்நாட்டில் 14,832 . இந்தப் புள்ளிவிவரத்தைக் கொடுத்துவிட்டு இச் சாதனை நடைபெறுவதற்கு திராவிட மாடலே அடிப்படை என்று நிறுவுகிறார். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு கல்வி ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே கிடைத்தது. கல்வியை ஜனநாயகம் ஆக்க வேண்டும் என்று ஒரு குரல் பிரிட்டிஷ் மன்றத்தில் ஒலித்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பானகல் அரசர் என்று குறிப்பிட்டு விட்டு, கல்விப் பரவலுக்கு நீதிக் கட்சியின் பங்க ளிப்பை அதனைத் தொடர்ந்து திராவிட இயக்கங் களின் திட்டங்களை - சட்டங்களைப் பட்டியலிடுகிறார். உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பில் நிலவி வந்த பொருளாதார மற்றும் ஜாதிய வேறுபாடு எவ்வாறு நீங்கியது என்பதையும் விவரிக்கின்றார். தந்தை பெரியாரின் தொடர் போராட்டத்தினால் கிடைத்த முதல் சட்ட திருத்தம் அதனால் எல்லா சமூகத்த வருக்கும் கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பு இக்கட்டு ரையில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. 

ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த கபிலன் காமராஜ் எழுதிய , 'திராவிட மாடல் பொறியியல் கல்வியும் தொழில் வளர்ச்சியும் ' எனும் கட்டுரை பொறியியல் கல்வி எல்லோருக்கும் கிடைத்ததை, அதனால் அனைத்து சமூகத்தவர்களும் பலன் பெற்றதை, பெற்ற பலனுக்கு திராவிட இயக்கத்தின் திராவிட மாடல் அடிப்படையாகத் திகழ்ந்ததைச் சுட்டிக் காட்டுகின்றார். 1970 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி கிண்டி பொறியியல் கல்லூரி தமிழ் மன்ற விழாவிற்கு சென்ற தந்தை பெரியார் IBM1620 கணினி ஒன்று புதிதாக வாங்கப்பட்டிருந்ததைக் கேள்விப்பட்டு அங்கே சென்று அதைப் பார்த்து பொறியியல் பேராசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு அறிந்து கொண்ட தகவலும் இந்த கட்டுரையில் இடம் பெற்று இருக்கிறது. 

1984 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 12 மட்டுமே. ஆனால் இன்று தமிழ்நாட்டில் 584 பொறியியல் கல்லூரிகளும் 518 பாலிடெக்னிக்குகளும் இருக் கின்றன. இதனால் தமிழர்கள் பொறியியல் அறிவு பெற்றதும் அண்ணா கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையால் சிறப்பான ஆங்கில அறிவு பெற்றதும் அதனால் உலகம் முழுவதும் பொறியியல் நிறுவனங் களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஏராளமானோர் சாதனை படைத்திட திராவிட மாடல் அடிக்கல்லாய் அமைந்ததை இக்கட்டுரை தெளிவு படுத்துகின்றது. 

ஓமான் நாட்டைச் சார்ந்த மருத்து வர் சென் பாலன் எழுதிய, ' திராவிட மாடல் மருத்துவ கட்டமைப்பு ' எனும் கட்டுரை ஏராளமான செய்தி களை வாசகர்களுக்கு விருந்து படைக்கிறது.

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ வளர்ச் சியைப் படம்பிடிக்கிறது. அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளை விட தமிழ்நாட்டில் மருத்துவச் செலவு குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தி யாவில் மக்களின் சராசரி வயது 69.7 ஆகும். தமிழ் நாட்டில் மக்களின் சராசரி வயது 72.6 ஆக இருக்க உத்தரப்பிரதேசத்தில் 65.6 ஆக இருப்பதையும் இந்த கட்டுரை ஒப்பிட்டு காட்டுகின்றது . மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் மகப்பேறுகளுக்கு இந்தியாவில் 103 ஆக இருக்க தமிழ்நாட்டில் 58 ஆக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 167 ஆக இருப்பதையும் இக் கட்டுரை வெளிப்படுத்துகிறது. ஒரு வயதிற்கு குறை வான குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்பு களுக்கு இந்தியாவில் 30 ஆக இருக்க உத்தரப் பிரதேசத்தில் 

41 ஆக இருக்க தமிழ்நாட்டில் 15 என்பதும் மருத்துவமனை பிரசவங்கள் உத்தரப் பிரதே சத்தில் 67.8 ஆக இருக்க தமிழ்நாட்டின் 98.9 ஆக இருப்பது திராவிட சித்தாந்த தலைவர்கள் உருவாக் கிய திராவிட மாடல் மருத்துவ கட்டமைப்பே கார ணம் என்று இந்தக் கட்டுரையிலே நிறுவுகிறார். நோர்வே நாட்டைச் சேர்ந்த சேசாத்ரி தனசேகரன் எழுதிய, 'நோர்டிக் மாடலும் திராவிட மாடலும் - ஒரு பார்வை' எனும் கட்டுரையில் நோர்வே நாட்டில் பள்ளிகளில் கொடுக்கப்படும் மதிய உணவுத் திட்டத் திற்கு முன்னோடி நீதிக் கட்சி ஆட்சியே என்பதைப் பதிவு செய்திருக்கிறார்.

பிறந்தநாள் மலரில் திராவிடர் கழகத்தின் செயல வைத் தலைவர் சு. அறிவுக்கரசு எழுதிய, ' நாம் திரா விடர் ஏன், எப்படி?'என்ற கட்டுரை தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. கட்டுரை முழுமையிலும் கொள்கை ஒலிக்கிறது. சிலர் எழுப்பும் வினாக்களுக்கு விடை, சிலரின் அய்யங்களுக்கு விளக்கம் என கட்டுரை தூய நடையில் ஆற்றோட்டமாய் துள்ளிச் செல்கிறது.

அய்யா அறிவுக்கரசு சாட்சிக்கு அகநானூறை மட்டும் அழைக்கவில்லை. பி.வி.ஜகதீசஅய்யர், மனு ஸ்மிருதி, மகாபாரதத்தையும் அழைத்துக் கொள்கிறார்.

'திராவிட ' என்னும் பெயரில் வெளிவந்த ஏடுகள், இதழ்களின் பட்டியலைத் தருகிறார். வியப்பில் ஆழ்த் துகிறார். படித்துப் பாதுகாக்க வேண்டிய கட்டுரை.

பெரியார் பிறந்த நாள் மலரில் "திராவிடம் " சமஸ்கிருதமா? எனும் கட்டுரையைப் பேராசிரியர் ப.காளிமுத்து படைத் திருக்கிறார் பேராசிரியர் காளி முத்து பெரியாரியல் அறிஞர்; தமிழறிஞர்; மொழி பெயர்ப்பில் வல்லுநர்.

திராவிடம் என்பது தூய தமிழ்ச் சொல்லே என கட்டுரையில் நிறுவுகிறார். வரலாறு ,இலக்கியம், சொல்லா ராய்ச்சி என ஆழங்கால் பட்ட ஆய்வாக அமைந்திருக்கின்றது அவர்தம் கட்டுரை.

கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் எழுத்துலகின் ஜாம்ப வான். அவரைப் போல் உழைக்கவும் முடியாது; எழுத வும் முடியாது. பெரியாரியலுக்கு அவர் செய்திருக்கும் தொண்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். ப. திருமாவேலன் எழுதிய, ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?, இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? நூல்கள் காலத்தை வென்று நிலைக்கும் படைப்புகளாகும். 

தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில், 'பார்ப்பனர் எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தியது ஏன் ? எனும் கட்டுரையினை வடித்திருக்கிறார். ஒரு வினாவை எழுப்பிப், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, பொருத்தமான, சரியான, நுட்பமான விடைகளைப் பல்வேறு சான்றுகளுடன் தொகுத்து நிறுவுவது அறிஞர் ப.திருமாவேலனின்   படைப்பு முறையாகும்.

ப.திருமாவேலன், பெரியார் பிறந்தநாள் மலரில் செறிவான சிந்தனைகளை 8 பக்கங்களில் கொட்டிக் குவித்திருக்கிறார். தந்தை பெரியாரின் வரலாறு, இந்திய வரலாறு, காங்கிரஸ் வரலாறு, பார்ப்பனத் தலைவர்களின் வரலாறு, சமுதாய நிலைமை, பார்ப்பனர்களின் தன்மை இவற்றையெல்லாம் நுட்பமாக அறிந்திருந்தால் மட்டுமே இப்படி ஒரு கட்டுரையை படைக்க இயலும். நூறாண்டுகளுக்கு முன்னால் நிலவிய பார்ப்பன ஆதிக்கம், ஆதிக்கத்தை நிலை நிறுத்த பின்னப்பட்ட சதி வலைகள், எந்தக் கட்சியில் இருந்தாலும் பார்ப்பனர்களின் நலனுக் காகவே பாடுபடும் இனப் பற்று முதலியனவற்றை திருமாவேலனின் தூரிகை சித்திரம் தீட்டி உள்ளது. 

பார்ப்பனத் தலைவர்களாகிய ராஜகோபாலாச் சாரியார், வ.வே.சு.அய்யர், எஸ்.சீனிவாசய்யங்கார், சர்.சிவஸ்வாமி அய்யர், கே.சந்தானம், டி.ஆர்.இராமச் சந்திரய்யர், எம். கிருஷ்ணமாச்சாரியா முதலியவர்கள் குறித்து தந்தை பெரியாரின் கருத்தினை இக்கட்டு ரையில் பதிவு செய்ததோடு, பார்ப்பனப் பத்திரிகை களாகிய சுதேசமித்திரன், சுயராஜ்யா, இந்து இதழ்கள் குறித்தும் பெரியார் கூறிய கருத்துக்களை இக்கட்டு ரையில் காணலாம்.

ப.திருமாவேலன் திராவிடர் இயக்கத்துக்குக் கிடைத்த பெருஞ்சொத்து.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய,' சனாதனம் சாரைப் பாம்பல்ல; கட்டு விரியன்!' என்னும் கட்டுரை பெரியார் பிறந்த நாள் மலரை அலங்கரிக்கிறது. தற்சமயம் நாடெங்கும் விவாத பொருளாக மாறி இருக்கும் சனாதனம் என்பதைக் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு கட்டுரை தீட்டி இருக்கிறார் கவிஞர்.

ஆளுநர் நிகழ்த்திய உரையை அலசி ஆராய்ந்து இருக்கிறார் .காந்தியார் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக்காட்டி சனாதனம் என்ன என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.துக்ளக் இதழுக் குத் தக்க விடை தந்திருக்கிறார்.

பெரியார் பிறந்த நாள் மலரில், 'உரிமை பொதுவே' எனும் தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறார் பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி.

"பாலின பாகுபாடு கொண்டு எந்த உயிரினமும் ஏனைய உயிரினத்தை அடிமைப்படுத்துவது கிடை யாது" என்பதை எடுத்துரைத்து, மனித குலத்தில் மட்டும் ஆண் இனம் பெண்ணினத்தை அடிமைப் படுத்துவதை கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். பெண்ணடிமைத்தனம் உலகம் முழுவதும் நிலவுவ தையும் சுட்டிக்காட்டுகிறார்.

"உலகளாவிய பெண் விடுதலைக்கான மய்யக் குரல்" என்று தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமை யானாள் ? என்னும் நூலினை உயர்த்திப் பிடிக்கிறார். கல்வி மறுப்பு, சொத்துரிமை இன்மை, பணிக்கு அனுப் பாமை முதலியன பெண் அடிமைக்கு காரணங்கள் என்று பட்டியலிடுகிறார். பெண் கல்விக்குத் தந்தை பெரியார் போராடியதை எடுத்துரைத்து, வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு அய்ம்பது சதவிகிதம் வழங்கப்பட வேண்டும் என்ற பெரியாரின் முழக் கத்தை கட்டுரையில் வலியுறுத்தியிருக்கிறார். தந்தை பெரியார் மாநாடுகளில் நிறைவேற்றிய பெண்ணுரி மைத் தீர்மானங்கள் பிற்காலங்களில் சட்டங்களாக முகிழ்த்ததை பெருமையோடு பதிவு செய்திருக்கிறார்.

தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சுற்றுப் பயணமும், காணொலிக் கூட்டங்களும், எழுதிய அறிக்கைகளும் இடம் பெற்று இருக்கின்றன. பட்டியல் பிரமிப்பாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ஆசிரியர்  95 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். 26 காணொலிக் கூட்டங்களில் உரை நிகழ்த்தியிருக்கிறார். 213 அறிக்கைகள் எழுதி இருக்கிறார். வியப்பாக இருக்கிறது; மலைப்பாக இருக்கிறது; 89 வயதில் மின்னல் வேகச் செயல்பாடு. ஓய்வறியா உழைப்பு. தமிழர் தலைவரின் அறிக் கைகள் கொள்கை விளக்கங்கள் ஆகும். எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாகத் திகழும். பிறந்தநாள் மலரைப் பற்றி சுருக்கமாகச் சொல்வ தென்றால் தமிழர் தலைவர் குறிப்பிட்ட வாசகம்தான் நினைவிற்கு வருகிறது. இது கருத்து மலர்; திராவிட இயக்க வரலாற்றையும் அதன் எழுச்சியையும் விவரிக்கும் கல்வெட்டு ; சாதனையை வெளிப்படுத்தும் செப்பேடு. ஒவ்வொருவர் இல்லத்திலும் மலர் அலங்கரிக்கட்டும்; மலரின் கருத்துகள் உள்ளங்களில் நிலைக்கட்டும்.

No comments:

Post a Comment