தசரா ஊர்வலமா - தடாலடி தர்பாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

தசரா ஊர்வலமா - தடாலடி தர்பாரா?

கருநாடகா மாநிலத்தில் 500 ஆண்டுகள் பழைமையான மதரசாவில் ஹிந்துத்துவ கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கருநாடக மாநிலத்தில்  தசரா விழா ஊர்வலம் முக்கியமானது. இந்த ஊர்வலத்தில் புல்டோசர்களைக்கொண்டு சிறுபான்மையினரை மிரட்டும் விதமாக நடந்துள்ளனர். மேலும் உத்தரப்பிரதேச சாமியார் முதலமைச்சர் போன்று ஒருவர் வேடமணிந்து "இதோ புல்டோசருக்கு இனி வேலைவரும்" என்று கூறிக்கொண்டே செல்கிறார். அதாவது "உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பது போல் கருநாடகாவிலும் வீடுகளை இடிப்போம்" என்று மிரட்டும் வகையில் உரக்கக் கத்திக் கொண்டே செல்ல -  அவருடனே சிலர் பாதுகாப்பு அதிகாரிகளைப் போல் வேடமணிந்து துப்பாக்கிகளை ஏந்திச் சென்றனர்.

இந்த ஊர்வலம் சென்ற பாதையில் இஸ்லாமி யர்களின் இல்லங்கள் இருந்ததால் மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடல்!

இந்த நிலையில், அங்குள்ள பழைமையான இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்றில் நுழைந்த ஹிந்துத்துவ கும்பல், "ஜெய்சிறீராம், வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே!" என்று கூச்சல் போட்டபடி அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். அங்கு சிலைகளை வைத்து பூஜை செய்து பஜனைபாட ஆரம்பித்துவிட்டனர். பாதுகாப்பிற்கு நின்று கொண்டு இருந்த காவலர்களும் இவர்களின் நடவடிக்கையைத் தடுக்கவில்லை. 

இது நாடா, கொடிய விலங்குகள் உலவும் காடா என்று நினைக்கத் தோன்றுகிறதா - இல்லையா?

இந்தியாவின் பொருளாதார நிலை, இதற்கு மேல் சீரழிய முடியாது என்று சொல்லும் அளவுக்குக் கடும் வீழ்ச்சிப் பள்ளத்தில் தலைக்குப்புற வீழ்ந்து கிடக்கிறது.

பால் கறக்கும் காம்பை அறுப்பது போல, பெரும் வருவாய்  தரும் எல்.அய்.சி. போன்ற பொது நிறுவனங்களை விற்று கல்லாகட்டி அரசாங்கத்தை நடத்தும் அவல நிலை.

மக்கள் மத்தியில் புரட்சி வெடித்திடுமோ என்ற அச்சம் உலுக்கிட, அதனைத் திசை திருப்ப, ஹிந்து மதவாத வெறியைக் கிளப்பிவிட்டு, அதில் குளிர் காய நினைக்கின்றனர்.

இந்த வித்தைகள் வெகு நாளைக்கு நிலைக்கப் போவதில்லை! சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களிடையே சச்சரவுகளை உண்டாக் குவதை - சம்பந்தப்பட்ட ‘ஹிந்து' என்ற சொல்லப்பட்ட மக்கள் - வெகு சீக்கிரம் தாங்கள் பகடைக் காய்களாக உருட்டப்படுவதை உணர வேண்டும் - உணரத்தான் செய்வார்கள். அந்தக் கட்டத்தில்,  ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஆட்டம் போடும் சக்திகள் முகவரியின்றி மறைந்து விடும்! - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


No comments:

Post a Comment