சாலையோர நடைபாதைகள் ஆக்கிரமிப்பு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

சாலையோர நடைபாதைகள் ஆக்கிரமிப்பு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை, அக்.17 சென்னை மாநக ராட்சிக்கு உள்பட்ட என்.எஸ்.சி. போஸ் சாலை நடை பாதைகளில் ஆக்கிரமிப்புகளை  மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

ராயபுரம் மண்டலம் என்.எஸ்.சி. போஸ் சாலையோர நடைபாதைகளில் விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை  (16.10.2022) அகற்றப்பட்டன. இதேபோல், நடை பாதை களை ஆக்கிரமிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள நிரந்தர, தற்காலிகக் கடைகளை அகற்றுவதற்கு, தனி குழுக்கள் அமைத்து மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் தங்கள் மண்டலங்களில் ஆய்வு செய்து, காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ராயபுரம் மண்டலத்தில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருந்த 400 ஆக்கிரமிப்பு கடைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டன. மாநகராட்சியின் சார்பில் ஆக்கிரமிப்பாளர் களுக்கு மாற்று ஏற்பாடுகளும் வழங்கப் பட்டுள்ளன. இந் நிலையில், ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வருவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி சார்பில் காவல் துறையினர் முன்னிலையில், ராயபுரம் மண்டலம் என்.எஸ்.சி. போஸ் சாலையின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், மாநகராட்சியின் பாப் கட் இயந்திரங்கள், 2 லாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 20 பணியாளர்களும், 30 காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, எதிர்ப்பு தெரிவித்து போராடிய கடைக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அந்தச் சாலையில் நீண்ட தொலைவுக்கு நடைபாதைகளை ஆக்கிரமித்ருந்த 10 தள்ளுவண்டி கடைகள், 30 நிரந்தரக் கடைகள் அகற்றப்பட்டு, பறி முதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment