படித்தும் பாமரர்களா? நரபலி கொடுக்க திட்டமிட்ட போலீஸ் குடும்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

படித்தும் பாமரர்களா? நரபலி கொடுக்க திட்டமிட்ட போலீஸ் குடும்பம்

திருவண்ணாமலை, அக்.15 வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் பூஜை செய்த காவலர் குடும் பத்தினர் 6 பேர் பொக்லைன் எந்திரம் மூலம் கதவை உடைத்து மீட்கப் பட்டனர். 

 திருவண்ணாமலை மாவட்டம் தசராபேட்டை கிராமத்தைச் சேர்ந் தவர் தவமணி (வயது 55), நெசவுத் தொழிலாளி. இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாஜி ஆகிய 2 மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். கோமதியின் கணவர் அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ். இதில் பூபாலன் சென்னை தாம்பரத்தில் ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருகிறார். இவர்கள் 6 பேரும் கடந்த 3 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகப் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (14.10.2022) காலை முதல் கதவை திறக் காமல் மந்திரம் மட்டும் ஓதிக்கொண்டு இருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் ஆர்.ஜெகதீசன், காவலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து வீட்டுக் குள் இருந்தவர்களை வெளியே வரும் படி கூறினார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் மாந்திரீகம் செய்கிறோம். எங்கள் பூஜையை தடை செய்ய வேண் டாம். நீங்கள் வெளியே செல்லுங்கள் என குரல் கொடுத்தனர். சுமார் 5 மணி நேரம் போராடியும் அவர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர்.

நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் பொக்லைன் எந்திரம் வரவ ழைக்கப்பட்டு முன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த 6 பேரையும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டனர். அப் போது வெளியே வந்த அவர்கள், கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனால் மாந்திரீகம் மூலம் அவருக்கு பேய் விரட்டும் பூஜை நடத்தி வருவதாகவும் கூறினர். இந்த பூஜையை கோமதியின் கணவர் பிரகாஷ் செய்து வந்தார். மேலும் இதுசம்பந்தமாக   அவர்கள் நரபலி கொடுக்க இருந்த தாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் வீட்டில் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த பொம்மை உள்ளிட்ட பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டு தீயிட்டு கொளுத்தினர். மேலும் மீட்கப்பட்ட காவலர் உள்பட 6 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  


No comments:

Post a Comment