நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை சோதனை

சென்னை,அக்.18- தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற் கட்டமாக திருவல்லிக்கேணியில் நேற்று முன்தினம் (16.10.2022) தொடங்கியது. சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் முதல்முறையாக கண்கருவிழி சரிபார்ப்பு முறையில் பொதுவிநியோகத் திட்டப் பொருள்களை வழங்கும் முறையை தமிழ்நாடு உணவு வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருவல்லிக்கேணி நியாயவிலைக் கடைகளில் முதல் முறையாக நேற்று முன்தினம் (அக்.16) கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.

நியாய விலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியிருந்த நிலையில்,  அத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கருவிழி அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும். மேலும், பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறியிருந்தார்.

நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகையை வைத்து பொருள்களை வாங்கும் முறை உள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் விரல்ரேகை பதிவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால், நவீன முறையை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இது குறித்து அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது: 

வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத இனங்களில் கண் கருவிழியைச் சரிபார்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவது மராட்டிய மாநிலம், அசாம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல, தமிழ் நாட்டிலும் இந்த செயல்பாட்டைக் கொண்டு வரும் வகையில் முன்னோட்டமாக ஒரு ஊரகப் பகுதியிலும், ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும். தனிநபர் அடையாளம் உறுதி செய்யப்பட்டு, நியாயவிலைக் கடை களில் பொருள்கள் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.


No comments:

Post a Comment