திருவள்ளுவர் ‘‘ஆன்மிகவாதி''யா? ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்பு - காணொலி கருத்தரங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

திருவள்ளுவர் ‘‘ஆன்மிகவாதி''யா? ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்பு - காணொலி கருத்தரங்கம்!

- நமது சிறப்புச் செய்தியாளர் -

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ‘கடவுள்' என்ற சொல் உண்டா?

‘‘திருவள்ளுவர் பற்றிய ஆளுநரின் அறியாமை'' என்னும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலி கருத்தரங்கம் நேற்று (21.10.2022) மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

‘‘தமிழ்நாட்டிற்கு ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் எனக்குத் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகி றேன். திருக்குறளின் மொழி பெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு அர்த்தங்கள் நிறைந் துள்ளன.

திருக்குறள் நூலை பலரும் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். பக்தி தொடங்கி, அய்ந்து புலன்களை அடக்கி ஆளுதல் வரை ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் திருக்குறள் பேசுகிறது. வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே திருக்குறள் கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக கருதப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை.

இந்தப் பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் தொடங்கியது. குறிப்பாக, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். ஆதி பகவன் என்றால், முதன்மைக் கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஜி.யு.போப், இதற்கான அர்த்தத்தைப் புரிந்திருந் தாலும், ‘முதன்மைக் கடமை' (Primal Duty) என எழுதியுள்ளார்.

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. இந்தப் புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த நூலை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும்.

இந்தியா வளர்ந்துகொண்டுள்ளது. இந்தியா வரும் 2047 ஆம் ஆண்டு உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளரக் கூடாது. நாடு வளர வளர ஆன்மிகமும்  வளர வேண்டும். திருக்குறளுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதனை யாராலும் தடுக்க முடியாது. உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரவேண்டும்.

திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புத்த கங்களை நான் படித்தேன். ஆனால், திருக்குறளின் உண்மை நிலையை அந்தப் புத்தகங்கள் பேசவில்லை. திருக்குறள் புத்தகத்தை முழுமையாக மொழி பெயர்க்கவேண்டும்'' என்று கூறினார்.

ஆளுநரின் இந்தக் கூற்றின் அடிப்படையில்தான் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்கு வனார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோர் உரைக்குப்பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

‘‘திருக்குறளில் எந்த இடத்திலும் ‘ஆன்மிகம்‘ என்ற சொல்லோ, ‘கடவுள்' என்ற சொல்லோ, ‘மதம்' என்ற சொல்லோ பயன்படுத்தப்படவில்லை.

கடவுள் வாழ்த்து என்று முதல் அதிகாரத்துக்குப் பெயர் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அந்த பத்துக் குறள்களில் எந்த ஓர் இடத்திலும் ‘கடவுள்' என்ற சொல் கிடையாது.

இந்த நிலையில், திருக்குறள் ஆன்மிக நூல் என்று ஆளுநர் குறிப்பிட்டது எந்த அடிப்படையில்?

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் தன் ‘ஞானகங்கை' என்ற நூலில் (பஞ்ச் ஆஃப் தாட்ஸ்) திருக்குறள்பற்றிக் கூறும்போது, ‘‘இது ஒரு ஹிந்து நூல்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில், அவரின் சீடராகத் தம்மை வரித்துக் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள், திருக்குறளை ஆன்மிக நூல் என்று குறிப்பிட்டுள்ளார்'' என்ற ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கருத்து ஆழமானது - அர்த்தம் நிறைந்தது - ஆதாரமானதுமாகும்.

இந்து மதத்தின் அடிப்படை விதி ‘கர்ம வினை'யாகும் - விதி பலன் என்பதாகும். திருவள்ளுவரோ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர் (குறள் 620)

என்கிறார்.

ஊழ் அல்லது விதி என்பதை விடா முயற்சியால் வெல்லலாம் என்கிறார் திருவள்ளுவர். அப்படி என்றால், திருக்குறள் ஓர் ஆன்மிக நூல் என்பதன் ஆணிவேர் அறுந்து அடிபட்டுப் போகிறதே!

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் (குறள் 1062)

‘‘உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர் வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப்போல் எங்கும் அலைந்து கெடுவானாக'' என்பது இக்குறளின் பொருள் என்கிறார் டாக்டர் 

மு.வரதராசனார்.

கடவுளுக்கே ‘சாபம்' விடுகிற திருவள்ளுவர் எப்படி ஓர் ஆன்மிகவாதியாக இருக்க முடியும்?

ஆன்மிகம், சனாதனம் என்பது மாறாதது என்பது உண்மையானால், அந்த சனாதன மதத்தின் அடிநாதமாகிய பிறப்பால் வர்ணம் என்ற அடித்தளத்தை- ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்'' என்ற குறள்மூலம் அடித்து நொறுக்கித் தள்ளிவிட்டாரே திருவள்ளுவர்.

சனாதனம் - ஆன்மிகத்தில் முக்கிய மாகக் கூறப்படும் (அறம், பொருள், இன்பம், வீடு) - நம்பப்படும் வீடு பேறு (மோட்சம்) என்பதை தம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல், கூட்டி ஒதுக்கித் தள்ளிவிட்டாரே திருவள்ளுவர்.

‘‘வீடுபற்றிப் பேச பிராமணர்க்குத் தான் உரிமை உண்டு; திருவள்ளுவர் பிராமணர் அல்லாதார் என்பதால், வீடுபற்றிப் பேசவில்லை'' என்று வ.வே.சு.அய்யர் எழுதிய ‘‘The Kural or the Maxims of Thiruvalluvar (1916)  என்ற நூலில் குறிப்பிட்டுள்ளாரே!

இதன்மூலம் ஆன்மிகம் - சனாதனத்தைப்பற்றி திருவள்ளுவர் பாட வில்லை என்பதை வ.வே.சு.அய்யர் கட்டியம் கூறிய பின், ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறளை ஆன்மிக நூல் என்றோ, சனாதனத்தை வலியுறுத்தும் நூல் என்றோ எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்?

தமிழுக்கும், தமிழன் பண்பாட்டுக்கும் சம்பந்தமில்லாத - ஒருவரின் கூற்றுக்காகப் பதில் சொல்லவேண்டுமோ என்ற கேள்வி எழக் கூடும். ஆனாலும், அவர் ஆளுநர் என்ற இடத்தில் பேசுகிறாரே - அதற்காக பதில் எழுதவேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டுவிட்டது என்பதைத் தவிர, வேறு எந்த வெங்காயமும் கிடையாது.

No comments:

Post a Comment