பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

பிற இதழிலிருந்து...

ஹிந்தி ஆதிக்கம்

இணைப்பு மொழியாக ஆங்கிலமே தகுதியுள்ளது

மக்களவை மேனாள் செயலர் பி.டி.டி. ஆச்சாரியின் கட்டுரை

அலுவல் மொழிக்குழு அறிக்கையின் பதினோ ராவது தொகுதி, செப்டம்பர் 9, 2022 அன்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரையும் கேரள முதலமைச்ச ரையும் தவிர வேறு எந்த அரசியல் தலைவரும் அக்குழுவின் பரிந்துரைகளுக்கு மறுப்பு தெரி விக்கவில்லை.

சிறப்பு தகுதி

சில செய்தித்தாள்கள் வெளியிட்ட தகவல்களின் படி கீழ்கண்டவை முக்கியமான பரிந்துரைகளாகப் பார்க்கப்படுகின்றன:

1. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தி மொழியில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

2. கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIT); இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (IIM); ஒன்றிய அரசு சார்ந்த பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ஹிந்தி மொழி வாயிலாகவே கல்வி அளிக்கப்பட வேண்டும்.

3. ஹிந்தி மொழியைப் பரப்புவது அரசமைப்புச் சட்டப்படி மாநில அரசுகளின் கடமையாக இருக்க வேண்டும்.

4. அலுவல் மொழி விதி - 1963, பிரிவு 4-இன்படி, அலுவல் மொழிக்குழு சட்டபூர்வமாக அமைக்கப் பட்ட ஒன்றாகும். ஹிந்தி மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வது அக்குழுவின் கடமை. ஒன்றிய அரசின் அலுவல் களுக்குப் பயன்படும் வகையில் ஹிந்தி மொழி வளர்ச்சியடைந்துள்ளதா என்பதைக் கண்டறிந்து இதுபற்றிய அறிக்கை ஒன்றை குடியரசுத் தலைவரிடம் இந்தக்குழு ஒப்படைக்க வேண்டும்.

முழுஅறிக்கை சார்ந்தோ அல்லது அதன் எந்த ஒரு பகுதியைச் சார்ந்தோ தக்கபடி உத்தரவுகள் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு பிரிவு எண் 4(4)இன் படி அதிகாரம் உள்ளது. அலுவல் மொழிக் குழுவின் பரிந்துரைகளுக் கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படவேண்டும்.

அலுவல் மொழிக்கொள்கை பற்றிய புரிதல் இந்தியாவில் ஏற்பட வேண்டியது அவசியம். எனவே, அக்குழுவிற்கு சிறப்பு தகுதி அளிக்கப்பட வேண்டும் என்கிறது அறிக்கை. குழுவின் பரிந்துரைகள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது “பிரிவு எண் 4(4)இன் கீழ் தக்கபடி உத்தரவுகள் பிறப்பிக்க” என்கிற குறிப்பின் மூலம் தெளிவாகிறது.

அரசமைப்புச் சட்டவிதி 343இன் படி ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்துகள் கொண்ட ஹிந்தி மொழி இருக்க வேண்டும். அலுவல் மொழி குறித்து அரசமைப்புச் சபையில் காரசாரமான விவாதம் நடந்தது எல்லோருக்கும் தெரியும். மாறு பட்ட கருத்துகள் கொண்ட பல தலைவர்களுக் கிடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே அரச மைப்புச் சட்டத்தில் ‘அலுவல் மொழி’ அத்தியாயமே இறுதி வடிவம் அடைந்தது. முடிவில், ஒன்றிய அரசின் அலுவல்மொழி ஹிந்தி என்று அறிவிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நாளிலிருந்து பதினைந்து ஆண்டு காலத்திற்கு ஆங்கிலம் நீடிக்கும் என்றும் சேர்க்கப்பட்டது. தேவைப்பட்டால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலம் நீடிக்க நாடாளுமன்றம் சட்டப்படி வழி வகுத்துக்கொள்ளலாம் என்றும் இணைக்கப் பட்டது. அதன்படி, 1963 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் சட்டப்படி வழிவகுத்துக்கொள்ளலாம் என்றும் இணைக்கப்பட்டது. அதன்படி, 1963 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் அலுவல் மொழி சட்டத்தை அறிமுகப்படுத்திற்று. நாடாளுமன்றப் பணிகளுக்கும், ஒன்றிய அரசின் அலுவல்களுக்கும் ஹிந்தியுடன் ஆங்கிலமும் காலவரையறையின்றித் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அலுவல் மொழிக்குழுவின் இப்போதைய பரிந்துரைகள் குடியரசுத் தலைவருக்குப் பிரச்சினை ஏற்படுத்தும். மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், அய்.அய்.டி; அய்.அய்.எம். போன்ற கல்வி நிறுவ னங்களிலும் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தியில் தான் கல்வி வழங்கப்பட வேண்டும் என்கிறது குழு. ஹிந்தி மொழிப் பயன்பாட்டின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து குடியரசுத் தலைவரிடம் அறிக்கை அளிப்பது மட்டுமே இக்குழுவின் பணி. பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் எந்த மொழியில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யும் உரிமை அக்குழுவிற்கு இல்லை. பயிற்றுமொழி குறித்து பரிந்துரை செய்யவும் அதற்கு அதிகாரம் இல்லை. 

மேலும், ஹிந்தியுடன் ஆங்கிலமும் பயிற்று மொழியாக நீடிக்கும் என்று சட்டபூர்வமாக நாடாளு மன்றம் அறிவித்துவிட்டபின், அதே சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மற்றொரு குழுவிற்கு ஆங்கில நீட்டிப்பைத் தடுக்க உரிமையில்லை. அது நிச்சயமாக ஒரு முறைகேடு. முரண்பாடானதும்கூட.

ஹிந்தி மொழி அல்லாத 

மாநிலங்களின் எதிர்ப்பு

1960 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நாட்டின் தென் மாநிலங்களில் இந்த மொழிப் பிரச்சினையால் உணர்ச்சிகரமான போராட்டங்கள் நிகழ்ந்தது வரலாற்று உண்மை. வன்முறை வெடித்தது. எதிர்ப்புகள் வலுத்தன. பலர் தீக்குளித்து உயிரிழந்ததும் நடந்தது. அவற்றுக்கெல்லாம் காரணம், அன்றைய ஒன்றிய அரசு ஆங்கிலத்தை அறவே தவிர்த்து ஹிந்தியை அதற்கு மாற்றாகத் திணிக்க முயன்றதுதான்.

நாட்டின் தென்மாவட்டங்களில் வாழும் மக்களின் அதிருப்தியைப் போக்கவும் போராட்டங்களுக்கு முடிவு கட்டவும். ஆங்கிலம் தொடரும் என்று நாடாளுமன்றம் அறிவிக்க நேர்ந்தது. கால வரையறையின்றி ஆங்கிலம் தொடரும் என்ற உறுதி மொழி போராட்டத் தீயை அணைத்தது.

மொழிப் பிரச்சினையால் மக்கள் எளிதில் உணர்ச்சிவயப்பட்டு கொந்தளிப்படைவார்கள் என்பதையும் அதனால் மக்களிடையே பிளவுகள் ஏற்பட்டு ஒற்றுமை குலையும் என்பதையும் உணர்ந்து கொள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவை யில்லையே!

ஒரு குறிப்பிட்ட மக்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புகிறார்களா இல்லையா என்பதல்ல கேள்வி. மொழிப்பிரச்சினை என்பதே சிக்கலான ஒரு விவகாரம். எளிதில் தீர்வு காணமுடியாத பல குழப் பங்களும் எழக்கூடும். உதாரணமாகச் சொல்வ தென்றால், ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தி என்றாகிவிட்டால் அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற அரசுப் பணிகளுக்கான தேர்வுகளும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் நிலை தான் ஏற்படும்.

ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் களோடு ஒப்பிடுகையில் ஹிந்தி மொழி பேசாத மக்கள் வாழும் மாநிலத்து மாணவர்கள், முக்கியமாக தென்மாவட்டத் தேர்வாளர்கள் பெருமளவில் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதன்விளைவு என்ன ஆகும்? அகில இந்திய நிருவாகப் பணிகளில் (அய்ஏஎஸ்/அய்பிஎஸ் போன்றவைகளில்) ஹிந்தி மொழி புழங்காத மாநிலத்துப் பணியாளர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே போகும். காலப்போக்கில் அவர்கள் எவருமே இந்திய அரசின் நிருவாகப் பணிகளில் இல்லாத நிலையும் ஏற்படக்கூடும். அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் அப்படியொரு பிரச்சினை உருவாகக்கூடும் என்பதை உணர்ந்தே இருந்தார்கள். எனவே 344(3) என்னும் பிரிவு முன்யோசனையுடன் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு சொல்வது என்ன?

மாறிவரும் உலகிற்கு ஆங்கிலப் பயன்பாடு அவசியம்

“பொதுப்பணித் தேர்வு விஷயங்களில், ஹிந்தி மொழி புழங்காத மாநிலத்து மக்களின் நியாயமான கோரிக்கைகள், விருப்பங்கள் என்னவென்று அறிந்து அவற்றுக்குரிய அக்கறை செலுத்தப்பட வேண்டும்” -என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது  344(3) என்னும் பிரிவு.

இந்தியாவில் இரண்டு பிரதான மொழிக் குடும் பங்கள், பிரிவுகள் உள்ளன. இந்தோ- அய்ரோப்பிய மொழிப் பிரிவு ஒன்று; மற்றொன்று, திராவிட மொழிப்பிரிவு. ஹிந்தி முதல் பிரிவைச் சார்ந்த மொழி. சமஸ்கிருதத்தைக் காட்டிலும் மிகப் பழைமையான தமிழ் மொழி இரண்டாவது பிரிவைச் சார்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற எல்லா பிரதான திராவிடப் பிரிவு மொழிகளும் செழிப்பான இலக்கிய வளம் கொண்டவை. இருப்பினும் வடமாநி லங்களையும்  தென்மாநிலங்களையும் இணைத்த மொழி ஆங்கிலம்.

அரசமைப்புச் சட்ட விவாதச் சபையில் மவுலானா ஆஜாத் கூறினார்-

“மொழியைப் பொறுத்தவரை வடக்கும் தெற்கும் இரு வெவ்வேறு பகுதிகள். இரண்டும் இணைவது ஆங்கில மொழியால்தான் சாத்தியமாயிற்று. இன்று நாம் ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிட்டால் மொழி சார்ந்த இந்த நல்லுறவு சிதைந்துவிடும்” -என்று

நம் நாட்டில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம் ஹிந்தி - உருது மொழிகளின் கலப்பான ஹிந்துஸ்தானி மொழியை ஆதரித்துப் பரப்பியது. இந்தப் போராட்டக் காலக்கட்டம்தான் ஒன்றியத்திற்கு ஒரே அலுவல்மொழி என்ற எண்ணத்திற்கு வழி வகுத்தது. பின்னர் அரசமைப்புச் சட்டம் உருவானபோது ஹிந்துஸ்தானி மொழி கைவிடப்பட்டது. ஹிந்தியும் தேவநாகரி முறை எழுத்துகளும் ஒரே அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இரண்டு வெவ்வேறு மொழிப்பிரிவுகள் புழங்கும் ஒரு நாட்டில், ஒரே அலுவல் மொழி என்று ஒன்றை அறிவிப்பதால் மக்களின் ஒற்றுமை சீர்குலையும் அபாயம் தானே ஏற்படும்? அகில இந்திய நிருவாகப் பணிகளிலும் ஒன்றிய அரசுப் பணியாளர்கள் நியமனங்களிலும் மாநில வாரியான பிரதிநிதித்துவம் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்காமல், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு நாளடைவில் ஏற்படக்கூடும். ஒரு குறிப்பிட்ட மொழிதான் ஒரே அலுவல் மொழி என்றாகிவிட்டால் மோசமான விளைவுகள் நிச்சயம் ஏற்படும்.

புதுடில்லியில் யார் ஒன்றிய அரசை அமைக்கப் போகிறார்கள் என்பதை தென்னிந்திய மாநிலங்கள் முடிவு செய்ய முடியாது. ஒன்றிய அரசின் தீர்மானங் களும் தென்மாநிலங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்க வாய்ப்பில்லை. எனவே, தென்னிந்திய மாநில மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, மொழிப் பிரச்சினையில் அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அவர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் அதிகாரத்தில் இருப்பவர்கள். தென் மாநில மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

ஹந்தி எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய அழகான மொழிதான். ஒன்றியத்தின் அலுவல் மொழி என்ற தகுதி அதற்கு அளிக்கப்பட்டதும் தவறல்ல. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் ஹிந்தியுடன் சேர்ந்து ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடர்ந்து நீடிக்கும் வகையில் அதை வடிவமைத்துள் ளார்கள். ஆங்கில மொழியின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்தத் தலைவர்கள் நாடாளுமன்றத் திடமே விட்டு விட்டார்கள். சட்டப்பூர்வமான நடவடிக்கை மூலம் நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஆங்கிலம் நீடிக்கும் என்று முடிவு செய்து அறிவித்தது.

அரசமைப்புச் சட்ட விவாதச் சபை என்று எடுத்த முடிவுகள் சுதந்திரப் போராட்டங்களின் பாதிப்பே ஆகும். அந்தப் போராட்டங்களால் கிளர்ந் தெழுந்த தேசிய உணர்வும் நாட்டுப் பற்றும் ஏற்படுத்திய தாக்கம் சபையின் அன்றைய முடிவுகள். தேசிய மொழியின் அவசியத்தை காந்தி வலியுறுத்தியதும் ஒரு காரணம். அந்த மனநிலை காலப்போக்கில், இந்தியா மற்ற உலக நாடுகளுடன் கொண்ட தொடர்புகளால் மாற்றம் கண்டது. எனவே, 1960 ஆம் ஆண்டின் காலக்கட்டத்தில் அரசியல் வர்க்கம் ஆங்கிலம் இன்றியமையாத மொழி என்பதை உணரத் தொடங்கியது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் சார்ந்த இன்னபிற படிப்புகளுக்கும் துறைகளுக்கும் ஆங்கிலப் புலமை அவசியம் என்ற புரிதல் ஏற்படலாயிற்று. எனவே, ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கட்டும் என்று நாடாளுமன்றம் முடிவு செய்ததில் வியப்பில்லை.

அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்பதே தென்னிந்தியப் பொது மக்களின் பரவலான விருப்பம். கனடாவில் ஆங்கில மும் ஃபிரஞ்சும் அலுவல் மொழிகளாக இருப்பது போல் இந்திய ஒன்றியத்தில் இன்று ஹிந்தியும் ஆங்கிலமும் இரு அலுவல் மொழிகளாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில், மொழி சார்ந்த திட்டங்கள் வகுப்பவர்கள் ஹிந்தி, ஆங்கிலம் இரண்டுமே ஒன்றி யத்தின் அலுவல் மொழிகளாக நீடிக்க சட்டபூர்வமான வழியை வகுப்பது சிறப்பான தீர்வாக இருக்கும்.

நன்கு பரிசீலித்து சுமுகமான முடிவை சம்பந்தப் பட்ட அதிகாரிகள் எடுத்தால் நல்லது. அரசமைப்புச் சட்டமும் மதிக்கப்பட்டதாக நம்பிக்கை பிறக்கும்.

ஹிந்தி உள்பட எல்லா இந்திய மொழிகளையும் நேசிப்பவர்கள் நாம். நவீன அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் நம் இளைய தலைமுறையினர் அபார வளர்ச்சியடைந்து முன்னேறும் அளவுக்கு எல்லா மொழிகளும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமுமாகும். இதற்கான எல்லா முயற்சிகளையும் எல்லோரும் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டியது அவசியம்.

நம்மைச் சுற்றியுள்ள உலக நாடுகளையும் நன்கு புரிந்துகொள்ள ஆங்கிலம் உதவும். அறிவியல் வளர்ச் சிக்கும் ஆங்கிலம் தேவை. இதை நாம் மறந்து விடக் கூடாது. ஆங்கிலப் புலமை நம் அனைவரின் வளர்ச்சிக் கும் அதிவேக முன்னேற்றத்திற்கும் அவசியம்.

நன்றி: ‘The Hindu’

ஆங்கில நாளிதழ் 21.10.2022

மொழியாக்கம்: எம்.ஆர். மனோகர்

No comments:

Post a Comment