தமிழ்நாட்டையும் தாண்டி இந்தி எதிர்ப்புத் தீ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

தமிழ்நாட்டையும் தாண்டி இந்தி எதிர்ப்புத் தீ!

கொல்கத்தாவில் அண்ணா, கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்களை சுமந்து ஹிந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக போராடிய பொதுமக்களால் கொல்கத்தா நகரம் பரபரப்பை  எட்டியது.

ஹிந்தித் திணிப்பு முயற்சியை ஒன்றிய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகள் குழு, மத்திய கல்வி நிலையங்களில் ஹிந்தியை கட்டாயமாக்குவது குறித்து பரிந்துரைத்தது. 

ஹிந்தி மொழியை கட்டாயமாக்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திராவிடர் கழகம் ஹிந்தியை எதிர்க்கும் அடையாளமாக ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்தது  (30.4.2022)

இந்த நிலையில், ஹிந்தித் திணிப்புக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கண்டன பேரணி நடைபெற்றது.   Bangla Pokkho (எங்கள் மொழி வங்கமொழி) என்ற அமைப்பை உருவாக்கிய கார்கா சாட்டர்ஜி, அக்டோபர் 12 ஆம் தேதி கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் பேரணி ஒன்றை நடத்தினார், இதில் மேற்குவங்க மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ததகதா சத்பதி மற்றும் மேனாள் மேற்குவங்க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். வங்க மக்களும் ஹிந்திக்கு எதிரான பேரணியில் பெருமளவில் கலந்துகொண்டனர். 

ஊர்வலத்தின் இறுதியில் பேரணி ஒருங்கிணைப்பாளர் கர்ஜ் சாட்டர்ஜி கூறியதாவது; இந்த நாடு பல்வேறுபட்ட மொழி, கலாச்சாரம் போன்றவற்றால் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது, 

 இந்த வண்ணத்தை அழித்து ஒற்றை வண்ணத்தைப் பூசி அசிங்கமாக்க நினைக்கிறார்கள். ஒன்றிய அரசின் செயல்பாடுகளால் தற்போது நாட்டில் உறுதித்தன்மையற்ற  நிலை மற்றும் பொருளாதார சீரழிவு உள்ளிட்ட   பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை மறைக்க ஹிந்தி என்ற சாயத்தை அனைவர் மீதும் பூசி மக்களின் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். 

இது ஹிந்தியா அல்ல, இந்தியா என்பதை இந்த அரசுக்கு நாம் உணர்த்த வேண்டும்  ஆனால் அவர்களோ இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றத்துடிக்கின்றனர். 

ஹிந்துத்துவா என்ற 'பொம்மைக் குதிரை' (Trojan horse) உள்ளே ஒளிந்து கொண்டு ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஏவி விட்டுள்ளனர். ஹிந்தி பேசும் மாநிலங்களின் வளர்ச்சிக்காக ஹிந்தி பேசாத மாநிலங்களின் உழைப்பைக் கொண்டுபோய் கொட்டுகிறது ஒன்றிய அரசு. ஹிந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, மகாராட்டிரா, ஒடிசா, ஆந்திரா, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வருகின்றன. இது ஒன்றிய அரசுக்கும் தெரியும். 1950 முதல் 1960 வரை அனைத்து மொழி வாரி மாநிலங்களும் பிரிந்த போது தமிழ்நாடு போன்றே மேற்கு வங்கமும் உருவானது.   காரணம் மொழி உணர்வே!  இதைச் சிதைத்து நாட்டின் பன்முகத்தன்மையை அகற்றிடவே ஒன்றிய அரசு முயல்கிறது என்று கர்ஜ் சாட்டர்ஜி கூறினார்.

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ததகதா சத்பதி பேசும் போது, ’இந்திய நாட்டிற்கு தேசிய மொழி என்று ஒன்றுமே கிடையாது, கொல்கத்தாவை விட மிகவும் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்வாசிலாந்து என்ற நாட்டில் மூன்று மொழி பேசும் மக்கள் உள்ளனர். 

 பக்கத்தில் உள்ள பர்மாவில் 6 மொழிகள் உள்ளன. அவர்கள் அந்நாட்டில் வாழும் பழங்குடியின மக்களின் மொழிக்கு பெரும் மரியாதை தருகின்றனர்.   சிங்கப்பூரில் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளை அங்கீகரித்துள்ளனர். இதனால் இந்த நாடுகள் எல்லாம் ஒற்றுமையாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் முன்னேறிக் கொண்டு இருக்கின்றன.

 சுவிட்சர்லாந்து நாட்டில் பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலியோடு ஆங்கிலமும் உள்ளது. இதனால் இந்த நாடு உலகின் முதல் பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடாக உள்ளது, என்று கூறினார்

கொல்கத்தா ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் கைகளில் தமிழ்நாட்டின் தலைவர்கள் மற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகள் இடம் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. 

ஒரே நாடு, ஒரே மொழி என்ற பிஜேபி சங்பரிவார்க் கொள்கையின் முகமூடி கிழிந்து தொங்குகிறது - இது தொடக்கம் தான் - எச்சரிக்கை!


No comments:

Post a Comment