தலைமைச் செயற்குழு முடிவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

தலைமைச் செயற்குழு முடிவுகள்

திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டம் சென்னைப் பெரியார் திடலில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது.

கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளினை - சென்னையில் கொள்கைத் திருவிழாவாக நடத்துவது, டிசம்பர் 17 அன்று திருப்பத்தூரில் விடுதலை சந்தா 2ஆம் தவணை அளிப்பு - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் -சுயமரியாதைச் சுடரொளி திருப்பத்தூர் ஏ.டி. கோபால் நூற்றாண்டு விழா - தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இயக்கப் பிரச்சாரம் வேறு எந்தக் காலத்தையும்விட மிக அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டு, அதற்கான திட்டமும் தயாரித்து வெளியிடப்பட்டது. இடைஇடையே காணொலி மூலம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடத்துவதும் உள்ளடக்கப்பட்டது.

இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெரியார் பிறந்த நாள் செய்தியாக அறிவித்த அய்ம்பெரும் முழக்கங்களை முன்னெடுப்பது முக்கிய முடிவாக இருந்தது.

(1) சனாதனம் ஒழியட்டும் - சமதர்மம் நிலைக்கட்டும்.

2) தேவை - தேவை - உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை.

3) ஒன்றிய அரசே தனியார்த் துறைகளிலும், சமூகநீதி தேவை - பாலியல் நீதியும் தேவை.

4) செயல்பட விடு - செயல்பட விடு  - மாநில உரிமைகளில் தலையிடாதே - தலையிடாதே!

5) திராவிடப் பண்பாடு நமது பிறப்புரிமை, மதச்சார்பின்மை சட்டத்தின் கோட்பாடு! இவற்றிற்காக உயிர்த் தியாகமும் செய்ய நாங்கள் தயார்! தயார்!!

இந்த அய்ம்பெரும் திட்டங்கள் முழக்கங்களாக மக்கள் மத்தியில் மாற வேண்டும்.

பிரச்சார இயக்கமாக திராவிடர் கழகத்தால் மட்டுமே இவ்வரிய பணியை மேற்கொள்ள முடியும்.

ஏடுகள் மூலம் பரப்புதல், தெருமுனைக் கூட்டம், பொதுக் கூட்டம் மூலம் பரப்புதல், சமூக வலைதளங்கள்மூலம் கடைகோடி மனிதனுக்கும் கொண்டு செல்லுதல் காலத்தின் கட்டாயமாகும்.

மதவாத சக்திகள் 2024இல் வர இருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி மலிவான யுக்திகளைக் கைக் கொண்டு மக்களின் வாக்குகளைக் கையாடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

அதிகார பலம், பண பலம், பத்திரிகை பலம், மலிவாக விலை போகும் அனுமார்கள் பலம்- இவை அவர்களுக்கு அனுகூலங்கள்.

இந்த சங்பரிவார்க் கூட்டத்தின் தத்துவார்த்தத்தைத் தவிடு பொடியாக்கும் ஆற்றலும் சித்தாந்தமும் தந்தை பெரியார் கொள்கைப் பலத்திற்கு மட்டுமே உண்டு.

திராவிட இயக்கச் சித்தாந்தம் என்பது மதவாத பிற்போக்குச் சக்திகளின் பிடரியில் தாக்குதல் தொடுத்து, ஆணி வேர் வரை சென்று அழிக்கும் ஆற்றலைக் கொண்டது.

தந்தை பெரியாரின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - இவ்வாண்டு வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் எல்லாம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது- நல்லதோர் தொடக்கமும் திருப்பமும் ஆகும்.

இந்தி மொழியில் தந்தை பெரியார் நூல்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. ராகுல் காந்தியின் நடைப் பயணமும் நல்லதோர் மாற்றத்திற்கான அறிகுறியாகும்.

தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து கேரள மண்ணில் அவர் அடி எடுத்து வைத்த போது, அவர் உதிர்த்த சொற்கள் உன்னதமானவை.

"பெரியார் மண்ணை விட்டுப் பிரிந்து செல்கிறேனே" என்று சொன்னதன் ஆதங்கத்தில் ஆழமான பொருள் பொதிந்துள்ளது. அந்த இளம் தலைவனின் எதிர்காலம் எத்திசை நோக்கி என்பதும் சூசகமாகப் புரிந்து கொள்ளத்தக்கதே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை "திராவிட மாடல் அரசு" சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பீடு நடைபோடுகிறது. இதன் தாக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்கிறது. 

சனாதன - ஹிந்துத்துவ வாதிகளிடம் இப்பொழுதே அச்சம் குடிகொண்டு உலுக்க ஆரம்பித்து விட்டது.

நல்லதோர் தருணம் இது - நமது தலைவர் ஆசிரியர் காலங் கருதி கொடுத்த அய்ம்பெரும் முழக்கங்களை எங்கெங்கும் கொண்டு செல்லுவோம்.

நடந்து முடிந்த கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறவாதீர்! அதனைத் திசையெங்கும் கொண்டு சேர்ப்போம் - கூட்டங்களை நடத்துவோம் - ஏடுகளை நூல்களைப் பரப்புவோம்!

இது உறுதி! உறுதி!!

உறுதியே காண்!!!

No comments:

Post a Comment