வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 இலக்கியத்தை எங்கேயும் தேடலாம்! (2)

'செட்டி நாடு' என்ற பகுதியில் வாழும் தாய்மார்கள் துக்க வீட்டில்கூட தங்கள் துயரத்தை எப்படியெல்லாம் தமிழில் கவிதை நடையில் ஒப்பாரியாக வடித்தெடுத்து வருந்திப் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் என்பதை, பிரபல எழுத்தாளர் 'சோமெலெ' என்று அறியப்பட்ட சோம. இலக்குமணன் அய்யா அவர்கள் மிக அருமையான ஓர் ஆய்வுபூர்வ வரலாற்று நூலாக  - 'செட்டி நாடும் தமிழும்' என்று சுமார் 700 பக்கங்கள் கொண்ட நூலை எழுதியுள்ளார். கடும் உழைப்பின் வெற்றி அவருக்கு அது எனலாம்.

'ஒப்பாரி' என்ற தலைப்பிட்ட தனி அத்தியாயமே ஒன்று அதில் உள்ளது!

அதில் அவர் குறிப்பிடுகிறார்:

"அழுவது கலையன்று; ஆனால் வருத்தத்தை ஒப்பாரியாக வெளியிடுவது கலை - அரிய கலை. அந்தக் கலையில் கைதேர்ந்தவர்கள் செட்டிநாட்டுப் பெண்கள்.

அவர்கள் சிறந்த ஒப்பாரி பாடுவதை அறிந்து வியந்து, செட்டி நாட்டைப் பற்றி நாமக்கல் கவிஞர் ஒரு முறை பின்வரும் பாடலைப் பாடினார்.

"உழவும் தொழிலும்

இசை பாடும்

உண்மைச் சரித்திரம்

அசை போடும்

இழவில் அழுதிடும்

பெண்கூட

இசையோ டழுவது

கண்கூடு!"

"ஒப்பாரிப் பாடல்களை ஆற அமர இயற்ற முடியாது; அவை உணர்ச்சிப் பெருக்கால் திடீரென்று வெளி வருபவை!

அதிகம் படித்தறியாதவர்கள் - பாமரப் பெண்களே இப்படி பாக்களின் ஊற்றாக எப்படித் திகழுகிறார்கள் துக்க வீட்டில் என்பதை எண்ணினால் வியப்பு மேலோங்கும் - எவருக்கும்!

"கணவன் இறந்துவிட மனைவி கலங்குகிறாள்; அவர் நோய் வாய்ப்பட்டிருந்தது அவள் நினைவுக்கு வருகிறது.

"மலையாள வைத்தியனை மடிவசமாய்க் கூட்டிவந்தோம்

மலையாள வைத்தியனும் மருந்தறிய மாட்டலையே!

சீமை வைத்தியனைச் சீக்கிரமாய் கூட்டிவந்தோம்

சீமை வைத்தியனும் சீக்கறிய மாட்டலையே!"

அந்தத் திருமணம் வைதீக முறைத் திருமணமாகும்.

தாலி கட்டிய திருமணம்தான் என்பதால் அந்தப் பெண் துயரம் தாங்க முடியாமல், கோபம் கொப்பளிக்க, துயரத்துடன் வடிகாலாக்கி வார்த்தைகளை ஊற்றாக்கி அழுது வலியை வெளியிடுகிறார் - எப்படி (இதில் பழைய பழக்கப்படி குலத் தொழில் புரிவோர் பற்றிய குறிப்பு வரும் -  பொறுத்தருள்க)

"தாலிக்கு அரும்பெடுத்த  தட்டானும் கண்குருடோ

சேலைக்கு நூலெடுத்த சேணியனும் கண்குருடோ

பஞ்சாங்கம் பார்க்கவந்த பார்ப்பானும் கண் குருடோ,

எழுதினவன் தான் குருடோ? எழுத்தாணி கூரிலையோ"

துக்கத்தை, துயரத்தை சோகத்தின் வடிகாலாக  - வார்த்தைகளால் வருத்தத்தை வெளியாக்கும் வாய்க்காலாக தமிழச்சிகளிடம் (ஒப்பாரி இப்போது பெரிதும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்) இலக்கியச் சுவை எப்படித் ததும்புகிறது - எதுகைகளுடன் மோனைகளுடன் - எந்தக் கல்லூரிகளில் இலக்கணம் கற்றார்கள் இந்தச் சகோதரிகள்?

அது மட்டுமா?

இளமையில் கணவனைப்பறி கொடுத்த

ஒரு பெண் கதறுகிறாள்:-

"சில்லென்று பூத்த

சிறு நெருஞ்சி காட்டூடே

நில்லென்று சொல்லி

நிறுத்த வழி போனீரே"

இதைப் படிக்கும்போது, திரைப்பாடலாக இதனை முன்பகுதியாக வைத்த கவியரசர் கண்ணதாசனும் - டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர் குரலிசையும் உங்களுக்கு  நினைவுக்கு வருகிறதோ!

இதுபோலவே மற்றொரு பாடல்

"எட்டடுக்கு மாளிகையில்

ஏற்றி வைத்த என் தலைவன்

விட்டுவிட்டுப் போனானடி"

என்ற பாட்டும்கூட ஒப்பாரியே - திரைப்பாடலாக வந்து கேட்பாளர்கள் சுவைக்க விருந்து வைக்கின்றது.

எனவே இலக்கியங்களை எங்கும் தேடலாம்!

துக்க வீட்டிலும் கூடத்தான்

அதில் தவறென்ன?

No comments:

Post a Comment