பிஜேபி ஆட்சியில் மதவெறி 'திப்பு எக்ஸ்பிரஸ்' பெயர் மாற்றமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

பிஜேபி ஆட்சியில் மதவெறி 'திப்பு எக்ஸ்பிரஸ்' பெயர் மாற்றமாம்!

 பெங்களூரு,அக்10- கருநாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பாடத் திட்டத்தில் திப்பு குறித்து உள்ள பாடங்களை நீக்கவும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் மைசூரு - குடகு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்கா, மைசூரு - பெங்களூரு இடையேயான திப்பு சுல்தான் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மாற்ற வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே, திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை ‘உடையார் எக்ஸ்பிரஸ்' என மாற்றியது.

இதற்கு காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், ‘‘முஸ்லிம் மன்னரான திப்பு சுல்தானின் பெயரைநீக்கும் நோக்கத்திலேயே பாஜகசெயல்படுகிறது'' என விமர்சித்துள்ளனர். முஸ்லிம் அமைப்பினரும் இந்த பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ‘‘மைசூரை ஆண்ட உடையார் மன்னர் ரயில்வே கட்டமைப்புக்கு செய்த உதவியை கவுரவிக்கும் விதமாகவே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியல் இல்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்பு

உத்தரகாசி,அக்.10- உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி நகரில் இயங்கும் நேரு மலையேற்ற கல்லூரியைச் சேர்ந்த 27 பயிற்சி வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் என மொத்தம் 29 பேர் கடந்த மாத இறுதியில் திரவுபதி காதண்டா-2 மலை சிகரத்தில் ஏறினர். சிகரத்தின் உச்சியை அடைந்த அவர்கள் கடந்த 4ஆம் தேதி கீழே இறங்கத் தொடங்கினர். சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 27 உடல்களை அவர்கள் மீட்டுள்ளனர். இதில், கடந்த 7ஆம் தேதி 4, 8ஆம் தேதி 7, 9ஆம் தேதி 10 என மொத்தம் 21 பேரின் உடல்கள் உத்தர காசிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த உடல்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேரு மலையேற்ற கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மாயமான 2 பேரை தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட மற்ற 6 உடல்கள் விரைவில் உத்தரகாசிக்கு கொண்டுவரப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






No comments:

Post a Comment