இராமனும் பிரதமர் மோடியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

இராமனும் பிரதமர் மோடியும்

அயோத்தியில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி பேசியது என்ன?

"ராமரின் சொற்கள், எண்ணங்கள், ஆட்சி என அனைத்தும் ‘அனைவரையும் இணைத்து, அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற கொள்கையை ஊக்குவிக்கிறது. தற்போதைய அரசின் கொள்கை களுக்கு அடிப்படையாகவும் ராமரின் எண்ணங்களே உள்ளன. தற்போதைய தீபோத்ஸவ விழாவை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வருகிறது.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கான இலக்கை அடைய நினைக்கும் மக்களுக்கு கடவுள் ராமரின் கொள்கைகள் கலங்கரை விளக்கமாக உள்ளன.

நாட்டின் கடினமான இலக்குகளை அடைவதற்கான தைரி யத்தையும் ராமரின் கொள்கைகள் வழங்கி வருகின்றன. கடவுள் ராமர், அவரின் சகோதரர் லக்ஷ்மண், சீதை ஆகியோரின் படங்கள் அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரதியில் வரையப்பட்டிருந்தன. இது மக்களுக்கான அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்கிறது.

அதே வேளையில், அடிப்படை கடமைகளையும் மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நாட்டில் ராம ராஜ்யம் நிலவுவதை உறுதி செய்யும். ராமரிடம் இருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

('தினமணி' 24.10.2022 பக்கம் 7)

நாட்டில் ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று கூறும் ஓர் ஆட்சியின் தலைவரிடமிருந்து இதைத்தான் எதிர் பார்க்க முடியும்.

மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ராமராஜ்ஜியம் அமைப்போம் என்பதும், இந்து மதத்தின் அவதாரங்களில் ஒருவர் என்று கூறப்படும் ராமனைப் போற்றித் துதி பாடுவதும் சட்ட விரோதம் என்ற பால பாடம் கூடவா ஒரு பிரதமருக்குத் தெரியாது.

இராமனுடைய பிறப்பே சாபத்திலிருந்து முளைக்கிறது என்பதே நல்ல எடுத்துக்காட்டு அல்லவே!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன்  (காங்கிரஸ்) அவர்கள் ராமனும், சீதையும் போல என்று கூறி வாழ்த்தியபோது, முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் குறுக்கிட்டு வாழ்த்துவதுதான் வாழ்த்துகிறீர்கள்; நல்ல முறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதிகளை எடுத்துக்காட்டாகக் கூறக் கூடாதா என்றார் - வாயடைத்துப் போனார் கருத்திருமன்.

அயோத்தியில் சரயு நதிக் கரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.

அவதாரக் கடவுளாகிய ராமன் அந்த சரயு நதியில் வீழ்ந்துதான் தற்கொலை செய்து கொண்டான் என்று மூல நூலாகிய வால்மீகி இராமாயணமே கூறுகிறது. சீதா தேவியாகிய ராமனின் மனைவி பூமி பிளந்து மாண்டாள் என்பது எல்லாம் நல் வாழ்வுக்கான எடுத்துக்காட்டாகுமா?

(1) கைகேயியை மணம் புரிந்த போதே - கைகேயிக்குப் பிறக்கிறவன் தான் பட்டத்தரசன் என்று இராமனுக்குத் தெரிந்திருந்தும் தானாக முன் வந்தல்லவா அதற்கு உடன்பட்டு இருக்க வேண்டும் (எல்.கே. அத்வானிதான் பிரதமர் - மூத்தவர் என்று தெரிந்திருந்தும் மோடி பிரதமர் ஆனது ஒத்துப் போகிறதல்லவா!)

(2) எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்துவரும் மகனைக் காட்டுக்கு அனுப்ப சம்மதிப்பானா என்று தம்பி இலட்சும ணனிடம்  புலம்பியிருக்கிறான் ராமன் (அயோத்தியா காண்டம் 63ஆம் சருக்கம்).

(3) மனைவி சீதையிடம் சதா சந்தேகம் உடையவனாக இருந்திருக்கிறான். நெருப்பில் குளித்து விட்டு வரச் சொல்கிறான்.

(4) தமையனைக் கொல்லச் செய்து, இராஜ்ஜியத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கருதி துரோக சிந்தனையோடு வந்த சுக்ரீவன் - விபீஷணன் ஆகிய துரோகிகளை தன் நண்பர்களாக்கி தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக ராமன் நடந்து கொண்டவை உதாரணமான நற்செயல்கள்தானா?

(5) தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியை சகோதரத் துரோகி சுக்கீரவனுக்காக மரத்தில் மறைந்திருந்து கொன்ற ராமன் வீரனா? கோழையா?

(6) இராவணன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கு, முலைகளை அறுத்தது ராமன் ஒரு கடவுள் அவதாரம் என்பதற்கு இலக்கணமா?

(7) தபசு செய்த சம்பூகனை சூத்திரன் என்ற காரணத்துக்காக வருணாசிரம வெறியோடு  வாளால் வெட்டிக் கொன்றதுதான் ராமனின் ஒழுக்க சீலமா? இராமன் அன்பானவன் என்பதற்கு அடையாளமா?

பிஜேபி கூறும் ஒரே மதம் என்ற கூற்று சம்பூகவத அடிப்படையில் தானா? சூத்திரர்களும், பஞ்சமர்களும் படித்து மேலே வரக் கூடாது என்பதற்காகத்தானே மோடி ஆட்சியில் 'நீட்' திணிக்கப்பட்டுள்ளது.

குலக் கல்வியைப் போதிக்கத்தானே தேசிய புதிய கல்வி என்ற ஒன்று திணிக்கப்படுகிறது.

சமஸ்கிருதம் 'தேவபாஷை' என்பதற்காகத்தானே சமஸ்கிருதமும், அதன் குட்டியான ஹிந்தியும் திணிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தன்னைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகச் சொல்லிக் கொள்கிறார். அவர் போற்றும் ராமன் நம்பும் வருணாசிரமப்படி பிற்படுத்தப்பட்ட சூத்திர மோடி நாடாள முடியுமோ?

இராமனைப் போல உறுதியாக இருந்தால் உச்சத்தை அடையலாம் என்று பிரதமர் பேசியதாக 'தினமணி' ஏடு தலைப்புக் கொடுத்துள்ளது.

வருணாசிரம தர்மத்தைக் காப்பதற்காகவே அவதரித்தவன் ராமன் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் வருணாசிரமப்படி சூத்திரராகிய பிரதமர் எப்படி நாட்டை ஆளத் தகுதி பெற்றவர் என்ற கேள்விக்குப் பதில் வேண்டுமே.

வடக்கே உள்ள ராமபக்தியைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதுதான் பிரதமர் மோடியின் பேச்சில் பொதிந்து இருக்கும் 'ராஜ' தந்திரமாகும்.

"ராஜ தர்மத்தைக் காப்பாற்றுங்கள்" என்று குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பார்த்து, பிரதமர் ஏ.பி. வாஜ்பேயி சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. 

No comments:

Post a Comment