பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அவலங்களை வெளிச்சமாக்கும் "அன்றாடம்" - நூல் திறனாய்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அவலங்களை வெளிச்சமாக்கும் "அன்றாடம்" - நூல் திறனாய்வு!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக  எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய ‘அன்றாடம்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாய்வு இணைய வழியாக 26.08.2022 வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8 மணிவரை‌நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் சுப. முரு கானந்தம் உரையாற்றினார்.

இந்த நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகத்தினுடைய தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு ஊடகப் பிரிவின் தலைவர் மா. அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரி யரணி தலைவர் தமிழ்.பிரபாகரன், பகுத்தறிவு கலைப் பிரிவு செயலாளர் மாரி. கருணாநிதி, எழுத்தாளர் மன் றத்தின் மாநிலத் துணைத்தலைவர் கோ. ஒளிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் வேண் மாள் நன்னன், பெர்னாட்ஷா, அண்ணா சரவணன், கஸ்தூரிரங்கன், இறைவி, சதீஷ்,  குமரன், இசைஇன்பன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் இணைந்தனர்.

உள்ளதை உள்ளபடியே எழுதுவார்

நிகழ்விற்கு பகுத்தறிவாளர்  கழகத்தினுடைய பொதுச் செயலாளர் வி.மோகன் தலைமை வகித்து உரையாற்றினார். தனது உரையில் "எழுத்தாளர் அழகிய பெரியவனை  நான் நேரடியாக அறிந்தவன் இல்லை. ஆனால் அவரின் கதைகள் மூலமாக அவரை  அறிவேன். அவருடைய எழுத்துகளை படித்திருக்கி றேன் என்னும் தகுதியோடு இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறேன். இலக்கிய உலகில் படைப்பாளிகள் பல வகைகளில் இருப்பார்கள். தான் நினைத்ததை மட்டுமே படைப்பவர்கள். கற்பனையாகச் சிந்தித்து அதை மட்டுமே எழுதுபவர்களுக்கு மத்தியில் உண்மையை, உள்ளதை உள்ளபடியே எப்படி மக்களுக்குக் கொண்டு செல்வது என்று எழுதுகிற, அப்படி எழுதுவதன் மூலம் ஒரு விடியலை ஏற்படுத்துகின்ற எழுத்தாளர் அவர்.  ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து அங்குள்ள ஒரு அரசாங்கப் பள்ளியில் படித்து என்னைப் போலவே ஓர் ஆசிரியராகப் பணியாற்றக் கூடியவர். கல்லூரியில் படிக்கும்போதே எழுதி இருக்கிறார். 

பன்முகத்தன்மை  கொண்டவராக இருக்கிறார். அவருடைய படைப்புகள் தமிழ்நாடு, கேரளா பல் கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. 15க்கும் மேற்பட்டவர்கள் இவர் நூல் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர் யாருக்காக எழுதுகிறார் என்பது முக்கியம். சமூகத்தில் இழி நிலையில் இருக் கின்ற, காலம் காலமாக ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட அமுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பேசுகிறார். அப்படி அமுக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையோடு பேசுகிறபோது அதனை ஆதிக்க ஜாதிகள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை, அந்த வலியை 'வெளுப்பு' எனும் தன் நூலில் எழுதுகிறார். அந்த வலியை படிப்பவர்களுக்கும் கடத்துகிறார். நமக்கும் படித்த பின்பு இரண்டு நாள்களுக்காவது அந்த வலி இருக்கும்.  ஏனெனில் எதிர்த்துப் பேசக்கூட இயலாத உண்மை நிலையை அப்படியே எழுதி இருப்பார்" என்று சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஜாதி ஒழிப்பையும் இணைத்து எழுதக்கூடியவர்

தொடர்ந்து நிகழ்வின் தொடக்க உரையை ப.எ.ம. தலைவர் முனைவர் வா. நேரு ஆற்றினார். அவர் தனது உரையில்  "அழகிய பெரியவன் ஓர் அற்புதமான எழுத்தாளர். அழகியலையும் ஜாதி ஒழிப்பையும் இணைத்து எழுதக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். அவருடைய எழுத்துகள் பல்வேறு மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய உலகில் அவருடைய எழுத்துகள் மிக அதிகமாக பேசப்படுகின் றன. ஆனால் அவருடைய ஜாதி ஒழிப்பு எழுத்துகள், சாதாரண மக்கள் மத்தியில், பகுத்தறிவாளர்கள் மத்தி யில் பேசப்பட வேண்டும் என்ற வகையில் இன்றைக்கு இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. 2013இல் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கு 'பெரியார் விருது' அளித்து மகிழ்ந்தார்கள். தந்தை பெரியாருடைய அடிப்படைக் கொள்கை ஜாதி ஒழிப்பு. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதைப் போல ஏற்றத் தாழ்வுகளான படிநிலை அமைப்பான இந்த ஜாதி அமைப்பு மிக சாதுரியமாக நம் மீது புகுத்தப் பட்டிருக்கிறது. சனாதன வாதிகள் இன்றைக்கும் ஜாதி அமைப்பு வேண்டும் என்று பேசிக் கொண்டிருக் கிறார்கள். அந்த நிலையில் ஜாதி ஒழிப்பை தனது எழுத்துகளின் மூலமாக மிக ஆழமாக விதைப்பவர் தோழர் அழகிய பெரியவன் அவர்கள். அவை மிக ஆழமான வலியை தரக்கூடியவை. 'குரடு' என்னும் இவரது  சிறுகதை தொகுப்பைப்  படித்தப்பின் என்னா லும் அந்தச் சிறுகதைகளிலிருந்து விடுபட முடிய வில்லை. பேசுவதற்கும் செயல்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை தனது எழுத்துகளின் மூலம் இவர் சொல்கின்ற பொழுது சுருக்கென வாசிப்பவர்களுக்கு வலிக்கும்.. அவருடைய கதையை எடுத்துக்கொண்டு திறனாய்வு  நடத்துவது, வெற்றி பெற்ற எழுத்தாளர் எப்படி எழுதி இருக்கிறார் என்பதை அறிந்து கொள் ளும் வகையில் புதிய எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய பயனாக இருக்கும்  என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிறந்த களப்பணியாளரும் பேச்சாளரு மான மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் நா. தேன்மொழி நூலைத் திறனாய்வு செய்தார்.

மிக கனத்த எழுத்துகளில் சுட்டிக்காட்டுகிறார்

"தோழர் அழகிய பெரியவனை நிறைய கூட்டங் களில் குடியாத்தம் பகுதியில் சந்தித்து இருக்கிறேன். அவர் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மிகச் சிறந்த பேச்சாளர். அவருடைய பேச்சுகளை மிக ஆழமாக அருகில் இருந்து கேட்டவள் நான்.  அவரின்  எழுத்துக்கள் மிக கனத்த எழுத்துக்களாக இருக்கின்றன. சமூகத்தில் இருக்கும் வலிகளை,ஜாதியக் கொடுமை களை அழகிய பெரியவன் தன்னுடைய எழுத்துகளில் சுட்டிக்காட்டுகிறார். அப்படி சமூகத்தின் வலிகளைச் சுட்டிக் காட்டுகின்ற பொழுதுதான் நாம் எந்த மாதிரியான இழி நிலையில் இருக்கின்றோம், எந்த மாதிரியான ஒரு வாழ்வியலை கொண்டிருக்கிறோம், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அந்த சமூக சூழ்நிலையில்  நாம் உணரமுடியும். அப்படி உணரக்கூடிய வகையில் தன்னுடைய பேச்சு களையும் எழுத்துகளையும்  அவர் வடிவமைத்துள்ளார்  அவருடைய எழுத்துகளை வெறுமனே சிறுகதைகள், நாவல் என்று சொல்லிவிட்டு நாம் போய்விட முடியாது" என்று முகவுரையையே விரிவுரை ஆக்கினார்.

காமத்தோடு சேர்ந்து ஜாதியும் மனிதரை இயக்குகிறது

அன்றாடம் என்று சொல்கின்ற பொழுது தினந் தோறும் நாம் வாழ்வியலில் கடந்து செல்லும் செய்தி களை அடிப்படையாகக் கொண்ட  சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூலை தோழர் எழுதியுள்ளார்.இந்தக் கதைகளின் களங்கள் எல்லாம் குடியாத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்தான்.  முதலில் இந்தப் புத்தகத்தை முழுவதுமாக வாசித்துக் கொண்டே போனேன்.வலியைக் கொடுப்பதாக அந்த வாசிப்பு அமைந்தது.

அழகிய பெரியவன் தம் என்னுரைப் பகுதியில்,"புவி முழுமைக்கும் காமம் மனிதனை உந்தும் சக்தியாக இருக்கிறது. இந்தியாவில் காமத்தோடு சேர்ந்து ஜாதியும் மனிதரை இயக்குகிறது. இந்த இரண்டும் இணையும் உளவியல் புள்ளிகள் முக்கியமானவை. இரண்டின் விளைவுகளும் தீவிரமானவையாகவும் கொடூரமாய் அலைக்கழிப்பனவாகவும் இருக்கின்றன" என்று குறிப்பிடுகிறார். அந்த நான்கு வரிகளும் ஒவ்வொரு சிறுகதைக்கும் பொருந்தும் என்றார்.

தப்பே பண்ணியிருந்தாலும் அவங்க எங்க ஆளுங்க!

‘ஒரு இலையின் வயது' என்னும் சிறுகதை ஒரு ஆசிரியரின் வலியைப் பேசுகிறது. இயற்கையை நேசிக்கும் மாணவர்களின் நலனை உயர்வை எண்ணும் அந்த ஆசிரியருக்கு மேல் ஜாதிக்காரர் களால் ஏற்படுத்தப்படும் வலியைப் பேசுகிறது. கல்வியினால் மேலே வந்த ஆசிரியரை மீண்டும் புதை குழிக்குள் தள்ளு வதைப் போன்ற ஒரு செயலை செய்யும் சமூகத்தைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்களை கேலிக்கு உள்ளாக்கும் ஆணவத்தைத் தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரிடம், "தப்பே பண்ணியிருந்தாலும் அவங்க எங்க ஆளுங்க; அவர்களைக் கண்டித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவமானப்படுத்தும் போதும் ஒரு பழுத்த இலையின் நிலையில் தன்னை வைத்து அனைத்து ஜாதிகளைச் சார்ந்த மாணவர்களின் நலனே மிக வேண்டியது என்று அந்த ஆசிரியர் மன்னிப்பு கேட்க முடிவெடுப்பதான இந்தக் கதை சமுதாயத்தில் நடப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது" என்றார்.

வீடு வாடகைக்குக் கேட்டால் முதலில் கேட்கும் கேள்வி!

‘நினைவில் பெய்த மழை' என்னும் ஒரு சிறுகதை. இந்தக் கதையில் ஒரு பெண் ஆசிரியர். முத்து வடிவு என்னும் பெயர்.முத்துவடிவின் ஜாதியை மறைத்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்துணவு அமைப்பாளரின் வீட்டில் தங்க வைக்கிறார். முத்துவடிவின் ஜாதி பற்றித் தெரிந்ததும் அவருக்கு ஏற்படும் அவமானமும் வீட்டை விட்டு வெளியே கொட்டும் மழையில் அனுப்பப்படுவதையும் பற்றிய கதை. இன்றைக்கும் . நகரத்தில் வீடு வேண்டும் என்று கேட்டாலே முதலில் கேட்கும் கேள்வி நீங்க யாரு என்பதுதான். சிலர் ஜாதியைக் கேட்காமல் ஆனால்  அறிந்து கொள்வதற்காக சுற்றிச் சுற்றி கேள்வி கேட் கிறார்கள்.இதைப் பற்றிய மிக ஆழமான கதை என்றார்.

இதுதான் பெண்ணின் நிலை.

அடுத்து ஒரு சிறுகதை 'சட்டகத்துக்குள் பறக்கும் ஒரு பறவை.' என்னும் சிறுகதை. இந்தக் கதையில் வரும் கணவன் மனைவி இருவருமே படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் கணவன் மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறான். தோளில் புண் ஏற்பட்டு வடு ஏற்படுகிறது.அதை மறைக்க டாட்டூ வரைகிறாள்.வண்ணத்துப்பூச்சி டாட்டூ. . பொருளாதாரச் சுதந்திரம் வந்துவிட்டால் பெண்கள் முழு விடுதலை பெற்று விடுவார்கள் என்பது இருந்தாலும் தடைகளை எல்லாம் தாண்டி பெண்கள் வந்தாலும் இன்னும் நாம் இந்த சட்டத்துக்குள்  தான் இருக்கிறோம் என்பதைச் சொல்லும் சிறுகதை இது என்றார்.

இவர்களும் மனிதர்கள் தானா?

அடுத்த சிறுகதை 'கவசம்' என்னும் சிறுகதை.  இந்தக் கரோனா காலத்தில் கவசம் அணிகிறோம். ஆனால் மனத்தொற்று உள்ள, ஜாதித் தொற்று உள்ள மனிதர்களை விட்டு விலக என்ன கவசம் இருக்கிறது.? பாலக்காடு போய்விட்டு ரயில் பெட்டியில் வந்த போது நடந்த விஷயங்கள் தான் இந்தக் கதை.  தொற்றுடைய மனிதர்கள் தான் ரயில் பெட்டிக்குள் உட்கார்ந்து இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்தால் பதை பதைப்பு இல்லாமல் இயல்பாக கடக்கும் மனோ பாவமும்... ஒரு பெண்ணிடம் இறப்பில் கூட காம நோக்கில் பார்க்கும் பார்வையும் கொண்ட மனிதர்களின் கேவலமான உரையாடல்களையும் நடத்தைகளையும்  அப்பட்டமாக அப்படியே பதிவு செய்து இப்படியும்  இங்கு கீழ்த்தரமான மனிதர்கள் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று  அந்தக் கதையிலே பதிய வைக் கிறார் நூலாசிரியர்.

தவறுகளைத் தட்டிக் கேட்டால் இட மாறுதல்கள்...

'தொலைவு' என்னும் சிறுகதையில் நேர்மையான பெண் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர், பள்ளியின் தகவல் பலகையில் ஆசிரியர்களின் பெயருக்குப் பின்னால் ஜாதி இருந்ததைத் தட்டிக் கேட்டதால் மீண்டும் மீண்டும் பணியிடம் மாற்றப்பட்டு அலைக் கழிக்கப்பட்டு, இறுதியாகச் சென்ற இடத்திலும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் ஏழு கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு வருவதும்,அதனால் வழியில் பாம்பு கடித்து இறக்கும் சோகமெல்லாம் நடந்த நிலையில் தனி யொருவராகப் போராடி அவர்களுக்கென்று ஒரு  பள்ளிக்கூடம் அமைத்துத் தந்து பெயரில் கூட அவ்வூர் கீழூர் என்று இல்லாமல் 'பொன் வயல் பட்டி  கிழக்கு' என்று மாற்ற வைத்த நிகழ்வை அழகுற கதையாக்கி இருக்கிறார் நூலாசிரியர் என்றார்.

பெரியாரையும் அம்பேத்கரையும் சரியாக உள்வாங்க வேண்டும்!

'இரண்டு துக்கம்' என்னும் ஒரு சிறுகதை மகேந்திரன் என்னும் ஒரு கதாபாத்திரம்..தன்னுடைய தந்தை இறந்து போக, புதைக்க முடியாமல் திணறி பின் மகேந் திரன் முடிவெடுத்து செயல்படும் கதை.

இப்படி ஒவ்வொரு கதையும் சமூகத்தின் பல்வேறு அவலங்களை வெளியில் கொண்டுவந்து கொட்டுகிறது. அதோடு அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியா ரையும் எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் முழுமையாக உள்வாங்க வேண்டும் என்ற கருத்தைத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் பேசுகிறது. இன்னும் நிறைய சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.நம் தோழர்கள் வாங்கிப் படிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு மிக நன்றாக நூல் ஆய்வுரையை முடித்தார்.

நூலாசிரியர் அழகிய பெரியவன் அவர்களின் ஏற்புரை!

அன்பிற்கினிய தோழர்களே, இன்றைக்கும் இந்திய சமூகம் என்பது ஒரு ஜாதிய சமூகமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது . இது சமத்துவச் சமுதாயமாக ஒரு சுயமரியாதைக் கொண்ட சமூகமாக மாற வேண்டும் என்று பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் பல்வேறு வகையான போராட் டங்களை முன்னெடுத்தார்கள்.கலை இலக்கியத்தை தந்தை பெரியார் அவர்கள் மிகக் கடுமையாக விமர் சித்தார். பல இடங்களில் அதைப் பற்றி தனது கூர்மையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. நவீன காலத்தில் டி கன்ஸ்ட்ரக்சன் என்று சொல்லக்கூடிய ஒரு தத்துவார்த்த கருத்தியலை இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்திலே சேலத்திலே பேசுகிற பொழுது ‘கலை எனப்படுவது இனக்கொலை என்றால், கலையைக் கொலை செய்' என்று அவ்வளவு தெளிவாக பேசியிருக்கிறார். (குடியரசு 4.3.1944)

புரட்சிகரமான இலக்கியம்

90 களுக்கு பிறகு தமிழ்நாட்டிலே அறிமுகமான தலித் இலக்கியம் என்று சொல்லக்கூடிய ஒரு புது வகையான புரட்சிகரமான இலக்கியம் என்பது அந்தச் செயலைத் தான் செய்ய முற்பட்டது‌. தந்தை பெரியார் அவர்களுடைய அந்தக் கருத்தை ஒரு கொள்கைப்  பிரகடனமாக எடுத்துக்கொண்டு சமூகத்திலே இன் றைக்கு இருக்கக்கூடிய உண்மைகளை எதார்த்தங்களை கலை இலக்கியத்தின் வாயிலாக வெளிப்படுத்த வேண் டும் .அப்படி வெளிப்படுத்தாத ஜாதிய உயர்வுகளை, பக்தியை மூடகருத்தியலை உயர்த்துகின்ற அந்த இலக்கியங்களைக் கட்டுடைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு தான் தலித் இலக்கியம் என்பது செயல்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தலித் இலக்கியத் தின் பிதாமகர் என்று சொல்ல வேண்டும் என்றால் அது பாபா சாஹிப் அம்பேத்கர் அவர்கள் தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 களிலேயே தலித் இலக்கியம் அறிமுகமானது.  அங்கிருந்த மரபார்ந்த பழைய பக்தி இலக்கியங்கள் உட்பட அத்தனையையும் அவர்கள் கட்டுடைத்தார்கள். அந்தப் போக்கு என்பது தமிழகத்திலும் வந்தது. அதற்கு முன்னோடி யார் என்று பார்த்தால் தந்தை பெரியார் அவர்கள் தான். அவர்தான் தமிழ்நாட்டில் பக்தி இலக்கியங்களை எல்லாம் கட்டு டைத்து பேசியவர்.

முற்போக்கு கருத்துகளை...

" மண்ணகத்திலு வானிலு மெங்குமாந் திண்ணகத் திருவாலவா யாயருள் பெண்ணாகத் தொழிற் சாக்கிய பேயமண் டெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே" -  என்று திருஞானசம்பந்தர், மூன்றாம் திருமுறையில் பாடியதைத் தந்தை பெரியார்தான் கேள்வி கேட்டார்..இவரெல்லாம் என்ன இலக்கியவாதி என்று கேட்டவர் பெரியார். அந்த அளவிற்கு தன்னுடைய புரட்சிகரமான கருத்துகளை சுயமரியாதை மிக்க முற்போக்கு கருத்து களை சொன்னவர் பெரியார்.  இந்த சிந்தனையின் அடிப்படையில் தான் நான் எழுத வந்தேன்,

கருத்தியலை முன்வைத்து...

தோழர்களே என்னுடைய நீண்ட கால வாசிப்பிலே பெரியாருடைய உரைகளும் அவருடைய எழுத்து களும் புரட்சியாளர் அம்பேத்கருடைய உரைகளும் எழுத்துகளும் மார்க்ஸ் அவருடைய உரைகளும் எழுத்துகளும் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடித்தன. தமிழ்நாட்டிலே கருத்தியல் சார்ந்து உறுதியாக எழுதக்கூடிய  எழுத்தாளர்கள் மிகக் குறைவு. இதைத் தனியாகச் சொல்லி சுட்டிக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. இன்றைய சூழல் என்னவாக மாறியிருக் கிறது என்றால் யாரெல்லாம் கருத்தியலை முன்வைத்து எழுதுகிறார்களோ அவர்களையெல்லாம் விலக்கு கின்ற அல்லது அவர்களை எல்லாம் கடுமையாக விமர்சிக்கின்ற போக்கு என்பது இன்றைக்கு இருக்கின்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் இல்லை என்று சொன்னால் தமிழ்நாட்டில் என்ன மாதிரியான நிலைமைகள் இருந்திருக்கும்? இப்பொழுதே இப்படி இருக்கிறது என்று சொன்னால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலை இந்த தமிழ்நாட்டில் இருந் திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படியான ஒரு நிலை இருக்கிறது அதனை நாம் களைய வேண்டும் அது இன்னும் கூர்மையாகிக் கொண்டிருக்கிறது. கருத்தியல்வாதிகளான நம்முடைய பணி என்பது இன்னும் தீவிரமடைய வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சட்டகத்துக்குள் பறக்கும் ஒரு பறவை

இந்த "சட்டகத்துக்குள் பறக்கும் ஒரு பறவை' என்னும் கதை பற்றி.... ஒரு  செய்தியை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். கணவர்கள் மனைவியை அடிக்கும் போக்கு என்பது உலகம் முழுக்க இருக்கிறது. அதிலே முற்போக்காளர்கள் ஒன்றும் விதிவிலக்கு கிடையாது. நாம் பொதுவுடமை மண் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய சோவியத் ரஷ்யாவில் இது அதிகமாக இருக்கிறது. அப்படி கணவனால் சித்திர வதை செய்யப்படுகிற, அடிக்கப்படுகிற அந்தப் பெண் கள், பொதுவெளியில்  நடமாடுகிற பொழுது தங்கள் காயத்தை மறைத்துக் கொள்வதற்காக அதன் மீது டாட்டூ குத்திக் கொள்கிறார்கள் என்ற ஒரு செய்தியைப் படித்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை ஒரு கதையாக்கலாம் என்று நினைத்தேன். நான் பார்த்த, அனுபவித்த, எதார்த்தத்தின் அடிப்படையில் அதை உருவாக்கினேன்.

சமூகம் சார்ந்த சிக்கல்களை...

இப்படி ஒவ்வொரு கதையுமே நான் கேட்ட, நான் பார்த்த அல்லது எதிர்கொண்ட, தலையிட்ட பிரச்சனை கள்தான். சமூகம் சார்ந்த அந்தச் சிக்கல்களை அடிப் படையாக வைத்து எழுதப்பட்ட கதைகளே. வெறு மனே சிக்கலை சொல்வதல்ல ஒரு கதை-அதை வாசிக் கிறவர்களுடைய மனதில் இருந்து ஒரு அழுத்தமான சிந்தனையை, சமூகம் இப்படி இருக்கிறது- நாம் என்ன செய்வது ? என்கின்ற ஒரு பதைபதைப்பை உருவாக்க வேண்டும் .ஒரு கலையின் வேலை என்பது அதுதான்.  அந்த வேலையை இந்தக் கதைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.. தோழருடைய உரையைக் கேட்ட பொழுது அது செய்திருக்கிறது என்கின்ற ஒரு நம்பிக்கை எனக்கு கிடைத்தது. மிகச்சிறந்த ஒரு உரையை அவர் நிகழ்த்தி இருக்கிறார்.

மனுசங்கடா

இரண்டு துக்கம்... திருநாள் கொண்ட சேரி என்ற ஊரில் நடந்த ஒரு நிகழ்வு தான் அந்தக்கதை. அதனை ஒரு திரைப்படத்திற்காக ஒரு குறுநாவலாக நான் எழுதினேன் மனுசங்கடா என்று ஒரு திரைப்படமாக அது உருவாகி வெளிவந்தது.

கடந்த ஆண்டு வெளிவந்த இந்தத் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பு. இது அதிகம் பேசப்படவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந் தேன்.  நாங்கள் பேசுகிறோம் என்று சொல்லி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அதனை மிகச் சிறப்பாக பலரின் பார்வைகளுக்கும் கொண்டு சேர்க்கின்ற வகையிலே பேசி இருக்கிறார்கள். தோழர் தேன்மொழி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

எவ்வளவு அவலங்கள் அன்றாடம்

நன்றி உரையை ப.எ.ம.மாநிலத்துணைத்தலைவர் ம. கவிதா  ஆற்றினார்."சிறந்த சிந்தனைகளை நாம் நூல் வழியாக வாரந்தோறும் அலசிக் கொண்டிருக்கி றோம். மிகச் சிறப்பாக இலக்கியத்தின் நோக்கு, போக்கு, வாழ்வியல் என்று பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர் மன்றம் தொடர்ந்து நூலாய்வு செய்து வருகின்றது.  நாம் என்னதான் மிகப்பெரிய வளர்ச்சி அல்லது கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னேறி இருக்கிறோம், ஒரு முன்னேறிய சமுதாயம் அல்லது நாகரிகமான சமு தாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் என் றாகிய மிகப்பெரிய வெளிச்சங்களைக் காட்டி நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் கூட அதனுடைய திரை மறைவில் எவ்வளவு அவலங்கள் அன்றாடம் இந்த நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இருட்டிலே நடந்து கொண்டிருக்கிற அந்த அவலங் களை, அன்றாடம் என்ற நூலிலே நூலாசிரியர் அழகிய பெரியவன் வெளிப்படையாக பதியவைத்துள்ளார், நாமும் வெளிப்படுத்துவோம்" என்று சொல்லி அனை வருக்கும் நன்றி கூறினார்.

தொகுப்பு : ம.கவிதா


No comments:

Post a Comment