கோவில்பட்டி காவல்துறையினர்மீது தாக்குதல் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் வன்முறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

கோவில்பட்டி காவல்துறையினர்மீது தாக்குதல் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் வன்முறை

கோவில்பட்டி,செப்.19- தூத்துக்குடி மாவட் டம் கோவில்பட்டியில் காவல் ஆய்வாளர் மற்றும் காவலரை தாக்கிய வழக்கில் நகர பாஜக தலைவர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்துக்கள் குறித்து அவதூறாகபேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவைக் கண்டித்து நேற்று (18.9.2022) மாலை இந்துமுன்னணி சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான சுவரொட்டிகளை சிலர் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  வந்தகிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், ‘அனுமதி பெறாமல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது’ எனக் கூறி சுவரொட்டிகளை பறிமுதல் செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நகர பாஜக தலைவர் எம்.சீனிவாசன் தலைமை யிலான சிலர் இரு சக்கர வாகனங்களில் வந்து எட்டயபுரம் சாலையில் ரோந்துப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் வாகனத்தை முந் திச் சென்று மறித்தனர். இரு சக்கர வாகனங் களில் இடித்து காவல்துறை வாகனம் நின்றது.

இதையடுத்து அவர்கள், காவல் ஆய்வா ளரின் வாகன ஓட்டுநர் பாண்டீஸ்வரனை திடீரென தாக்கினர். இதை தடுக்க முயன்ற காவல் ஆய்வாளருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து கூடுதல் காவல்துறையினர் வந்ததை பார்த்த பாஜகவினர் அங்கிருந்து தப்பியோடினர். சீனிவாசன், பாஜக நிர்வாகி ரகுபாபு ஆகியோரை மட்டும் காவல்துறையினர் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த காவல் ஆய்வாளர், காவலர் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளர், காவலர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக எம்.சீனிவாசன் (வயது 60),ரகுபாபு (வயது  27), இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் செ.வெங்கடேஷ் (வயது  27), நிர்வாகிகள் ப.பரமசிவன் (வயது  60), மு.சீனிவாசன் (வயது  44), வெ.பொன் சேர்மன்(வயது  28) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.


No comments:

Post a Comment