பெரியார் ஏன் தேவைப்படுகிறார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

பெரியார் ஏன் தேவைப்படுகிறார்?

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து 

PhD, FRSC, பிரிட்டன்

செப்டம்பர் 17, சமூக நீதி நாள். தந்தை பெரியாரின் பிறந்த நாள். 

சனநாயகப்படுத்தப்பட்ட, பரவலான கல்வி வாய்ப்பு இன்று எல்லா சமூகத்தினருக்கும் கிடைத் துள்ளது. இதனை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் சாத்தியப்படுத்தியதில் முதன்மையானவர் "தந்தை பெரியார்!" அந்த‌ வரலாற்றினை கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.

சுதந்திரத்திற்கு முன்பு பிரித்தானிய‌ இந்தியாவில் கல்வி நிலையங்களில், அரசுப் பணிகளில் பார்ப்பன சமூகத்தை சார்ந்தவர்களே அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். 

1911 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி.  

பார்ப்பனர்கள் மக்கள் தொகை (3.2%)  வகித்த பதவிகளின் எண்ணிக்கை 68.7%

பார்ப்பனர் அல்லாதோரின் மக்கள் தொகை (இந்துக்கள்) (87.4%): வகித்த பதவிகளின் எண்ணிக்கை 21.9% (1903 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி)

சென்னை பொறியியல் கல்லூரியில் படித்த பொறியியல் துறை மாணவர்கள் பட்டியலின் படி,

பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் மாண வர்களின் எண்ணிக்கை 87.3% (மக்கள் தொகை 3.1%)

பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சார்ந்த பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை 2.8% (மக்கள் தொகை 86.1%)

(Reference: P. Radhakrishnan. Communal Representation in Tamil Nadu, 1850-1916: The Pre-Non-Brahmin Movement Phase. Economic and Political Weekly  28 (1993), pp. 1585-1597)

இத்தகைய சூழலில் தான் சென்னை மாகாண அரசில் (Madras Presidency) உள்ள உயர்கல்வி நிலையங்களில், சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள‌ பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் (Non Brahmins)  உயர் கல்வி பெற‌ சமூகநீதியோடு (Social Justice) கூடிய‌ ஜாதி வாரிய பிரதிநிதித்துவமும் (communal representation) , ஜாதி வாரிய இட ஒதுக்கீடும் (Caste based reservation) வேண்டும் என்ற கோரிக்கையை தந்தை பெரியார், நீதிக்கட்சித் தலைவர்களிடம் வலியுறுத்தினார். 

இந்தியாவிலேயே முதன் முதலாக‌ 1921 ஆம் ஆண்டு பனகல் அரசரின் தலைமையிலான‌ நீதிக்கட்சி, சென்னை மாகாண அரசு  (Madras Presidency)  அரசு வேலை வாய்ப்பில் ஜாதி வாரிய இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையினை பிறப்பித்தது.  இதன் மூலம் அரசுப் பணிகளில் பார்ப்பனர் அல்லாதோரின் (Non Brahmins)  வேலை வாய்ப்பு 21% இல் இருந்து 41% ஆக இரட்டிப்பு ஆகியது.

அதே நேரம் பார்ப்பனர்களுக்கான வேலை வாய்ப்பு 88% இல் இருந்து 16% ஆகக் குறைக்கப்பட்டு, அதன் பலனை பரவலாக இஸ்லாமியர்கள் (16%), கிறிஸ்தவர்கள் (அய்ரோப்பிய மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள்) (16%) மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குப் (8%) பரவலாக‌ப் பிரித்துத் தரப்பட்டது. 

இந்தக் கால கட்டத்தில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், இந்த இடஒதுக்கீட்டு முறையினை ஆதரித்தார். மேலும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திரு.வி.க. தலைமையிலான சென்னை மாகாண காங்கிரஸ் மாநாட்டில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். ஆனால், திருவிக இதனை ஏற்க மறுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பிறகு பொது மக்களிடையே ஜாதி வாரிய இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த சென்னை மாகாணம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன் விளைவாக, 15 டிசம்பர் 1928 அன்று பிரித்தானிய இந்திய அரசின் சென்னை மாகாண ஆளுநர் "அரசு இதழில்" இந்த இட ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை மூலம் கல்லூரிகளில் 12 சீட்டுகளில் பார்ப்பனர் அல்லாதோருக்கு 5 இடமும், பார்ப்பனர்களுக்கு 2 இடமும் ஒதுக்கப்பட்டது.  இந்த ஆணை 1950 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையும் வரை அமலில் இருந்தது.

1951 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில், “ஜாதி வாரிய இட ஒதுக்கீடு" என்பது இந்திய அரசியலமைப் பிற்கு எதிரானது எனச் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது (Champakam Dorairajan vs Madras State).  

இந்த வழக்கின் மூலம் மீண்டும் பார்ப்பனர் அல்லாதாருக்கு விளையும் தீமைகள் குறித்துப் பெரியாரும் (திராவிடர் கழகம்), அறிஞர் அண்ணா (திமுக) உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சென்னை மாநிலம் முழுவதும் முன்னெடுத்த தீவிர போராட்டங்கள் மிக முக்கியமானவை. 

ஜாதி அடிப்படையிலான‌  இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டால் பார்ப்பனர் அல்லாதோரின் கல்வி, வேலை வாய்ப்பில் எத்தகைய தீமைகளை ஏற்படுத்தும் எனப் பொது மக்களிடம் பெரியார் மேடைகள் தோறும் தெளிவாக விளக்கிப் பேசினார்.

பெரியார் பற்ற வைத்த தீ இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதன் விளைவாக‌ 1951 ஆம் ஆண்டு பண்டித ஜவகர்லால் நேருவின் தலைமையிலான அரசு, வேலை வாய்ப்பு மற்றும் கல்லூரிகளில் பயில்வதற்கான ஜாதி வாரிய இட ஒதுக்கீட்டு மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. 

அப்போதைய சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர். சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முதலாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கல்வி, வேலை வாய்ப்பிற்கான அரசு ஆணையில் Article15 (4) திருத்தம் கொண்டு வரப்பட்டது.‌ இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு தந்தை பெரியாரின் போராட்டங்கள் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்று லோக்சபாவில் நேரு குறிப்பிட்டுப் பேசினார் (Ref: Why the rights for communal reservations? (The communal G.O.) Periyar E.V. Ramasamy, written by Dr K Veeramani)Dravidar Kazaham Movement Publishers, 2011).

மேலும் பெரியாரின் போராட்டங்கள்  1951 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் பார்ப்பனர் அல்லாத சமூகத்தினருக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கும் மிக முக்கியக் காரணமாக இருந்தது.

ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்த‌ இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வழக்குகள் சமூகநீதிப் பயணத்தில் மிக முக்கியமானவை. இதன் பின்னால் உழைத்திட்ட பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளையும் நாம் நினைவு கூறுதல் அவசியம்.

1903 ஆம் ஆண்டினை ஒப்பிடும் போது 3 சதவிகிதத்திற்கும் குறைவான கல்வி வாய்ப்பைப் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்கள், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் தற்போது தமிழ்நாட்டில் இருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூகங்கள் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பொறியியல் மற்றும் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். 

ஒரு காலத்தில் பொறியியல் கல்லூரிகளில் அறவே வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில், இன்று “வீட்டுக்கு வீடு ஒரு இன்சினியர்” என்கிற‌ பெரிய புரட்சியைத் தமிழ்நாடு செய்து காட்டியுள்ளது. இதற்குப் பின்னால் தமிழ்நாட்டின் “திராவிட மாடல்” (Dravidian Model) என்னும் வளர்ச்சி இலக்குகள் உள்ளன. 

இந்த ஆண்டு (2022) அண்ணா பல்கலைக் கழகப் பொதுத் தரவரிசை பட்டியலின் படி 132 மாணவர்கள் 200 க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர். இந்த 132 மாணவர்களில் 121 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன (BC‌ - 89, MBC - 12, SC - 5, ST - 1) சமூகத்தைச்  சேர்ந்த வர்கள். பொறியியல் கல்லூரிகளில் “ஜாதி வாரிய இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் வாய்ப்பு எத்தகைய நன் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? (Reference: Tamilnadu engineering admission – 2022, Directorate of technical education, Chennai – 25, General academic - provisional rank list)

பொறியியல் கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் மிகப்பெரிய அளவில் கல்வி பெற்றதன் பின்னால் நூறாண்டுகள் கடந்த சமூகநீதிப் போராட்டம் உள்ளது. தமிழக சூழலில், அதன் வித்தாக இருந்தவர் தந்தை பெரியார்.

அவரது பிறந்த நாளை, “சமூகநீதி நாள்” எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மிகவும் பொருத்தமான ஒன்று. இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டு, சமூகநீதி நாளுக்கான உறுதி மொழியினை முன் மொழிந்துள்ள‌ தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்!


No comments:

Post a Comment