மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் சமூகநல திட்டங்களை சீர் குலைக்கும் ஒன்றிய அரசின் முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் சமூகநல திட்டங்களை சீர் குலைக்கும் ஒன்றிய அரசின் முயற்சி

ட்டி. ட்டி. ராம் மோகன் 

1982 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் இன்றும் புகழ் பெற்றுள்ள மதிய உணவு திட்டத்தை துவக்கியதற்கு அவரது சொந்த அ.இ.அ.தி.மு.க. கட்சியினுள்ளும் எதிர்க் கட்சிகளிடமும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது.  கையாடலுக்கும் லஞ்ச ஊழலுக்கும் அது வழி வகுக்கும் என்று அவரது கட்சியினர் கூறினார்கள். ஏழைகளிடையே தனது நற்தோற்றத்தை பெருக்கிக் கொள்வதே அதன் நோக்கம் என்று எதிர்க்கட்சியினர் கூறினர்.

பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை தவறாமல் நாள்தோறும் அனுப்புவதன்  பயனை பெற்றோர் கண்டனர். அதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவேகமாக உயர்ந்தது. இவ்வாறு அதன் பயன்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு சத்துணவு என்னும் உடனடியான நோக்கத்தையும் தாண்டி எதிர்கால நோக்கங்களுக்கும் சென்றது.

தகுதியும் தகுதி இன்மையும்

இந்த திட்டத்தின் வெற்றி ஒரு மாபெரும் உண்மையை வெளிப்படுத்தியது. சமூக நல திட்டங்களின் ஒட்டு மொத்த பயன்களை அது துவக்கப்பட்ட உடனே அறிந்து கொள்வது என்பது அத்தனை எளிதானது அல்ல. எனவே தற்போது இலவசங்கள் என்று குறிப்பிடப்படும் சமூக நல திட்டங்களை மதிப்பீடு செய்வதும் கடினமானது. பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள் வழங்குவது என்பது ஒரு மலிவான தேர்தல் லஞ்சம் போலத் தோன்றினாலும் குழந்தைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று வருவதற்கான எளிய போக்கு வரத்து வசதி அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை என்பதை கிராம மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

தொலைக்காட்சிப் பெட்டிகள் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமன்றி பயன்நிறைந்த தகவல்களை அளிப்பதற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கான வாகனமாகவும் பயன்படுபவை ஆகும். இந்த இரண்டுமே சமூகத்திற்கு அகண்ட பயன்களை அளிப்பவையாகும். 

தகுதி உள்ளது எது - தகுதி அற்றது எது என்பதை எப்போதுமே அவ்வளவு எளிதாகப் பிரித்துக் காணமுடியாது. சில இலவசங்களின் பின்னணியில் உள்ள தகுதிகள் பற்றி பொருளியலாளர்களை விட மேலான ஒரு புரிதலை அவ்வப்போது அரசியல் வாதிகள் கொண்டிருப்பார்கள் என்பது போற்றப்பட வேண்டிய ஆணிவேர் உண்மை ஆகும். வசதி வாய்ப்பு இல்லாத மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது அல்லது சமூக மறுமலர்சியைக் கொண்டு வருவது என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.

நீதிமன்றங்களின் தலையீடு

முன்பு  கூறியது போல ஒரு நிபுணர் குழு அமைப்பதற்கு மாறாக மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு இந்த விவகாரத்தை அனுப்புவது என்ற முடிவு இத்தகைய பரிசீலனைகளை அடிக் கோடிட்டுக் காட்டுவதாகவே இருக்கிறது என்றே தோன்றுகிறது. 

அது பற்றிய விசாரணையின் போது ஒரு முடி திருத்தும் தொழிலாளிக்கு சவரப் பெட்டியையும் - கள் இறக்குபவருக்கு அதற்கான உபகரணங்களையும் - ஒரு சலவைத்  தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டியையும் வழங்குவது அவர்களது வாழ்க்கை முறையையே மாற்றி அவர்களை உயர்த்தும் என்று மேனாள் தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டுள்ளார். 

அதனால்தான் மேல்தட்டு வழக்குரைஞர்களான உங்களால் இதனைப் புரிந்து கொள்வதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன் என்று அவர் கூறியது எவ்வளவு பெரிய உண்மை.

மூன்று நீதிபதி அமர்வுக்கு நான்கு கேள்விகளை உச்ச நீதிமன்றம் முன் வைத்துள்ளது. இதில் நீதித்துறை  தலையிடுவதற்கு உள்ள வாய்ப்பு என்ன? இந்த பிரச்சினைளை விசாரிக்க இருக்கும் நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் யாராக இருக்க வேண்டும். நடைமுறைப்படுத்த இயன்ற ஆணைகள் எதனையாவது நீதிமன்றம் பிறப்பிக்க இயலுமா? 

எஸ். சுப்பிரமணியத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவை இருக்கிறதா? மூன்றாவது கேள்விக்கு தீர்க்கமான ஒரு விடையை அந்த வழக்கின் தீர்ப்பில் (2013) உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது என்பதனுடன் முதல் கேள்விக்கான பதிலையும் அது அளித்து இருக்கிறது. 

2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு வண்ணத் தொலைக் காட்சிப்பெட்டிகளை தி.மு.க.வும், 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதுபோன்று மக்களுக்கு மிக்ஸி, கிரைண்டரும், மின் விசிறியும் வழங்கப்படும் என்று அ.இ.அ.தி.மு. கழகமும்  உறுதி அளித்திருந்தன. 

இந்த இலவசங்கள் எல்லாம் ஆக்கப்பூர்வமான செயலினம் இல்லை என்பதால் அவை வழங்கப் படுவது தடுக்கப்பட வேண்டும் என்று முன் வைக்கப் பட்ட வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக பயன் தருமா  அல்லது மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா என்பதும் ஒரு திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தும்போது மாநில அரசுதான் முடிவு எடுக்கவேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் நீதி மன்றத்தின் பங்கு மிகமிகக் குறைந்ததுதான் என்றும் உச்சநீதி மன்றம் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. 

இது போன்ற இலவசங்கள் வழங்குவது விரும்பத்தக்க ஒரு செலவா என்ற கேள்விக்கு நீண்டதொரு விடை அளித்த உச்சநீதி மன்றம் வாழ்வாதாரம் மற்றும்  வாழ்க்கைத் தரம் என்ற கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறுபடக் கூடியவையாகும் என்றும் ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருள் என்று கருதப்பட்டவை இன்று அத்தியாவ சியத் தேவையாக ஆகிவிடுவதால் தொலைக் காட்சிப் பெட்டிகளும் மடிக் கணினிகளும் தகுதி உள்ள  மக்களுக்கு வழங்குவது மாநில அரசுக் கொள்கைகளுடன நேரடியாக தொடர்புள்ளது என்றும் அரசின் செயல்பாடு அரசமைப்பு சட்டத் திற்கு எதிரானதாக இருந்தாலோ அல்லது  அது அறிவுடமையாக இல்லாத போதேர் அல்லது அந்த செலவினம் மாநில நலனுக்கு உகந்ததாக இல்லாத போதோ மட்டுமே நீதிமன்ற குறுக்கீடு அனுமதிக்கத் தக்கது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இலவசங்கள் போன்ற ஒரு விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளை அளிக்க வேண்டுமா? பாலியல் தொல்லை பற்றி அளிக்கப் பட்ட விசாகா நெறிமுறைகள் போன்ற ஒரு வழிகாட்டும் நெறிமுறைகளை இது போன்ற பிரச்சினைகளில் சட்டமன்ற வெற்றிடம் இருக்கும் நேரங்களில் அளிக்க இயலும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த இலவசங்கள் விவகாரத்தில் அது போன்ற வெற்றிடம் ஏதுமில்லை. அரசியல் கட்சிகளின் லஞ்ச ஊழல் வழக்குகளைக் கையாளும் அளவுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்ளது.

பொதுநிதி செலவிடப்படுவதன்மீதான உச்ச வரம்பு

இலவசங்கள் பற்றிய முக்கியமான சிக்கலான கேள்விகளுக்கு எல்லாம் விடை அளிக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. என்றாலும் இந்த புதிய மனுவில் ஒரு புதிய பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. இலவசங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியினால் பொது நிதிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விடுமா என்பதுதான் அது. தேர்ந்து எடுக்கப்பட்டவுடன் சகட்டு மேனிக்கு இலவசங்கள் அளித்து பொருளாதாரத்தை அரசியல் கட்சிகள் திவாலாக ஆக்குவதை எதனால் தடுத்து நிறுத்த இயலும்? அதுதான் சுப்பிரமணிய பாலாஜி வழக்கின் தீர்ப்பை மூன்று நீதிபதி அமர்வின் மறு பரிசீலனைக்கு அனுப்புவதன் நோக்கம் என்றே தோன்றுகிறது.

கடினமான கேள்விகளை உச்ச நீதி மன்றம் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. பொறுப்பற்ற முறையில் செலவிடுவதை எவ்வாறு உங்களால் கட்டுப்படுத்த இயலும். அதற்கு அரசியல் கட்சிகள்தான் பொறுப்பா என்பதை எவர் தீர்மானிப்பது ? இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ் இலவசங்களின் மீது பொருத்தமாக விளக்கப்பட்ட ஒரு உச்ச வரம்பு நிர்ணயிக்கலாம் என்று கூறி உள்ளார். நிதிப் பற்றாக்குறைக்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பை மீறுவதற்கான வழிகளை  இலவசங்கள் மீது விதிக்கப்படும் உச்ச வரம்பை மீறுவதற்கும் அரசியல் கட்சிகள் கண்டுபிடித்து விடுவார்கள். மேலும் நிதிப் பற்றாக்குறைக்கான மிகமிக முக்கியமான காரணம் இந்த இலவசங்கள்தான் என்று வாதாடுவது கடினமானது. எனவே இலவசங்கள் மீது உச்ச வரம்பு நிர்ணயிப்பதால் மட்டுமே ஒட்டு மொத்த நிதிப் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இன்றி முழுவதும் குறுகிய காலப் பயன்களுக்காக  நிதி செலவிடுபவர்களாகவே அரசியல் கட்சிகள் உள்ளன என்று கருதுவது மிகவும் தவறானதாகும். நீண்டகாலப் பயன்களைப் பெறுவதற்கு விரும்புபவர்களாகத் தங்களைத் தாங்களே அரசியல் கட்சிகள் பார்க் கின்றனர். அதனால் பொருளாதார நிலையை சீர் குலைத்துவிட்டு வாக்காளர்களின் கண்களில் எப் போதுமே மதிப்பிழந்தவர்களாக இருக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

வளர்ச்சியும் சமத்துவமும்

இறுதியாக இப்போதுள்ள பிரச்சினையே இலவசங்களுக்கான செலவினம்  பற்றியது அல்ல. அந்த செலவினம் ஆக்கபூர்வமானதா இல்லையா என்பதுதான். அரிய நிதியை இலவசங்களுக்காக வீணாக்குவதற்கு பதிலாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அதனை செலவிடலாம் என்று சொல்லுவது எல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் தொழில் துறை அல்லது அரசுப் பணிகள் அனைத்தும் வசதி வாய்ப்புகள் இருப்பவர்களுக்கே சென்றுவிடும். கல்வி கற்ப தற்கான வசதிகளை எளிதில் பெறுவதற்கு இயன்ற வர்க்காகவும் அதற்காக செலவழிக்கவும் அவர்களால் மட்டுமே இயலும் என்பதே  அதன் காரணம். ஆக்கபூர்வமான செலவினத்தால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளை அடைய இயலாதவர்களுக்கே இந்த இலவசங்களினால் கிடைக்கும் பயன்களில் பெரும் பகுதி செல்கிறது.

எனவே இலவசங்கள் மற்றும் இதர ஆக்க பூர்வமான பணிகளுக்காக செலவிடப்படும் நிதி ஒதுக்கப்படுவதில் நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்க ளிடையே  நிலவும் சமத்துவம் பற்றிய கேள்வியும் எழுகிறது.  இறுதியில் இது   வாக்காளர்களால் மட் டுமே பதில் அளிக்க இயன்ற ஒரு கேள்வியாக இருப் பதாகும். இந்த சமன்பாட்டை யாரால் கடைப்பிடிக்க இயலும் என்று அவர்கள் எண்ணுகிறார்களோ அவர்களுக்கே வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை அளிப்பார்கள். இலவசங்கள் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் தங்களது செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்று மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

நன்றி: 'தி இந்து'  29-8-2022

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment