சந்தா வழங்கும் விழாவில் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

சந்தா வழங்கும் விழாவில் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி உரை

 ‘விடுதலை' இன்றைய தேர்தலை முடிவு செய்யும் இதழாகத் தமிழ்நாட்டின் அரசியலில் நிலை பெற்று இருப்பதற்குக் காரணம் முற்றும் முதலும் முழுவதுமாக நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்தான்

ஆயிரம் சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டாலும், ‘ஆசிரியர்’ என்பதுதான் நிலைத்த பெயர்

சென்னை, செப்.26 அன்றைய தேர்தலைப்பற்றிய கவலையில் வெளிவந்த ‘விடுதலை’  இன்றைய தேர்தலை முடிவு செய்யும் இதழாகத் தமிழ்நாட்டின் அரசியலில் நிலை பெற்று இருப்பதற்கும் காரணம் முற்றும் முதலும் முழுவதுமாக நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்தான். ஆயிரம் சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டாலும், ‘ஆசிரியர்’ என்பதுதான் நிலைத்த பெயர் என்றார் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள்.

‘விடுதலை' சந்தா வழங்கும் விழா!

கடந்த 6.9.2022 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் உள் ளிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், வருகை தந்திருக்கின்ற தோழர்களுக்கும் என் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தந்தை பெரியாரின் அறிக்கை

1935 ஆம் ஆண்டு ‘விடுதலை' என்ற வாரம் இரு முறை இதழைத் தொடங்கும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ‘குடிஅரசு' இதழில் வெளியாகிறது.

‘ஆசிரியர்’ என்பதுதான்  நிலைத்த பெயர்

அந்த அறிக்கையில், தமிழர்களுக்கென்று ஒரு பத்திரிகை இல்லை. அன்றைக்கு நடந்த தேர்தலில், ஒரு பெரிய பாதிப்பு தமிழர்களுக்கு  ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், நமக்கு எதிராக நடந்த பிரச்சாரம்; நீதிக்கட்சிக்கு எதிராக நடக்கிற பிரச்சாரம். அதை எதிர்கொள்வதற்கு ஒரு தமிழ்ப் பத்திரிகை இல்லை என்கின்ற கவலையுடன், ‘‘தமிழ்ப் பத்திரிகை'', ‘‘தமிழ்ப் பத்திரிகை'', ‘‘தமிழ்ப் பத்திரிகை'' என்று மக்கள் அலை கிறார்கள்; அலைந்துகொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு பதிலாக, நம்முடைய ‘விடுதலை' வெளியாகிறது. வாரம் இருமுறை வெளியாகிற இந்த ஏடு, மிக விரைவில் தினசரியாக வெளியாகும் என்று நம்புகிறேன் என்று அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் ‘விடுதலை’ யின் தொடக்கத்தைப்பற்றி கொடுத்த அந்த அறிக்கை, இன்று 88 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘விடுதலை’  என்பது தினசரியாக வெளியாவது மட்டுமல்ல, அது தமிழர்களின் இல்லந்தோறும் இருக்கும் அடையாளமாகவும், அன் றைய தேர்தலைப்பற்றிய கவலையில் வெளிவந்த ‘விடுதலை’  இன்றைய தேர்தலை முடிவு செய்யும் இதழாகத் தமிழ்நாட்டின் அரசியலில் நிலை பெற்று இருப்பதற்கும் காரணம் முற்றும் முதலும் முழுவதுமாக நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்.

ஆயிரம் சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டாலும், ‘ஆசிரியர்' என்பதுதான் நிலைத்த பெயர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

அய்யா அவர்களுடைய திருமணத்திற்கு புரட்சிக் கவிஞர் அவர்கள் எழுதிய வாழ்த்துரையில்,

‘‘எட்டாம், பத்தாம் ஆசிரியர்க்கோர் சட்டாம்பிள்ளை எனத் தகுந்தோர்'' என்று ஒரு குறிப்புச் சொல்லால், அதற்குப் பின்னால் இருக்கும் பல செய்திகளைச் சேர்த்து, புரட்சிக்கவிஞர் அவர்கள் ஆசிரியரை, அன் றைக்கே இந்தத் தகுதிக்கு உரியவர் என்ற அந்தக் கவிதையின்மூலம் சொன்னார்கள்.

‘விடுதலை’ யில் வருவது நியூஸ் அல்ல - வியூஸ் என்ற வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது

சாதனைகளையும், சோதனைகளையும் நடைமுறை யாகக் கொண்ட நம்முடைய ‘விடுதலை’  இதழைப்பற்றி நீதிமன்றத்தில் வைத்த வாதம், ‘விடுதலை’  பத்திரிகையை நீங்கள் ரீசிவரைக் கொண்டு நடத்த முடியாது என்பதற்கு, ‘விடுதலை’ யில் வருவது நியூஸ் அல்ல - வியூஸ் என்ற வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டது.

வழக்குகளையும், தண்டனைகளையும் எதிர் கொண்டு நடக்கிற ஓர் ஏடு. அவதூறுகளை தனக்கு இரையாகக் கொண்டு, உரமாகக் கொண்டு வளர்ந்த ஓர் இதழ்.

இந்த நாளேட்டினுடைய வெற்றி, அதனுடைய சிறப்பை நம்முடைய ஆசிரியர் அவர்களுடைய உழைப்புதான் பெற்றுத் தந்திருக்கிறது என்ற நன்றி யுணர்வுடன், இத்தகைய ஓர் ஏடு இருப்பது உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை.

60 ஆண்டுகள் ஓர் இதழுக்கு ஆசிரியராக இருந்த வரலாறு...

சென்ற வாரம் இங்கே இதே இடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் பாராட்டு விழாவில், பத்திரிகையாளர் விஜய்சங்கர் அவர்கள், அந்த அடைமொழியைக் குறிப்பிடும்பொழுது, நான் கூகுளில் தேடிப் பார்த்தேன்; ஒரே ஒரு பத்திரிகை ஆசிரியர் 54 ஆண்டுகாலம் இருந் திருக்கிறார்கள். 60 ஆண்டுகள் ஓர் இதழுக்கு ஆசிரிய ராக இருந்த வரலாறு, நம்முடைய ஆசிரியருக்குத்தான் உண்டு என்று ஃப்ரண்ட் லைன் ஆசிரியாக இருந்தவர் குறிப்பிடுகிறார் என்று சொன்னால், அதற்கான முத்திரை ஒன்று தனியாக இருக்கின்றது.

‘விடுதலை’ யைத் தாங்கிப் பிடிப்போம்; 

அது நம் கடமை!

அந்த அடிப்படையில், ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒரு துளியாக அய்யா அவர்கள் விழுப்புண் ஏற்ற விடுதலையின் வரலாறு என்ற நூலில், பல செய்திகளைக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் இத்தகைய நூல்களை வாங்கிப் படித்து ‘விடுதலை’ யைத் தாங்கிப் பிடிப்போம்; அது நம் கடமை!

- இவ்வாறு திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment