குறுக்கு வழிகளில் ஆட்சிகளைப் பிடித்த பி.ஜே.பி.,க்குப் பீகாரில் மரண அடி! தமிழ்நாட்டின் 'திராவிட மாடல்' ஆட்சி பீகாரிலும் மலரட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

குறுக்கு வழிகளில் ஆட்சிகளைப் பிடித்த பி.ஜே.பி.,க்குப் பீகாரில் மரண அடி! தமிழ்நாட்டின் 'திராவிட மாடல்' ஆட்சி பீகாரிலும் மலரட்டும்!

மதவாத பி.ஜே.பி.- ஆர்.எஸ்.எஸ்.ஆட்சியை மத்தியிலிருந்து விரட்ட -

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணையட்டும்!

குறுக்கு வழிகளில் எதிர்க்கட்சிகளையெல்லாம் கவிழ்த்து வந்த பி.ஜே.பி.,க்குப் பீகாரில் மரண அடி கொடுக்கப்பட்டுவிட்டது. பீகாரைப் பின்பற்றி மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் உள்ள பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை வீழ்த்திட முன்வரவேண்டும் என்று    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று பீகார் மாநிலம்.

உ.பி.க்கு அடுத்தபடியாக இருந்தது; அதைப் பிரித்தார்கள், உ.பி. போலவே என்றாலும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் அதுவும் முக்கியமான ஒன்று.

சமூகநீதியாளர்கள் அனைவருக்குமே பெரும் உற்சாகத்தையும், குதூகலத்தையும் தருவதாகும்!

எட்டாவது முறையாக நேற்று (10.8.2022) முதலமைச்சர் பதவியேற்ற நிதிஷ்குமார் அவர்களும், அவருடன் மெகா கூட்டணி அமைத்து, துணை முதலமைச்சராக ஆகியுள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேஜஸ்வி (யாதவ்) அவர்களும், சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து, பீகாரில் ஜனநாயகம் தழைக்கவும், சமூக நீதிக் கொடி தலைதாழாது பறக்கவும் ஒரு சமூகநீதி ஆட்சியை உருவாக்கிக் காட்டியுள்ளனர். மதவெறி - வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுக்கும் வண்ணம் அந்த மாநிலத்தை மதவாதத்திலிருந்து காப்பாற்றி, ஜனநாயகத்தையும், இந்திய அரசமைப்புச் சட்ட பீடிகை வலியுறுத்தும், ‘‘இறையாண்மையுள்ள சமதர்ம, மதச்சார் பற்ற, ஜனநாயகக் குடியரசினை''யும் ஏற்படுத்தியுள்ளனர். மக்களாட்சி முறையின் மாண்புகளைக் காப்பாற்றிடும் ஆட்சி தக்க சமயத்தில் அங்கே - அசோக சாம்ராஜ்ய மண்ணில் ஏற்பட்டுள்ளது என்பது பீகார் மக்களுக்கு மட்டும் மகிழ்ச்சி தருவதல்ல; இந்திய முற்போக்காளர்கள், சமூகநீதியாளர்கள் அனைவருக்குமே பெரும் உற்சாகத் தையும், குதூகலத்தையும் தருவதாகும்!

அய்க்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி. - லாலுபிரசாத் அவர்களது கட்சி இணைந்து) அமைத்துள்ள இந்தக் கூட்டணி - மெகா கூட்டணியாக - செக்யூலர் ஃப்ரண்ட் (Secular Front)  ஆக அமைந் துள்ளது, நிச்சயம் பீகாரில் ஜனநாயகம் தழைக்கவும், இந்தியாவில் அரசமைப்புச் சட்ட நெறி முறைகளுக்கு விடை கொடுத்தனுப்பும் காவி - கார்ப்பரேட் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு சரியான மாற்றாகவும் திகழும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

பீகார் மக்களின் நியாயமான இரண்டு ஒருமித்த கோரிக்கைகளை மோடி தலைமையில் உள்ள 

ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய ஆட்சி நிறைவேற்றாமல் பீகார் மக்களின் அவநம்பிக்கையை பெற்றதன் விளைவே இது!

பீகார் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர்!

1. பீகார் மாநிலத்திற்கு தனிச் சிறப்பு அந்தஸ்து தருவதாகவும், அதற்கென பெரும் நிதி உதவி செய்வ தாகப் பல தேர்தல்களில் கூறிய வாக்குறுதி நீர்மேல் எழுத்தாகியது; பீகார் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர்!

2. அதுபோலவே, அத்துணைக் கட்சிகளும் பீகார் மாநில பா.ஜ.க. உள்பட சமூகநீதி (இட ஒதுக்கீடு) அனைவருக்கும் சட்டப் பாதுகாப்புடன் கிடைக்க ஒரே சரியான வழி, ஜாதி வாரி கணக்கெடுப்பு  (Caste wise Census) எடுக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

மிஞ்சியது  ‘‘பட்டை நாமமே!''

டில்லிக்கு அனைத்துக் கட்சி குழுவுடன் பீகாரிலிருந்து சென்று, பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வற்புறுத்தியும் அவர்களுக்கு மிஞ்சியது  ‘‘பட்டை நாமமே!''

இதன் விளைவுதான், அதிருப்தி; எதிர்ப்பு மேகங்கள் திரண்டு பா.ஜ.க. ஆட்சியை பீகாரில் காணாமற்போகச் செய்து, சமதர்ம  ‘‘அசோக'' மக்களாட்சி அந்த மண்ணில் மலர்ந்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி அவர்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்கள் இல்லா 

தனி மரமாகவே பா.ஜ.க. இருக்கிறது

‘‘பா.ஜ.க. அமைத்துள்ள அதன் கூட்டணியில் (தேசிய ஜனநாயகக் கூட்டணி - என்.டி.ஏ) உள்ள எதிர்க்கட்சி களைக் கூட அழிப்பது, ஒழிப்பதுதான் அதன் முக்கிய இலக்காக உள்ளது; எனவே, ஹிந்தி பிரதேச மாநிலங் களில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., அதன் கூட்டணிக் கட்சிகளின் தோழமை எங்குமே இல்லை - நண்பர்கள் இல்லா தனி மரமாகவே பா.ஜ.க. இருக்கிறது!

இதனை உண்மைதான் என்று ஒப்புக் கொள் வதைப்போன்று, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இனி எதிர்வரும் காலத்தில், பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இந்தியாவில் இருக்காது என்றாரே! குறிப்பாக பிராந்திய கட்சிகள் என்று அழைக்கப்படும் மாநிலக் கட்சிகளை முழுவதுமாக அழிப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் என்று கூறு வதல்லாமல் இது வேறென்ன?'' என்ற தேஜஸ்வியின் கேள்வி சரியானதுதானே?

நிதிஷ்குமாரை சுதந்திரமாக செயல்பட விடவில்லை ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (தேர்தலில் பல சூழ்ச்சிகளுக்குப் பிறகும்கூட) தனிப் பெரும் கட்சியாக 79 இடங்களிலும், அய்க்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும், பா.ஜ.க. 77 இடங்களையும் சட்டமன்றத்தில் பெற்றுள்ள நிலையில், தனித்த பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்புக்கூட விடாமல், ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் அவர்களை முதலமைச் சராகப் பதவியேற்க அனுமதித்ததாலும், அவரது இறக்கைகளை வெட்டி பறக்கவிட்டதுபோல, அவரை சுதந்திரமாக செயல்பட விடாமல், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கவனமாகப் பார்த்துக் கொண்டது!

இன்றைய மவுனமான 

ஜனநாயகப் புரட்சி, பீகாரில்!

அந்த வேதனை வெடிப்புதான் இன்றைய மவுனமான ஜனநாயகப் புரட்சி, பீகாரில்!

1. ராஷ்டிரிய ஜனதா தளம் - 79

2. அய்க்கிய ஜனதா தளம் -  45

3. காங்கிரஸ் - 19

4. இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். - 12

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2

6. ஹந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 4

7. ஏ.அய்.எம். எம்.அய். கட்சி - 1

சுமார் 164 எம்.எல்.ஏ., க்களின் பெருத்த மெஜாரிட்டி யுடன் இந்த மெகா கூட்டணி பதவியேற்றுள்ளது!

இந்திய தேசிய காங்கிரஸ் தனது ஆதரவைத் தர உடனடியாக முடிவெடுத்தது மிகவும் வரவேற்கத்தக்க நல்ல திருப்பமான முடிவு!

2015 இல் ‘‘ஆபரேஷன் தாமரை'' மூலம் ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க.!

2015 இல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் - நிதிஷ்குமார் - தேஜஸ்வி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. (பிரதமர் மோடி பலமுறை தேர்தல் பிரச்சாரம் செய்த பின்னரும்கூட!) ஆனால், அந்த ஆட்சி - அமைத்தும்கூட பா.ஜ.க., அதற்கே உரிய ‘‘வித்தைகளை'' கையாண்டது.

‘‘ஆபரேஷன் தாமரை'' மூலம் அவ்வாட்சியைக் கவிழ்த்து, பா.ஜ.க. - நிதிஷ் ஆட்சியாக அதனை மாற்றி, அப்போது ஜனநாயகப் படுகொலை நடத்தியவர்கள்; இப்போது நிதிஷ்குமாரைப் பார்த்து, ‘‘எங்களை (பா.ஜ.க.வை) கவிழ்த்துவிட்டீர்களே'' என்று கேட்க, என்ன தார்மீக உரிமை உள்ளது?

மக்களிடம் வாக்குகள் வாங்கி, 

அவர்கள் ஆதரவுடன் அமைக்கப்படுகின்ற ஆட்சி அல்ல - பா.ஜ.க. ஆட்சி!

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி! பிறகு, இப்போது 17 மாநிலங்களில் ஆட்சி என்பது, ‘‘ஆபரேஷன் தாமரை'' என்ற ‘வித்தை'யின்மூலம் - எம்.எல்.ஏ.,க்களை கட்சி மாறச் செய்து அமைக்கப்பட்ட ஆட்சிகள்தானே ஒழிய, மக்களிடம் வாக்குகள் வாங்கி, அவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட பா.ஜ.க ஆட்சி அல்ல. (அண்மையில் உள்ள புதுச்சேரியில் பா.ஜ.க. எப்படி ஆட்சிக்கு வந்தது?).

மத்திய நிறுவனங்கள், சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு  உள்பட இந்தத் ‘‘திரிசூலம்'' தானே ஜனநாயக முறையை வீழ்த்திட பயன்படுத்தப்பட்ட ஆயுதம்!

‘‘முற்பகல் செய்தது; பிற்பகல் விளைகிறது!'' 

அவ்வளவுதான்!

‘2024 இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது' என்று நிதிஷ்குமார் முதலமைச்சராக (8 ஆவது முறை) பொறுப்பேற்ற உடன் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத் தக்க திருப்பம் - ‘‘விடியலை நோக்கி வெள்ளி முளைக்கத் தொடங்கிவிட்டது'' என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டைப் போலவே, ‘திராவிட மாடல்' ஆட்சியாக அவ்விரு தலைவர்களுடன் கரம் கோர்த்த கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பு - தன்முனைப்புத் தலைதூக்காது, மதச்சார்பற்ற கொள்கையை முன் னிறுத்தி,, பொது எதிரியான மதவாதத்தினை அனு மதிக்காது - சமூகநீதிக்கு எதிரான ஆட்சிக்கு பீகார் மண் இடந்தராது என்று காட்டிய அத்துணைத் தலைவர் களையும் தமிழ்நாடு பெரியார் மண் -  சமூகநீதி மண் - ‘திராவிட மாடல்' மண் வாழ்த்தி மகிழ்கிறது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.8.2022


No comments:

Post a Comment