சென்னை, ஆக. 26- தமிழ்நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கரோனாவுக்கு பிறகான பொருளாதார சூழல் ஆகியவை அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரித்துள்ளது. தற்போது அரசுப் பள்ளிகளில் 72 லட்சம் மாணவர்கள் பயின்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல அதாவது கரோனா கால கட்டத்திற்கு முன்பு இருந்தது போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த வருடங்களில் நிலவிய கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த இக்கட்டான சூழலில் தனியார் பள்ளிகளில் பயில கூடிய குழந்தைகளின் பெற்றோர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் தனியார் பள்ளியில் பயிலும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டினர்.
அதனை தொடர்ந்து அரசு பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்தத் தொடங்கியது. இதனால் கடந்த 2 வருடங்களாக அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதி கரித்து காணப்படுகிறது. தற்போது 72 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இன்னும் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022 - 2023ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அரசு அடுத்த மாதம் வரை நீட்டித்துள்ளது.மேலும் மாணவர் சேர்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கையும் பள்ளிக்கல்வித் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகம் மற்றும் பிற உபகரணங்களை வழங்கி வருகிறது. அத்துடன் திறன்மிகுந்த (ஸ்மார்ட்) வகுப்பறை, தரமான கற்றல் பணி ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றது. அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படையான வசதி களும் செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது பள்ளி மேலாண்மை குழுக்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment