பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதா?

மயிலாடுதுறையைச் சேர்ந்த திருவிழந்தூர் பெருமாள் கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பூரணச்சந்திரன் (28). எட்டாம் வகுப்பு படித்த இவர், புரோகிதர் வேலை செய்து வருகிறார்

இவர் தன்னுடன் தொழில் முறையில் பழக்கத்தில் உள்ள திருப்புங்கூர், மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ் வரன் கோயில், திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களிடம், ஜெர்மனியில் நாதஸ்வரம் மற் றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். இவ்வாறு 26 இசைக் கலை ஞர்களிடமும், ஜெர்மனியில் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதன் மூலம் ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை வசூ லித்துள்ளார். இவ்வாறு பெறப்பட்ட பணம் அனைத்தும் - வெளிநாடு செல்ல விசா, பயணச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி, மொத்தம் ரூ.54.30 லட்சம் வரையிலும் பெற்றுள்ளார். மேலும், அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான போலி ஆவணங்கள் மற்றும் போலி விசாவும் கொடுத்துள்ளார். தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி, இவர்களில் 15 பேரை மட்டும் வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்களை விட்டுவிட்டு, பூரணச்சந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதனை அறியாத இசைக் கலைஞர்கள், விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கு வழங்கப்பட்டதும் போலி விசா மற்றும் போலி பயணச்சீட்டு என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து இசைக்கலைஞர்கள் அனைவரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் என்.எஸ்.நிஷாவிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், மயிலாடுதுறை காவல்நிலையத் தில் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பூரணச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து காவல்  உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர்,  தலைமறைவான பூரணச் சந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் பூரணச்சந்திரனின் ‘செல்போன் டவரை' ஆய்வு செய்ததில், அவர் சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், பூரணச்சந்திரனைக் கைது செய்து மயிலாடுதுறை அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

இதனிடையே பூரணச்சந்திரன் கைதானதை அறிந்த இசைக்கலைஞர்கள் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், கைதான பூரணச்சந்திரன் மலேசியா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.தொடர்ந்து, அவரின் கடவுச்சீட்டு மற்றும் ரூ.12 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பக்தி ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும், கட்டுப்பாட்டைக் கற்பிப்பதாகவும் கூறுவதில் ஒன்றும் குறைச்சல் இல்ல.

புரோகிதனாக இருக்கக்கூடிய ஒருவன் இத்தகைய மோசடி வேலையில் ஈடுபடுவதைப் பார்த்த பிறகும் - பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது விளங்கவில்லையா?

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதன் கோயில் தேவநாதனும் - சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பத்ரிநாத் என்ற அர்ச்சகப் பார்ப்பானும் கோயில் கருவறையில் கருவை உண்டாக்கும் கீழ்த்தரத்தில் ஈடுபட்டதை என்னவென்று சொல்லுவது!

சங்கர மடங்களும், குருமூர்த்தி, தினமலர், சங்பரிவார் வகையறாக்களும் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களாம்!

வெட்கக் கேடு! மகா வெட்கக் கேடு!!

No comments:

Post a Comment