ஆயுதங்களின் அணிவகுப்பே ‘விடுதலை' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

ஆயுதங்களின் அணிவகுப்பே ‘விடுதலை'

அறிவாயுதம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மதத்தின் பெயராலும்,கடவுளின் பெயராலும் ஜாதி யின் பெயராலும், பார்ப்பன சனாதனத்தால், மூளையின் அறிவுப்பகுதியை செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப் பூட்டப் பட்ட கடினமான விலங்கின் கண்ணிகளை, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விச் சுத்தியலால் உடைத்து நொறுக்கி, "நீ விலங்கல்ல. ஆறறிவு உடைய மனிதன். உன் தலைக்குள் இருக்கும் மூளை என்ற பகுதியை பயன்படுத்து. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்னும் வள்ளுவரின் கூற்றை வாழ்நாள் வழி முறையாய் கொள்.

என முழங்கினார் அறிவு ஆசான் தந்தை பெரியார். 

உறங்கிக் கிடக்கும் மனித மூளைகளே! விழித்துக்கொள்ளுங்கள்!

 உறைந்து கிடக்கும் மனித மூளைகளே! உணர்வைப் பெறுங்கள்!

என்று மூளை மயக்கத்தில் இருந்த மனிதர்களை தட்டி எழுப்ப அறிவாசான் தந்தை பெரியார் ஏந்திய அறிவாயுதம் தான் ‘விடுதலை'.

பேராயுதம்

ஒரு ‘விடுதலை' இதழின் ஒட்டுமொத்த எடை என்பது மிகமிகக் குறைவுதான். எனினும் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட பீரங்கிகளை விட வலிமையா னவை ‘விடுதலை'யின் எழுத்தாயுதங்கள்.

கொலை! கொலை! வகுப்புரிமை கொலை! என ‘விடுதலை' துப்பாக்கியி லிருந்து கிளம்பிய அறிக்கை தோட்டாக்கள் தான் 1951இல் மாபெரும் மக்கள் எழுச்சிக் கான போராட்ட நெருப்பை பற்ற வைத்தது . வகுப்புரிமை பக்கங்களில் இட ஒதுக்கீட்டு உரிமைச்சாசனம் எழுதப்பட தூண்டு கோலாக இருந்த பேராயுதம் ‘விடுதலை'...

போராயுதம் 

போர்! போர்! நம்நாட்டில் எப்பொழுதுமே போர்! போர்தான்! சதியால், வஞ்சகத்தால், காட்டிக் கொடுக்கும் துரோகிகளால், மயங்க வைக்கும் முகமூடிகளால், மோகினி அவதா ரங்களால் ஆதிக் குடிமக்களான திராவிட இனத்தின் மீது பார்ப்பன ஆரிய இனம் காலங்காலமாய் தொடுத்துக் கொண்டே இருக்கும் போர். உதாரணத்திற்கு,

கணக்கியல் நோக்கில் 2ஜி யில் அனு மான இழப்பு என்பதையே ஊழல்! ஊழல்! என்று ஓயாது ஊளையிட்டு ஒரு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை தமிழ்நாட் டில் வர விடாமலும், ஒன்றிய அரசில்  திமுக கூட்டணிக் கட்சியாக அங்கம் வகித்த காங்கிரஸ்  வர விடாமல் தடுக்கவும் ஆரியப் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது தொடுத்த 2ஜி ஊழல் என்னும் வஞ்சக போர் ஒரு சான்றாதாரம். 

தங்களுக்கான ஆட்சி தங்கள் நலத் திற்கான ஆட்சி மத்தியில் நடைபெறுகின்ற நேரத்தில் 5ஜி யில் மாபெரும் இழப்பு என்றால்கூட, சுமந்த் சி.ராமன், நாராயணன் போன்ற பார்ப்பன பிரபலங்களின் வாய் களெல்லாம் மூடிக்கொள்ளும்..

ஒலிவாங்கி கிடைத்தால் போதும், 1 லட்சத்து 76,000 கோடி என்று ஊளையிட்ட ஓநாய்களின் நாக்குகள் எல்லாம் தொண் டையில் மாட்டிக் கொண்டு விட்டன.அந்தக் காலகட்டத்தில் 2ஜி பற்றி தெளிவாக அறிக்கை எழுத, தமிழர் தலைவர் கையி லெடுத்த பேராயுதம் தான் ‘விடுதலை' இதழ்.

கூராயுதம்

பார்ப்பன சனாதனத்தை எதிர்க்க எத் தனை எத்தனையோ மாற்றுச் சிந்தனையா ளர்கள், இயக்கங்கள் ஆயுதங்களை ஏந்தி போராடி இருந்தாலும், வஞ்சகப் பார்ப்பனி யம் அந்த ஆயுதங்களை முனை மழுங் கடித்ததாலும், பக்கம் நின்று போராடிய வர்கள் திடீர் திடீரென்று துரோகிகளாய் மாறி, பார்ப்பனர்களிடம் அடகு வைக்கப் பட்ட அவலத்தாலும்,கவனக் குறைவாகவும், ஆராய்ச்சிக் குறைவாகவும், இலக்குகளை தவறாக நிர்ணயித்ததாலும்,போராடிப் போராடி சோர்ந்து போனதாலும்,நிரந்தரமாக வெற்றி அடைந்திருக்க முடியவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகள் முன் தோன் றிய புத்தர், பவுத்த மதத்தை தோற்றுவித்து பார்ப்பனியத்தை வெற்றி கொண்ட நிலையில், அரவணைத்து அழித்தொழிக்கும் நரித்தனத்தை பயன்படுத்தி, இரை ஆட்டை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் மலைப் பாம்பு போல், பார்ப்பனியம் பவுத்தத்தையும் விழுங்கத் துவங்கியது.

தந்தை பெரியார் ஒருவர் தான் ஜாதி ஒழிப்பு என இலக்குகளை (vision) சரியாக கணித்தார்.

அந்த இலக்கை அடைய வேண்டிய சரியான வழிமுறைகள் (mission) கடவுள் மறுப்பு என்பதையும் ஆராய்ந்து கண் டறிந்தார்.

வேதங்களை ராமாயண, மகாபாரதங் களை, புராணங்களை ஆராய்கின்ற பொழு தும், தன்னுடைய ஆயுதத்தை கூர்மைப் படுத்திக்கொண்டே வந்திருந்தார். பார்ப்பன சனாதன தர்மத்தை நேரடியாக குத்திக் கிழித்தெறிந்து ஜாதியற்ற  சமத்துவ உலகை படைக்க பெரியார் அய்யா தேர்ந்தெடுத்த கூராயுதம் தான் ‘விடுதலை'.

கருத்தாயுதம்

இந்துத்துவ பார்ப்பனியம், திராவிடத்து வத்தின் மீது வைக்கின்ற அத்தனைக் கேள்விகளுக்கும் சரியான பதில்களை  அளித்துக் கொண்டே இருக்கின்ற இதழ் ‘விடுதலை'.

திராவிடத்துவத்தின் மீது வாரி வாரி இறைக்கப்படும் அத்தனை அவதூறு கருத் துகளுக்கும் சரியான மறுப்புக் கருத்தினை எழுதும் இதழ் ‘விடுதலை'.

இதற்காகவே கவிஞர் அவர்கள் மூளை யின் ஒரு பக்கம் சிந்தித்துக் கொண்டே இருக்கும். ‘விடுதலை'யின் கருத்துக்களுக்கு மறுப்பு கருத்து சொன்னவர்கள் இதுவரை யிலும் யாரும் இல்லை.

அண்மையில் கலைஞரின் பேனாவுக்கு சிலை வைப்பது வரலாற்றுப் பெருமை என தமிழர் தலைவர் ‘விடுதலை'யில் விடுத் துள்ள அறிக்கை ஒரு சான்று..

இதழில் அச்சுப்பிழைகள் வந்திருக் கலாம். கருத்துப்பிழைகள் ஒரு நாளும் வந்ததில்லை. எனவே பார்ப்பனியத்தை எதிர்த்து போராட்டக்களத்தில், போராடும் அனைவரும் கையில் ஏந்த வேண்டிய கருத்தாயுதம் ‘விடுதலை'.

ஆர்.எஸ்.எஸ்.சின் அரவணைப்பில் ஒன் றியத்தில் பா.ஜ.க.  ஆட்சி நடத்தும் இந்தக் காலத்தில் கருத்தாயுதமாம் ‘விடுதலை' வீடு தோறும் படிக்கப் பட வேண்டியது ஒரு வரலாற்றுக் கடமை!

தன்னுரிமை வேண்டுவோர், பெண்ணு ரிமை வேண்டுவோர் ,

மண்ணுரிமை வேண்டுவோர்,

ஜாதி ஒழிப்புப் போராளிகள்,

பார்ப்பனச் சிறைகளிலிருந்து, தங்கள் மூளைகளை மீட்டுக்கொள்ள விரும்புவோர் ஆகிய அனைவரும் படிக்க வேண்டிய இதழாயுதம் ‘விடுதலை'.

ஆண்டு சந்தா 2000.

மாதக்கணக்கைப் போட்டால் வெறும் 165 ரூபாய். மாதத்தில் ஒரு நாள், ஒரே நாள்

குடும்பத்துக்கு வாங்கும் நொறுக்குத் தீனியைக் கொஞ்சம் நிறுத்தினாலே, ரூ. 2000த்தை ‘விடுதலை'க்கு ஒதுக்கலாம்.

விடுதலை படிப்போம்.

ஊரெங்கும்,தெருவெங்கும், வீடெங்கும் பரப்ப சந்தாக்களை சேர்ப்போம்..

- தகடூர் தமிழ்ச்செல்வி

 மாநில மகளிர் அணி செயலாளர்


No comments:

Post a Comment