‘மனு அநீதிக்’ கட்சியின் வேட்பாளர் சமூகநீதிவாதியாம்! பேராசிரியர் அருணன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

‘மனு அநீதிக்’ கட்சியின் வேட்பாளர் சமூகநீதிவாதியாம்! பேராசிரியர் அருணன்

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னைக்கு வந்து ஆதரவு தேடியிருக்கிறார். அவருக்கு அதிமுகவின் எடப்பாடியும் - பன்னீரும் ஒருங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்! இருவருக்கும் இடையே பெரும் மோதல்தான். அந்த மேடையில்கூட இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அவ்வளவு கோபம்! ஆனால் பாருங்கள், பாஜக வேட்பாளரை ஆதரிப்பதில் மட்டும் அவ்வளவு ஒற்றுமை! இவர்களுக்கிடையேயான மோதலில் கொள்கைப் பிரச்சினை ஏதுமில்லை, உள்ளது எல்லாம் அதிகாரப் போட்டியே என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கேட்டால், “வேட்பாளர் பழங்குடியினப் பெண், சமூக நீதி” என்று கூறிக் கொள்கிறார்கள். தாங்கள் ஆதரிப்பது மட்டுமல்லாது, திமுக ஆதரிக்கா ததை சமூகநீதியின் பெயரால் குற்றமும் சொல்லுகிறார்கள்! பா.ம.க. தலைவர் அன்புமணியும் இதே போலப் பேசியிருக் கிறார்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்த்து சூத்திரர்களையும், பஞ்சமர்களையும், அனைத்து வருணத்துப் பெண்களையும் ஒடுக்குவதுதான் சனாதன தர்மம். அதை  நிலைநாட்டத் துடிப்பவர்கள், சமூகநீதிக் காகவா திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவார்கள்? நிச்சயம் இல்லை; இதுவொரு ஏமாற்று வித்தை. இதை இவர்கள் வெகுகாலமாக அர சியல் அரங்கில் செய்து வருகிறார்கள். முஸ்லிம்களை ஒடுக்குவார்கள்; அதை  மறைக்க அப்துல்கலாமை குடியரசுத்தலை வர் ஆக்குவார்கள்! தலித்துகளை ஒடுக்கு வார்கள்; அதை மறைக்க ராம்நாத் கோவிந்த்தை குடியரசுத் தலைவர் ஆக்கு வார்கள்! பழங்குடியினரையும் பெண்களை யும் ஒடுக்குவார்கள்; அதை மறைக்க திரவுபதி முர்முவை குடியரசுத்தலைவர் வேட்பாள ராக நிறுத்தியிருக்கிறார்கள்!  இந்தப் பித்தலாட்டம் கண்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவு மக்களுக்கு அவர்களில் ஒருவரை ஓர்  உயர் பதவியில் அமர்த்துவதால் மட்டும் நீதி கிடைத்து விடாது. அந்த மக்களின் சமூக வாழ் நிலையை உயர்த்த என்ன செய்யப்பட்டது என்பதே பிரதான கேள்வி. ஒரு பெண்மணி என்கிறார்களே, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண் களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு பற்றி பா.ஜ.க. வாயைத் திறந்தது உண்டா இந்த  எட்டு ஆண்டுகளில்? அல்லது இந்தப் பெண் மணியாவது அதற்காகப் போராடிப் பார்த்தது உண்டா? 

சமூக நீதி பற்றி பேசுகிற கட்சிகள் எல்லாம்  பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது சந்தன மணத்தை முகர விரும்பு கிறவர்கள் எல்லாம் சாணத்தை மோந்து பார்க்க வேண்டும் எனச் சொல்வதற்கு ஒப்பாகும். அதிமுகவும் - பாமகவும் செய்யும்  அந்தச் செயலை மற்ற கட்சிகள் செய்யாது.  அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு அடுத்தடுத்து செய்யும் அநீதிகள் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை இந்த  அதிமுகவும் பாமகவும். நீட்டை, இந்தித்  திணிப்பை, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சத்தை  எதிர்ப்பதாகச் சொல்லும் இதே கட்சிகள்தாம் அவற்றை விடாப்பிடியாகத் திணிக்கும்  மோடியின் இந்த வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்! இப்படியாக தமிழ் நாட்டிற்கு பெரும் துரோகம் செய்கிறார்கள்.  மோடி அரசின் 8 ஆண்டு சாதனை எதிர்க்கட்சிகள் ஆளும் 10 மாநில அரசு களைக் கவிழ்த்தது, இதற்காக பல நூறு  கோடி ரூபாய்க்கு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது! இந்த அரசியல் அசிங்கத்தை “ராஜதந்திரம்” என்று போற்றுகிற அறிவு ஜீவி சங்கிகள் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள். மனுஅதர்ம சாஸ்திர ஆட்சியை நிலைநிறுத்த இவர்கள் சாணக்கிய சாஸ்திரம் எனும் அதர்மப் பாதையில்தான் போவார்கள்.  சனாதன-பெருமுதலாளித்துவ கள்ளக் கூட்டு ஆட்சியில் முதல் பலி சமூக நீதிதான், அடுத்த பலி ஜனநாயகம் தான். அதற்கு அடுத்த பலி மாநிலங்கள்தான்!  இவற்றுக்கெல்லாம் தயக்கமின்றி கையெழுத்துப் போடப் போகிறவரைத் தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது பாஜக!  தமிழ்நாட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, ஒரு முறையல்ல நூறு முறை யோசித்து வாக்களியுங்கள்.

நன்றி: 'தீக்கதிர்' 4.7.2022


No comments:

Post a Comment