Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
எனது விண்ணப்பம்
July 24, 2022 • Viduthalai

 தந்தை பெரியார்

இன்று முதல் “விடுதலை” காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிகை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன். இதை அறிந்தோ அறியாமலோ தமிழ் மக்கள் பலரும் இப்படிப்பட்ட பத்திரிகையில்லாக் குறைவை எனது கவனக்குறை என்று குற்றம் சாட்டியும் ஊக்கப்படுத்தியும் பல தீர்மானங்களும் வேண்டுகோளும் செய்த வண்ணமாய் இருந்தார்கள். இதுவரை நான் எடுத்து வந்த பல முயற்சிகள் கைகூடாமல் போய் விட்டதானாலும் தமிழ் மக்கள் வாழ்வுக்கே கேடு உண்டாகும் படியான நிலையில் எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத் தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாக காணப்பட்டதாலும் அதற்கு பெருங்காரணம் ஒரு தமிழ் தினசரி வர்த்தமானப் பத்திரிகை இல்லாதது என்று உணர்ந்ததாலும் அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து மற்றத் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும் நான் உண்மையாய் உணர்ந்ததால் எவ்வளவு நஷ்டமும் தொல்லையும் ஏற்பட்டாலும் சரி, அவற்றை சமாளிக்கத் தமிழ் மக்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக் கையின் மீது துணிந்து ஒரு தினசரி தமிழ்ப் பத்திரிகை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டு விட்டேன். இதற்கு ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் அனுதாபிகளும் ஆதரவளிப்பதாக வாக்களித்ததால் எனது துணிவு சீக்கிரத்தில் என்னை காரியத்தில் இறக்கி அனுபவத்தில் கொண்டுவர அனுகூலமாக்கி விட்டது.

ஆகவே விடுதலை தினசரி பத்திரிகையானது ஈரோட்டில் இருந்து வந்தாலும் எனது மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகிறது என்றாலும் அதன் கொள்கையானது ஆதரவாளிகளின் விருப்பத்திற்கிணங்க அதாவது விடுதலை சென்னையில் நடந்த பொழுது எந்த கொள்கை என்ன நோக்கம் கொண்டு நடந்து வந்ததோ அது போலவே நடத்தப்படும். என்னால் நடத்தப்படும் மற்றப் பத்திரிகைகளாகிய “குடி அரசு”, “பகுத்தறிவு” ஆகிய இரண்டு பத்திரிகைகளும் முன் போலவே அவற்றின் கொள்கைகளை முன்னிலும் அதிகமாகக் கொண்டு வலியுறுத்தும் முறையில் நடைபெறும். விடுதலையானது கொள்கை விஷயத்தில் அது இதுவரை கொண்டு வந்த தனது கருத்தை எக்காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளாது என்பதோடு மற்ற விஷயங்களில் பெரிதும் பொதுவர்த்தமானப் பத்திரிகை போலவே நடைபெறும்.

தமிழ் நாட்டில் வருணாச்சிரம தர்மத்துக்கும் முதலாளிகள் ஆட்சிக்கும் எதிராக பத்திரிகைகள் நடத்துவது என்பது மிகவும் கஷ்டமும் நஷ்டமும் தொல்லையுமான காரியம் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே நான் இதுவரை பத்திரிகை உலகிலும் பொதுவாழ்விலும் அநேக கஷ்ட நஷ்டங்களுடன் பல தொல்லைகளும் அனுபவித்து வந்திருக்கிறேன். எனது மற்றப் பத்திரிகைகள் எப்படி அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப் பட்டு நடைபெற்று வருகிறதோ அதுபோலவே தான் விடுதலையும் அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடத்த அனுமதிக்கப் பட்டிருக்கிறது. நான் அரசாங்கத்துக்கு வேண்டியவன் என்றும் மந்திரி களுக்கு வேண்டியவன் என்றும் எதிரிகள் விஷமப்பிரசாரம் செய்து வந்ததை பொது ஜனங்களில் சிலரும் நம்பி சர்க்காரின் சில குற்றமான காரியங் களுக்கும் மந்திரிகளின் சில கவலையீனமான - சுயநலமான காரியங்களுக்கும் நான் ஆதரவளித்து வருவதாகக் கருதி வருவதும் எனக்கு தெரியும்.

ஆனால் நடு நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும் ஜாமீன் கேட்டல் - பறிமுதல் செய்தல் ராஜத்துரோகக் குற்றம் சாட்டி தண்டித்தல் முதலிய சம்பவங்களை கூர்மையாய் கவனிப்பவர்களுக்கும் நான் அரசாங்கத் தையும், மந்திரிகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறவனா அல்லது அவர்கள் அதிருப்திக்கு ஆளாகி தொல்லைப்படுத்தப்படு கிறவனா என்பது விளங்கும். மற்றொரு உதாரணமும் எடுத்துக்காட்டுகிறேன். அதாவது இந்த “விடுதலை”க்கே 1000ரூ. ஜாமீன் கேட்ட தானது ஸ்தல அதிகாரியிடமிருந்து ஏற்பட்ட எண்ணமல்ல வென்றும் மந்திரிகள் ஆதிக்கத்திலிருந்து பிறந்தது என்றும் சொல்லத்தக்க ஆதாரம் பல இருக்கின்றன.

ஆனால் தமிழ் மக்களின் மனிதத்தன்மைக்கும் விடுதலைக்கும் சுதந்தர பிரதிநிதித்துவத்திற்கும் அனுகூலமான காரியங்கள் சர்க்காரும் மந்திரிகளும் செய்ததற்கு ஆகவோ செய்து வருவதற்கு ஆகவோ செய்வதாக கருதி இருப்பதற்கு ஆகவோ தமிழ் மக்களின் எதிரிகளாலும் எதிர் ஸ்தாபனங்களாலும் எதிரிகளின் ஆதரவில் வாழ்வு நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களாலும் குறை கூறப்படும் காலங்களிலும் தடை செய்யப்படும் காலங்களிலும் விஷமப் பிரசாரம் செய்யப்படும் காலங்களிலும் அவற்றைப் பொறுத்த வரையில் மந்திரிகளையும் சர்க்காரையும் பிடிவாதமாய் கண் மூடித்தனமாய் ஆதரித்து வந்திருக்கிறேன், ஆதரித்தும் வருவேன் என்பதை எந்த நிலையிலும் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஏனெனில் அதற்கு ஆகவே நான் வாழ்கிறேன். அதற்கு ஆகவே சுவாசிக்கிறேன். அதற்கு ஆகவே என்னுடைய சகலத் தையும் ஆள்படுத்தி இருக்கிறேன்.

தமிழ் மக்கள் மனிதத் தன்மையும் விடுதலையும் சுதந்தர பிரதிநிதித் துவமும்தான் தேசம்; அவை தான் பூரண சுதந்தரம்; அவை தான் உயிர் நாடி. இதற்கு மாறான எதுவும் துச்சமே யாகும் என்பது எனது கருத்து.

இதைத் தமிழ் மக்கள் உணர்வ தில்லை என்பதும் உணர்ந்தாலும் அவர்களது வாழ்க்கை அமைப்பு இடம் தருவதில்லை என்பதும் இடம் தந்தாலும் அவர்களது சுயநலமும் அடிமைப் புத்தியும் காரியத்தில் நடந்துகொள்ள விடுவதில்லை என்ப தும் எனக்குத் தெரியும் என்றாலும் முடிந்த வரை முடியட்டும் என்று கருதியே தமிழ் மக்கள் ஆதரவை எதிர்பார்த்து “விடுதலை” ஊழியத்தில் இறங்கி இருக்கிறேன்.

உண்மையை சொல்லுகிறேன்

நான் இதுவரை ஒரு டொனேஷன் லிஸ்டையோ உதவித்தொகை வசூல் பட்டியையோ கையில்தூக்கிக் கொண்டு எந்த காரியத்துக்கு ஆகவும் பொதுஜனங்களைத் தேடிப் புறப் பட்டது கிடையாது. என்னால் கூடிய அளவு இந்த 40, 50 வருஷ கால மாகவே சந்தாபட்டியல் கையொப்ப மிட்டு என் சக்தி இஷ்ட அனுசாரம் கொடுத்துவந்ததையே - வருவதையே பழக்கமாகக் கொண்டவன். “விடுதலை”யின் காரணமாகவும் பல தோழர்களின் ஆலோசனை- வேண்டுகோள் காரண மாகவும் பல அபிமானிகள்முன் வசூல் புத்தகத்துடன் போகவேண்டிய நிலைக்கு வந்து விட்டேன். பலர் மகிழ்ச்சியை முகத்திலும் கையாலும் காட்டி வரவேற் றார்கள். பலர் அதுவல்லாததையும் செய்தார்கள். பலர் முன்னால் மகிழ்ச்சி காட்டி கையையும் தாராளமாய் காட்டி பல தடவை ஞாபகப்படுத்தியும் கவலையில்லாமலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வர்களுக்கு ஞாபகப்படுத்து வதினாலும் மற்றும் பலரிடம் சென்று பட்டியை நீட்டுவதினாலும் உண்மையிலேயே நான் இதுவரை அடைந்திராத வெட்கக்கேட்டை அடைகிறேன் என்பதை உணருகிறேன். ஆனால் இது, இந்த சொந்த வெட்கக்கேடு. தமிழ் நாட்டில் அதுவும் பெரும்பெரும் செல்வம் படைத்த ராஜாக்கள், ஜமீன் தார்கள், மிராசுதார்கள், பண்டார சன்னதிகள், லேவா தேவிக்காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ் தர்கள் ஏராளமாக உள்ள தமிழ் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டில்  - தமிழ் மக்கள் தன்மானத்துக்கும் தமிழ் மக்கள் விடுதலைக்கும் மாறாக தமிழ் மக்களின் பிறவி எதிரிகளால் நடத்தப்படும் தொல்லைகளையும் தடைமுறைகளையும் சமாளிக்கவோ எடுத்துக்காட்டவோ பாமர மக்கள் ஏமாந்து போகாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்ளவோ ஒரு தமிழ் தினசரி பத்திரிகை இல்லை என்னும் குறை தமிழ் நாட்டில் உள்ள எல்லாத் தமிழ் மக்களையும் சேரத்தக்க ஒரு பெரிய வெட்கக்கேடாயிருப்பதால் என் சொந்த வெட்கக்கேட்டை கவனியாமல் இப்பெரிய வெட்கக் கேட்டை நிவர்த்திக்க ஆதரவு தேட ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டத்துணிந்து விட்டேன்.

ஆதலால் வேறுவித அபிப்பிராய பேதம் எப்படி இருந்தாலும் தன்னை உண்மைத் தமிழ்மகன் என்று கருதும் ஒவ்வொருவரும் என்னை உண்மை உழைப்பாளி என்று கருதினால் ஒவ்வொருவரும் தங்களாலான உதவியைச் செய்து விடுதலைக்கு ஆதரவும் உதவியும் அளிக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறேன். பணம் உள்ளவர்கள் பணம் கொடுக்கலாம்; விளம்பரங்கள் கொடுத்து ஆதரிக்க வசதியுள்ளவர்கள் விளம்பரம் கொடுக்கலாம். சந்தாதாரரைச் சேர்த்து பணம் வசூலித்து அனுப்பக் கூடியவர்கள் சந்தா சேர்த்தனுப்பலாம். வாக்குச் சகாயம் எழுத்துச் சகாயம் செய்து பத்திரிகையின் தொண்டை பரவச்செய்ய வசதி உள்ளவர்கள் அத் தொண்டை பரப்பலாம்.

இவைகளிலும் இவைபோன்ற பிறவற்றிலும் ஒன்றும் செய்ய முடியாத உண்மைத் தமிழ் மக்கள் மனமொழி மெய்களால் இடையூறு செய்யாமல் இருக்கலாம். இதுவே விடுதலை மூலம் விடுதலைத்தொண்டு நடைபெறுவதற்கு அடியேனது விண்ணப்பமாகும்.

 01.07.1937 “விடுதலை” தலையங்கம்  


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn