ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: இலங்கையில் ஏற்பட்டுள்ள புரட்சி மக்களிடம் அதிகாரத்தைச் சேர்க்குமா?

- அ. தமிழ்குமரன், ஈரோடு

பதில்: சந்தேகந்தான்; என்றாலும் அதை நோக்கிய துவக்கம் இது. மக்கள் அதிகாரத்தின் வலிமை, வல்லாண்மையாளர்களுக்கு அச்சத்தைத் தருவது, ஒரு தடுப்பணைக்காவது பயன்படும்! இப்போது ஏற்பட்ட மாறுதல் ‘வாலு போச்சு கத்தி வந்தது டும் டும்’ என்பது மாதிரியான மாற்றமே!


கேள்வி : ஆஷ் மணிமண்டபம் புதுப்பிக்கப்படுவதை சிலர் கடுமையாக எதிர்ப்பது சரியா?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: ஆஷ் அவர்களின் சனாதனக் கொடுமை எதிர்ப்புக்கு மறுப்பாகவே - வைதிக சனாதன தர்மத்தின் பாதுகாவலராகவே - வாஞ்சிநாதன் அவரைக் கொலை செய்தார். - அதே சக்திகள் வாஞ்சிநாதனின் வாரிசுகள் இப்படி வாலாட்டி விளையாடுகின்றனர் போலும்.

கேள்வி: ஹிந்து கலாச்சார பாதுகாப்பு என்ற பெயரில் வட மாநிலங்களில் சில நகரங்களில்   பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகாரபூர்வமற்ற வகையில் தடைசெய்து அவர்களைத் தாக்குகிறார்களாமே?

- பிரபாகரன், வடக்கு பரணம்

பதில்: மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கும் அறப்போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் மக்களுக்கிடையே ஏற்படுத்திட வேண்டிய அவசியத்தை இது உணர்த்தவில்லையா?

கேள்வி: தேசிய ஊரக குடிநீர் திட்டம் என்ற பெயரில் குடிநீரை முழுமையாக விற்பனை செய்யும் திட்டம் தயாராக உள்ளதே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: அந்தோ ஜனநாயகமே! அதிலும் கார்ப்பரேட் ராஜ்யம் வந்தால் அதிசயமில்லை.

கேள்வி: அரசு நிகழ்ச்சிகளில் மதச்சடங்குகள் தவிர்க்கப்பட சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா?

- அன்புமணி, காட்டுமன்னார்கோயில்

பதில்: நீதிமன்றங்களில் சில வேளைகளில் “பயிரையே வேலி மேயும் நிலையும்” இருப்பதால், அது சரிப்பட்டு வராது. தேவையற்று வம்பை விலைக்கு வாங்குவதாகி விடும்(பிற்போக்குத்தனம் படமெடுத்தாடுகிறதே).

கேள்வி: பள்ளிகளுக்குக் கயிறு கட்டிக்கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கையில் கயிறு கட்டியுள்ளார்களே?

- த.மணிமேகலை, வீராபுரம்

பதில்: மில்லியன் டாலர் கேள்வி - பதில் அளிப்பது சற்று சிக்கல்தான்!

கேள்வி: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்குத் தமிழ்தான் கட்டாயம் என்ற அரசாணை வெளியிடப்படாததால், பாலிடெக்னிக் ஆசிரியர் நியமனத்தில் ஏராளமான வெளிமாநிலத்தவர் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறதே?

- க.கார்த்திகேயன், ஆண்டிமடம்

பதில்: தமிழ்நாடு தேர்வாணைய விதிகளில் உள்ளபடி தமிழைக் கட்டாயமாக்கி, எல்லா வேலைவாய்ப்புத் துறைகளிலும் அமலாக்கப்படுவது அவசரம்; அவசியம்.

கேள்வி: “விடுதலை”யின் 88 ஆண்டு கொள்கைப் பயணத்தில் 60 ஆண்டுகள் பயணித்த தங்கள் காலத்தில் விடுதலை ஏட்டின் சாதனைகளில் முதன்மையாக எதைக் கருதுகிறீர்கள்?

- நித்தியா, வளசரவாக்கம்

பதில்: “விடுதலை” ஏடு தொடர்ந்து வெளி வருவதைத் தடுக்கும் வகையில், வருமான வரித்துறையால் இதை நிறுத்திட அறிவுறுத்தி, அச்சுறுத்தி முட்டுக்கட்டை போட்ட முயற்சியை சட்டப் போராட்டத்தாலேயே முறியடித்ததே! இன்றும் “விடுதலை” தொடரும் வாய்ப்புக்கதவுகளை அகலமாகத் திறந்து வீறுநடைபோட அது உதவியது. சாதனை என்று சொல்வதை விட “விடுதலை” சந்தித்த சவால்களின் உச்சம் என்று கூறலாமே!


No comments:

Post a Comment