இரட்டைமலை சீனிவாசன் புகழைப் போற்றுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

இரட்டைமலை சீனிவாசன் புகழைப் போற்றுவோம்!

* வழக்குரைஞர்

சு.குமாரதேவன்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோழியாளம் என்ற சிற்றூரில் 1859ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாளில் பிறந்த சீனிவாசன் படிக்கும் போது தீண் டாமைக்கொடுமையை அனுபவித்தாலும் தளராமல் முயன்று படித்தார். அவர் படித்த பள்ளியில் 400 மாணவர்களில் 10 பேரைத் தவிர மீதம் பேர் உயர் ஜாதியினர்.

அம்பேத்கருக்கு முன்பும் பின்பும் அயோத்தி தாசர்,  எம்.சி. ராஜா, மேயர் சிவராஜ், மீனாம் பாள் சிவராஜ், மதுரைப் பிள்ளை, ஜான் ரத்தினம், வீரையன், அப்பாத்துரை, சுவாமி சகஜானந்தர், அரங்கைய தாசர், வைரக்கண் வேலாயுதம், முத்துவீரன், ஆரிய சங்காரன் போன்ற தலைவர்கள் புகழ் பெற்று விளங்கினார்கள். அந்த வரிசையில் முதலிடம் பிடிப்பவர் நம் இரட்டை மலை சீனிவாசன் ஆவார்.

19ஆம் நூற்றாண்டிலேயே சமூகத்தொண்டு செய்தாலும் அவர் அதிகம் அறியப்பட்டது 20ஆம் நூற்றாண்டில் தான்.

1904ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற போது காந்தியாருடன் பழக்கமாகி காந்திக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து "மோ.க.காந்தி " என்று தமிழில் எழுத வைத்தது இவர் தான். 1904 முதல் 1920 வரை பணியாற்றி 1921முதல் இந்திய அரசியலில் நேரிடையாகப் பங்கு கொண்டார்.

1923 முதல் 1938 வரை சட்ட மன்ற நியமன உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது பனகல் அரசர் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்தார். அப்போது சென்னையின் தெருக்களில் ஆதிதிராவிடர் நடமாட இருந்தத் தடையை நீக்கியது. பொதுக் கிணற் றில் தண்ணீர் எடுப்பது, பேருந்தில் பயணம் செய்வது, திரையரங்கில் சமமாக  உட்காருவது போன்ற உரிமைகள் ஆதி திராவிடர்களுக்கு நீதிக் கட்சி ஆட்சியில் கிடைக்க சட்டமாக் கிடவும் கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பிரதி நிதித்துவம் கிடைக்கவும் தீவிரப் பணியாற் றினார்.

காந்தியாருடன் நெருங்கிய நட்புக் கொண்டி ருந்தாலும் பூனா ஒப்பந்தத்தின்போது அம் பேத்கர் பக்கமே பக்கபலமாக இருந்தார்.

அம்பேத்கர் மதமாற்றம் பற்றி முதலில் சொன்னபோது அதில் மாறுபட்டார். தாழ்த்தப் பட்ட மக்கள் நான்கு வருணங்களிலும் வரமாட்டார்கள்., நாம் இந்துக்கள் அல்ல என்னும் போது நாம் ஏன் மதம் மாற வேண்டும் என்று வினா எழுப்பினார்.

திவான் பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், சர் போன்ற பட்டங்கள் அவருக்குக் கிடைத் தாலும் 1940இல் தமிழ்த்தென்றல் திரு.வி.க "திராவிடமணி " என்ற பட்டம் அளித்துப் பாராட்டியதைப் பெருமையாகக் கருதினார்.

நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற சமூக நீதி இயக்கங்கள் இரட்டை மலை சீனிவாசன் சமூகநீதிக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார்கள். 2009ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு மணிமண்டபம் எழுப்பி சிலை நிறுவி சிறப்புச் செய்தார். பின்பு அஞ்சல் தலையும் வெளியிட்டார்.

1928 முதல் தான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர்க்கு கல்லூரி யில் பயில அனுமதி கிடைத்தது. அதற்குக் காரணம் இரட்டை மலை சீனிவாசனே!

அயோத்திதாசப் பண்டிதர் தங்கையை மணமுடித்து அவருக்கு மைத்துனரானார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாய் தாழ்த்தப்பட் டோர் நலனுக்கு உழைத்த அவர் 

18-9-1945இல் சென்னை பெரிய மேட்டில் உள்ள வீரபத்திரன் தெரு வீட்டில் காலமானார்.

வாழ்க இரட்டை மலை சீனிவாசன்!


No comments:

Post a Comment