பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இரும்புச் சத்து மாத்திரை வழங்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இரும்புச் சத்து மாத்திரை வழங்க உத்தரவு

சென்னை, ஜூலை 15 பள்ளி மாணவ, மாணவிகளுக் கான இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் போலிக் அமில மருந்துகள் வழங்கும் பணியை மீண்டும் துவக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாராந்திர இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் போலிக் அமில மருந்து வழங்குவது வழக்கம். கடந்த மாதம் மாத்திரைகள் உட்கொண்ட குழந்தைகள் சிலருக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக ஊட்டச்சத்து மருந்துகள் வழங்குவதை நிறுத்துமாறு சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் போலிக் அமில மருந்துகள் வழங்கும் பணியை மீண்டும் துவக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் போலிக் அமில மருந்துகள் முறையாக ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்தின் தரம் சரிபார்க்கப்பட்டது. மருந்துகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாத காரணத்தால் நாளை முதல் மீண்டும் மாணவர்களுக்கான இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கும் பணியை துவங்கலாம்.

பிறந்து 6 மாதங்கள் முதல் 19 வயதினர் வரை பல்வேறு வகைப்படுத்தலின் கீழ் சரியான அளவு இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்களை வளர் இளம் பருவத்திற்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் வாயிலாக வழங்க வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் வாராந்திர இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் போலிக் அமில மருந்துகள் ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கும் தேவையான அளவு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவை சரியாக நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் விநியோகம் செய்ய வேண்டும்" என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment