சில வரி அறிவியல் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

சில வரி அறிவியல் செய்திகள்

பூச்சிக்கும் வலிக்கும்

அய்ந்தறிவுள்ள பூச்சிகளுக்கு அடிபட்டால் வலிக்குமா? 'ஆம்' என்கிறது ஒரு புதிய ஆய்வு! மூலக்கூறு அமைப்புகள் மற்றும் இதர உடலியல் கூறுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், பலவகை பூச்சி இனங்களுக்கு, வலியை உணரும் திறன் இருப்பதாகத் தெரிகிறது என 'தி புரசீடிங்ஸ் ஆப் தி ராயல் சொசைட்டி 'பி' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.

நெப்டியூனை நோக்கும் சீனா

விண்வெளியில் போட்டிகள் வலுக் கின்றன. சீனா, தனது ஆராய்ச்சிப் பார்வையை நெப்டியூன் கிரகத்தின் மீது செலுத்தவுள்ளது. பனிக்கட்டி கிரகமான நெப்டியூனில் வைர மழை பொழியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எனவே நெப்டியூன் அறிவியல் ரீதியில் மட்டுமல்ல, தொழில் ரீதியிலும் மிகவும் கவனிக்கத் தக்கதாக சீனாவிற்குத் தெரிகிறது. இதனால்தான், நெப்டியூனுக்கு விண்கலனை அனுப்ப, அணு சக்தியால் இயங்கும் ராக்கெட்டை பரிசீலித்து வருகிறது. நெப்டியூனின் துணைக் கோள்களையும் அதன் நிலவான டிரைடனையும் ஆராய சீனா திட்டமிட்டுள்ளது.

பல் துலக்கும் ரோபோ!

பற்களை சுத்தம் செய்யும் மைக்ரோ ரோபோட்டுகளை, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பல்லின் மேல் 'பிரஷ்' செய்வது, பல்லின் இடுக்குகளில் நுழைந்து 'பிலாஸ்' செய்வது ஆகிய இரு வேலைகளையும் செய்வதோடு, சொத்தையை உண்டாக்கும் பேக்டீரியாக்களைக் கொல்லும் கிருமிக்கொல்லி மருந்தினையும் தெளிக்கும் திறன் கொண்டவை இந்த மைக்ரோ ரோபோக்கள். இரும்பு ஆக்சைடு நேனோ துகள்களை, காந்தம் கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம், மைக்ரோ ரோபோ பல்துலக்கி வேலை செய்கிறது.

ஆஸ்பெஸ்டாசை அழிக்கும் நுட்பம்

கூரைகள், தரைகள் என பலவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆஸ்பெஸ்டாஸ், பல நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும், கள்ளத்தனமாக அது பயன்படுத்தப்படுவது தொடர்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை கண்டுபிடிக்க, ஸ்பெயினிலுள்ள கடலோனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய நுட்பத்தை உண்டாக்கியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர் பார்வை மற்றும் செயக்கைக்கோள் ஒளிப்படங்கள் ஆகிய மூன்றையும் கொண்டு, துல்லியமாக ஆஸ்பெஸ்டாஸ் கூரை உள்ள இடங்களை கண்டறிய முடிகிறது. இது, ஆஸ்பெஸ்டாஸ் சோதனை அதிகாரிகளுக்கு மிகவும் உதவும்.

No comments:

Post a Comment