கள்ளக்குறிச்சி பள்ளிப் பிரச்சினை: சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

கள்ளக்குறிச்சி பள்ளிப் பிரச்சினை: சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு

சென்னை, ஜூலை 21 கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக அமைக்கப் பட்ட காவல்துறை இயக்குநர் பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது. கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உதவியாக 18 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர் பாக கடந்த 17-ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக் காரர்கள் பள்ளியைச் சூறையாடிய துடன், 40-க்கும் மேற்பட்ட வாகனங் களுக்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தில் ஏராளமான காவலர் களும் காயமடைந்தனர்.

இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300-க்கும் மேற் பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக் காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தமிழ்நாடு முழு வதும் 100-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மேலும், கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவம் தொடர்பான விசார ணையை மேற்கொள்ள காவல்துறை இயக்குநர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அந்த குழு விசார ணையைத் துவங்கவுள்ளது. இந் நிலையில் வழக்கு விசாரணை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக் கைகளைக் கையாள 18 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உதவியாக அமைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அந்த குழுவில் 6 டிஎஸ்பிக்கள், 9 ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் இடம் பெற்றுள் ளனர். சிறப்புக்குழுவில் இடம்பெற் றுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகிக்கும் சேலம் சரக காவல்துறை இயக்குநர் பிரவீன் குமார் அபினவ் முன்பு  ஆஜராக வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழுவில் இடம் பெற்றுள்ள காவல் கண்காணிப் பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒலிவாங்கி பொருத்தப்பட்ட அலுவலக வாகனத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், வாகனத்திற்கு தேவையான எரி பொருள் முன்கூட்டியே நிரப்ப வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிகாரி களைத் தவிர பிற அதிகாரிகளை விசாரணைக்காக அனுப்பக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேரும் அடுத்த இரண்டு வார காலத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உதவியாக பணிபுரிவதற்கு தயார் நிலையில் வர வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 மேலும், தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தனிப்படையினர் அனை வரும் கரோனா விதி முறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment