நாடாளுமன்றச் செய்திகள் முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

நாடாளுமன்றச் செய்திகள் முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள்

புதுடில்லி, ஜூலை 21- முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது ஒரு கேள்விக்கு ராணுவ இணை அமைச்சர் அஜய்பட் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- 

முப்படைகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களு டன் ஒப்பிடுகையில், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக ராணுவத்தில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 464 காலியிடங்கள் உள்ளன. விமானப்படையில் 5 ஆயிரத்து 723 காலியிடங்களும், கடற்படையில் 13 ஆயிரத்து 597 காலியி டங்களும் உள்ளன. முப்படைகளிலும் ஆண்டொன்றுக்கு மொத்தம் 71 ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ஆள்தேர்வு நடக்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்று அவர் கூறினார்.

 2017 முதல் 347 பேர் 

சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை 

சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு

புதுடில்லி, ஜூலை 21-  கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 347 பேர் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்ததால் உயிரிழந்து உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 347 பேர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகர மான முறையில் சுத்தம் செய்ததால் உயிரிழந்துள்ளதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார், 2017இல் 92, 2018இல் 67, 2019இல் 116, 2020இல் 19, 2021-ல் 36 மற்றும் 2022இல் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டார். சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் கைகளால் சுத்தம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 யூடியூப்பில் 78 செய்தி சேனல்கள் முடக்கம் 

புதுடில்லி, ஜூலை 21- யூடியூப்பில் செயல்படும் 

78 செய்தி சேனல்கள் உட்பட 560 யூடியூப் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் பல்வேறு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்ட தற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மக்களவையில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

அதன்படி யூடியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் உட்பட 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய இறையான்மை, பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000இன் படி ஒன்றிய அரசுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment