பலாப் பழத்தின் மருத்துவப் பயன்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

பலாப் பழத்தின் மருத்துவப் பயன்கள்

பலாப்பழத்தால் கிடைக்கும் மருத்துவப் பயன்கள் கணக்கிலடங்காதவை. கூர்மையான பார்வையைக் கொடுத்து, இளமையை நீட்டிக்கச் செய்யும். எலும்புகளுக்கு வலுக்கொடுத்து, இரத்த சோகையைப் போக்கும். உடனடியாக ஆற்றலைக் கொடுத்து உடல் சோர்வையும் உளச் சோர்வையும் நீக்கும். மலத்தை இளக்கி உடலுக்கு உரத்தைக் கொடுக்கும் பலாப் பழம், உடல் செயல்படுவதற்கான வெப்பத்தையும் தரவல்லது.

வைட்டமின்  ஏ, பி, இரும்புச் சத்து, நார்ச்சத்து, சுண்ணச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டங்களையும் பலா கொண்டிருக்கிறது. 

எதிர்-ஆக்சிகரணி தன்மை நிறைந்த பலா, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து ஆரோக்கியத்தை நிலைக்கச் செய்யும். இரத்த அழுத்த நோயாளிகள் பலாச் சுளைகளை அவ்வப்போது சுவைத்து வரலாம். வாத நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் பலாவின் சுவைக்கு மயங்காமல் பலாவைத் தவிர்த்து விடுவது நல்லது.

பலாச் சுளைகளைத் தேனில் ஊறவைத்து அல்லது தேனில் குழைத்துச் சாப்பிட, வயிறு உபாதைகள் ஏற்படாது. அதுவும் இயற்கை வழங்கிய பலாவும் தேனும் இணையும் போது கிடைக்கும் சுவைக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். தேன் தவிர, பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றின் துணையோடும் பலாப்பழத்தைச் சாப்பிடலாம்.

பலாக் கொட்டைகளை மாங்காய், கத்திரிக்காயோடு சேர்த்துக் குழம்பு வைத்து நிறைவாகச் சாப்பிடலாம். நெருப்பில் சுட்டும் ஊட்டமிக்க சிற்றுண்டியாகச் சுவைக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகப் பலாக்கொட்டைகளைச் சாப்பிட்டால் வயிறு உபாதைகள் ஏற்படும்.

பலாச் சுளைகளோடு, உருளைக் கிழங்கைச் சேர்த்து வேகவைத்து வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு கூட்டி சமைத்து சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். பலாப் பிஞ்சுகளோடு பருப்பு சேர்த்து வேகவைத்து, 'பலா-பருப்பு கடையலாக' சமைத்துச் சாப்பிட, வயிற்றுப்புண் விரைவாகக் குணமாகும்.

பலா பிஞ்சுக்குச் சமையலில் இடம் கொடுக்க, நீர்வேட்கையைப் போக்கி பித்தம் தணியும் என்றும் குறிப்பிடுகின்றது. பலாப் பழத்தை ஆரம்ப நிலை மனநோய்க்கான மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு.

No comments:

Post a Comment