மாணவர்கள் மத்தியில் மதவாதப் பிளவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

மாணவர்கள் மத்தியில் மதவாதப் பிளவா?

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது விளங்கி வருகிறது.  இந்த பல்கலைக்கழகத்தில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு  இருக்கும் முஸ்லிம் மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் கே. ஜெயின் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மற்றொரு தரப்பு மாணவர்கள், பல்கலைக் கழக வளாகத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்தார் நிகழ்ச்சியை நடத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னிப்பு கேட்கக் கோரி அவர்கள் வலி யுறுத்தினர். போராட்டத்தின் ஒருபகுதியாக, துணைவேந்தரின் கொடும்பாவியையும் மாணவர்கள் எரித்தனர். இந்தப் போராட் டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் எழுந்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக நூற்றுக் கணக்கான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பனாரஸ் இந்து பல்கலைக்கழகமானது அனைத்துத் தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய கல்வி நிறுவனம். அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் எங்கள் நோக்கம். இங்கு பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதன் அடிப்படையில் தான், முஸ்லிம் மாணவர்களின் ரம்ஜான் கால நிகழ்வான இப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

மேலும் இந்நிகழ்ச்சியை துணைவேந்தர் ஒருங்கிணைக்கவில்லை. மாணவர்கள் தான் ஏற்பாடு செய்தனர். இப்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது என்பது பல்கலைக்கழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் ஆகும். எனவே, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

நூற்றாண்டு கால பனாரஸ் பல்கலைக் கழகத்தில், இத்தனை ஆண்டுகாலமாக அங்கு படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து இப்தார் நிகழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.   ஆனால் திடீரென்று இந்த ஆண்டு ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் தூண்டுதலால் இப்தார் நோன்பு எதிர்ப்பு போராட்டம் செய்துள்ளனர்.

 ஏற்கெனவே குஜராத்தில் இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் ஹிந்து மாணவர்கள் குறிப்பிட்ட வண்ண பட்டைகளை அடையாளமாக அணிந்துவரக் கூறி ஹிந்துத்துவ அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்திருந்தது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் இப்தார் விருந்து நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  மத நல்லிணக்கம் நாட்டில் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது, பாஜக ஆளும் மாநிலங்களில் அரசின் உதவியோடு ஹிந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையினரை எதிர்த்து வருகின்றனர். தற்போது மாணவர்கள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தி நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இது ஏதோ குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மாணவர் களுக்கான எதிர்ப்பு என்று கருதக் கூடாது.

இந்தியா ஒரு துணைக் கண்டம். இங்கு பலவித இனங்கள், பல மதங்கள், பல மொழிகள், பல பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

பிஜே.பி. சங்பரிவார்கள் தங்கள் மதவாத அரசியலை கல்விக் கூடங்களில் திணிப்பது அபாயகரமானது - நாட்டைத் துண்டாடக் கூடியது.

ஒரு பக்கத்தில் ஒருமைப்பாடு என்று பேசிக் கொண்டு - இன்னொரு பக்கத்தில்  ஒன்றியத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பிளவுபடுத்துவது  - அதுவும் மாணவர்கள் மத்தியிலே மதமாச்சரியத் தீயை வைப்பது தற்கொலைக் கொப்பானதாகும்.

நீண்ட காலமாக எச்சரித்து வந்துள்ள நிலையில் இப்போது அது உலகப் பிரச்சினையாகி விட்டது. இஸ்லாமிய நாடுகள் கொந்தளித்தெழுந்துள்ளன. இந்தியா திணறும் நிலை - இனியாவது புத்தி  கொள்முதல் பெறுமா?


No comments:

Post a Comment