சமூகநீதி வடபுலக் காவலர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

சமூகநீதி வடபுலக் காவலர்

சு.அறிவுக்கரசு

விஸ்வநாத் பிரதாப் சிங்!  இந்தியாவின் ஏழாவது பிரதமர். அரச குடும்ப  வழித் தோன்றல். என்றாலும் சாமானிய மக்களைப்  பற்றி சிந்தித்தவர். செயல்பட்டவர்.

 தையா மன்னர்  மகனாக 25.6.1931 இல் பிறந்தவர்.  பக்கத்து சமஸ்தானமான மாண்டா மன்னருக்குப்  பிள்ளை இல்லாததால் இவரை தத்து எடுத்து வளர்த்தார். மன்னர் ராஜாபகதூர் புற்றுநோயால்  அவதிப்பட்டவர். எனினும் மகனை  நன்முறையில் கல்வி அளித்து வளர்த்தார்.  இளவரசரும் கல்வியுடன் கவிதை எழுதவும்,  ஓவியம் வரையவும் கற்றுச் சிறந்து விளங்கினார்.  அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பி.எல்.,   பட்டம் பெற்றார். புனே பல்கலைக்கழகத்தில்  பி.எஸ்சி. பட்டமும் பெற்றார். சராசரி மாணவனாக இல்லாமல், பல்கலைக்கழக மாணவர் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கல்லூரிக் காலத்தைப் பயிற்சிக்களமாக்கிக் கொண்டவர். காந்தியவாதியான வினோபாவே  தொடங்கிய பூமிதானம் (நிலக்கொடை) இயக்கத்தால்  ஈர்க்கப்பட்டார். தனது நிலங்களை, பண்ணை வீட்டை கொடையாக அளித்து விட்டார். அப்போது அவரின் வயது 26.  நிலங்கள் ஏழைகளுக்குப் பிரித்துத்  தரப்பட்டது. வீடு, பள்ளிக்கூடம் ஆனது. விளிம்பு  நிலை மக்களுக்கு உணவு, கல்வி போன்ற மிக  அவசிய தேவைகளை பூர்த்தி செய்திட உதவினார்.  அரசு குடும்பத்தாரிடம் காண முடியாத அரிய பண்பு.

 அரசியல் வாழ்வு 

1969இல் உத்தரப்பிரதேச மாநில சட்ட  மன்ற உறுப்பினராக தேர்தலில் வென்றார்.  சட்டமன்றக் கொறடாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 தேர்தலில்  நாடாளுமன்ற உறுப்பினராக வென்றார். மூன்று  ஆண்டுகளில் இந்திரா காந்தி அமைச்சரவையில்  வர்த்தகத்துறை அமைச்சராக்கப்பட்டார்.  வியாபாரிகளின் சூதாட்டக் களமான  வணிகத்துறையில் விளை பொருட்களை பதுக்கி  வைத்து செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கிக் கொள்ளை  லாபம் சம்பாதிக்கும் நிலை. வணிகர்களின்  கொள்ளை இவர்  காலத்தில் தடுக்கப்பட்டது. பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாய்ந்தது.  நெருக்கடி நிலை காலத்தில் இவரது செயல்பாடுகள்  மிகத்

தீவிரமாக இருந்தன. 

1980 இல் நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலில் வென்று உறுப்பினரானார்.  ஆனால் இந்திரா காந்தி இவரை உ.பி. மாநில  முதல் அமைச்சராக்கினார். அந்த மாநிலத்தில்  சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்களை  ஒடுக்கியே தீருவேன் என்று சபதம் ஏற்று கடுங்காவல்  நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் தன் சகோதரரை பறி  கொடுத்தார் கொள்ளையர்களின் கோரத்  தாண்டவத்திற்கு. 

மீண்டும் ஒன்றிய  அமைச்சரானார். வர்த்தகத் துறையைக் கையாண்டு  புகழ்பெற்றார்.  இந்திராவின்  மறைவுக்குப் பின்னர் ராஜீவ்காந்தி பிரதமரானார். தம் தாயாரின்  நம்பிக்கைக்குரியவரான வி.பி.சிங்கை நிதி அமைச்சராக்கினார். அந்தத்துறையில் மிகத்  திறம்பட பணியாற்றினார். வரி ஏய்ப்பு செய்வோர்  மீது கடும் நடவடிக்கை பாய்ந்தது. அரசை  ஏமாற்றும் முதலைகளின் பட்டியலையும்  பகிரங்கமாக வெளியிட்டார். முதலாளிகள் எனும்  பெயரில் அரசியல் கட்சிகளுக்கு வேண்டியவர்களாக  விளங்கியவர்களின் சுயரூபம் வெளி வந்தது.  ஆளும் கட்சிக்கு நன்கொடைகளை அள்ளித்தரும்  இவர்களின் முகத்திரையைக் கிழித்துத் தொங்க  விட்டார். சுவிஸ் நாட்டு வங்கிகளில் கள்ளப்  பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களும் தப்பவில்லை. அவர்களின் மீது நடவடிக்கை எடுத்து பகிரங்கப்படுத்தினார். அவர்களில் ஒருவர்  உயரமான நடிகர் அமிதாப்பச்சனின் அண்ணன்.  ஆடிப்போன நடிகர் ஓடிப்போய் தன் நண்பரிடம்  முறையிட்டார். அவரின் நண்பர் பிரதமர் ராஜீவ்  காந்திதான். இருவரும் லட்சத்தீவுகளுக்குத் தனி  விமானத்தில் போய் தங்கி விடுமுறையைக் கழித்துக் களிப்படைந்தவர்கள். எனவே இவரிடம் பேசிப் பார்த்தார்  இவர் மசியவில்லை. 

பெரும் தொழிலதிபர்  கிர்லோஸ்கர். வரி ஏய்ப்பு, கள்ளக் கணக்கு குற்றங்களில் சிக்கிக் கொண்டார். அவரைக் கைது  செய்ய உத்தரவிட்டார் வி.பி.சிங். கை விலங்கிட்டு   சிறை வைக்கப்பட்டார்.  இந்தியாவின்  வணிக சமூகம் மொத்தமும் அதிர்ச்சியில்  உறைந்தது. எமனுக்குப் பயந்து லிங்கத்தை கட்டிப் பிடித்த கதை ஒன்று புராணத்தில் உண்டு. அதைப்  பின்பற்றி ராஜீவ்காந்தியிடம் வணிகர்கள் ஓடினர்.  பாதுகாப்பு தேடினர் அவரால் முடிந்தது. வி.பி.சிங்கை நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது  மட்டுமே.

அதை செய்தார். பாதுகாப்புத்துறை  அமைச்சராக மாற்றினார்.  தலைவலி போய்த்  திருகுவலி வந்தது.

 நீர்மூழ்கி போர் கப்பல்கள்  வாங்கியதில் ஊழல் நடந்ததை கண்டுபிடித்தார் வி.பி.சிங்.  போஃபோர்ஸ் எனும் பெயருள்ள  பீரங்கிகளை வாங்குவதில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக ராஜீவ்காந்தி மீது குற்றச்சாட்டு.

 அதனை விசாரிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்தார்  பாதுகாப்பு அமைச்சர். பதவிக்கு வந்த புதிதில்  பிரதமர் ராஜீவை மிஸ்டர் கிளீன் (திருவாளர்  பரிசுத்தம்) என்றே ஏடுகள் புகழ் பாடின. வி.பி. சிங்  நிதித் துறையிலும், பாதுகாப்புத்துறை அமைச்சராக  இருந்து எடுத்த சட்டப்படியான நடவடிக்கைகளால் அந்தப் பொய்ப் பிம்பம் கலகலத்தது. பரிசுத்த வேடம்  கலைந்தது. கலைக்கப்பட்டது. ஊழல்களின் மொத்த  உருவாக பிரதமரை வருணித்து ஏடுகள் இகழத் தொடங்கின.   குற்றச் செயல்களைச் செய்யாமல்  நிறுத்திக் கொள்வதற்கு பதிலாகப் பிரதமர் குற்றங் கண்டுபிடித்த கண்ணியவானை பதவி நீக்கம் செய்தார்.  1987 ஏப்ரல் 4ஆம் நாள் வி.பி.சிங் பதவியை விட்டு  நீக்கப்பட்டார். நேர்மைக்கு கிடைத்த பரிசு -  மாணவப்  பருவத்திலிருந்து அவர் காங்கிரஸ் கட்சியுடன்  கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. குற்றமே  செய்யாதவர் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட  கொடுமை நிகழ்ந்தது.

அதுவும் நன்மைக்கே 

நடிகர் அமிதாப்பச்சன்  நாடாளுமன்றப் பதவியை விட்டு விலகினார்.  இடைத்தேர்தல் வந்தது. வி.பி.சிங்.  போட்டியிட்டார்.  காங் கிரசை எதிர்த்து முதலமைச்சராகவும் ஒன்றிய  அமைச்சராகவும் பணியாற்றிய வி.பி.சிங் தேர்தல்  பணிக்காக இருசக்கர வாகனத்தின் பின் சீட்டில்  அமர்ந்து மக்களிடையே பிரச் சாரம் செய்து வாக்கு  கேட்டார். வென்றார். ஒரு லட்சத்து 25 ஆயிரம்  வாக்குகள் வித்தி யாசத்தில் பெரும் வெற்றியைப்  பெற்றார்.

 அவரது ஜன்மோர்ச்சா கட்சியுடன் ஜனதாதளம்,  தெலுங்குதேசம், திமுக முதலிய கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய முன்னணி எனும்  அமைப்பை உருவாக்கினர். அதன் தலைவராக என்.டி ராமராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் வி.பி.சிங்.,  ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார் அமைப்பின்  அறிமுக கூட்டத்தைக் கலைஞர் சென்னையில்  நடத்தினார் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும்  என வி.பி.சிங் விரும்பினார். கலைஞர்  நிறைவேற்றினார். 

1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல்  குற்றச்சாட்டுக்கு ஆளான காங்கிரஸ் தோல்வியை  அடைந்தது. தேசிய முன்னணி வெற்றி பெற்றது.  தனித்து  ஆட்சியை அமைத்திடும அளவுக்கு   பெரும்பான்மை இல்லாததால் இடதுசாரிகள், பாஜக  ஆகியவற்றின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார்.  அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு  நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவருமில்லை.  மாநிலங்களவை உறுப்பினராக இருந்த  முரசொலி மாறனை ஒன்றிய அமைச்சரவையில்  சேர்த்துக் கொண்டார். தமிழ் மக்கள் மீது அவர்  கொண்டிருந்த பற்றுப் பாசம் உறவு ஆகியவற்றுக்கு  எடுத்துக்காட்டாக அமைந்தது.

 அதுமட்டுமா? 1924இல்  அன்றைய மைசூர் மகாராஜாவும், பிரிட்டிஷ்  அரசும் சேர்ந்து செய்து கொண்ட காவிரி நீர்ப்  பங்கீடு தொடர்பான ஒப்பந்தம்  1974 இல்  முடிவுற்றது என்ற தவறான பிரச்சாரத்தை அதிமுக,  காங்கிரஸ் கட்சிகள் செய்த  நேரத்தில்  திமுக  வைத்த கோரிக்கையை ஏற்று காவிரி நீர் பங்கீட்டுகாக நதிநீர்  மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற  திமுக அரசின் கோரிக்கையை ஏற்று  ஆணையிட்டார் வி.பி.சிங்.

இலங்கைத் தமிழர்களின்  தனி ஈழப் பிரச்சினை  தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு  செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக  தமிழர்கள் கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டு இருந்த  நிலையில் - இந்திய அமைதிப்படை என்ற பெயரில்  அனுப்பப்பட்ட இந்திய ராணுவம் தமிழர்களைக்  கொன்று குவித்து ‘வெறியாட்டம் ஆடிய நிலையில்  அதனை திரும்ப அழைத்துக் கொள்ள  வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின்  வேண்டுகோளை ஏற்று ஆணையிட்டார் வி.பி. சிங்  அவர்கள்.

 வி.பி.சிங் பிரதமரானதும்  சென்னையில் பாராட்டு விழாவுக்காக வந்தபோது  கலைஞர் ஒரு கோரிக்கையினை தெரிவித்தார்.  சென்னையின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு  அறிஞர் அண்ணாவின் பெயரையும், உள்நாட்டு  விமான முனையத்துக்கு தியாகச்சுடர் காமராஜரின் பெயரையும்  சூட்ட வேண்டும் என்றார். சென்னையில்  இருந்து டில்லிக்கு தொடர்பு கொண்டு  ஆலோசித்து, முடிவெடுத்து, கோரிக்கைகளை  நிறைவேற்றி மேடையிலேயே அறிவித்து தமிழர்  நெஞ்சங்களை குளிர்வித்தார் வி.பி. சிங்.

 “அனைவர்க்கும் அனைத்தும்” என்கிற  சமூக நீதிக்காகத் தந்தை பெரியார்  1917  முதலே காங்கிரசில் இருந்தபோதே முழக்கம் எழுப்பியவர் யிustவீநீமீ tஷீ ணீறீறீ tஷீ - மிஸீ யிustவீநீமீ ஸீஷீஸீமீ  என்கிற தாரக முழக்கத்துடன்  1916  நவம்பரில் தொடங்கப் பெற்றது நீதிக்கட்சி. 1920  தேர்தலில் வென்று சென்னை ராஜதானியில்  ஆட்சி அமைத்து 1921 இல் இட ஒதுக்கீடு அளித்து சமூக  நீதியைச் சட்டப்படி நிலைநாட்டிய நீதிக்கட்சி. 1950 இந்திய  அரசமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இட  ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட போது தந்தை பெரியார் போராடியதன் விளைவாக  அரசமைப்புச் சட்டமே முதல் முறையாக  திருத்தப்பட்டு சமூகநீதி நிலைநிறுத்தப்பட்டதும் இங்கேதான், இந்தியா  முழுமையிலும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள்  எல்லோரும் கல்வி கற்றிடவும், வேலைவாய்ப்புகள்  பெற்றிடவும், வழிவகை செய்யப்பட்டு  பரிந்துரைக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை 10  ஆண்டுகளாக உதாசீனப் பட்டிருந்த நிலை, அதனை  ஏற்று ஆணையிட்டு சமூகநீதியை அமல் செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையை உடனேயே  பரிசீலித்து 7.8.1990இல் ஆணை பிறப்பித்தார்.  

அதன்மூலம் 27% இட ஒதுக்கீடு அரசுப்  பணிகளிலும், அரசுத் துறை நிறுவனப் பணிகளிலும்  பிற்படுத்தப்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள  நிலையை உருவாக்கி மக்களின் மனதில் நீங்கா  இடத்தைப் பிடித்தார்  விபி சிங்.

 ஆனால் சமூக  நீதிக்கு எதிரான சனாதன பா.ஜ. கட்சி தாங்கள்  அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டு தாங்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும்  மெய்ப்பித்தனர். வி.பி.சிங் கவலைப்படவில்லை. பிரதமர் பதவி போவது பற்றி  கலங்கவில்லை மாறாக தம்மால் ஏற்றிப்  பறக்கவிட்டு, பூமிக்  கோளில் வலம் வந்து  கொண்டிருக்கும் சமூகநீதிக் கிரகத்தை ஒருவனாலும்  பறிக்க முடியாதே என்று தெளிந்த உள்ளத்தோடு  கூறிய பெருமகன்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றும் போது, சமூக நீதிக்காகப் போராடிய  தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர்  அண்ணா, ராம் மனோகர் லோகியா ஆகியோரை  வாழ்த்தி நன்றி கூர்ந்து தம்மை அடையாளம்  காட்டிக் கொண்டவர்.

அரச குடும்பத் தோன்றல், அரச குடும்ப வளர்ப்பு. எளியோர் இடம் ஈர்ப்பு. சமூக  நீதியின் பால் உவப்பு. நேர்மையின் உச்சம். பேசியபடியே  வாழ்ந்தவர். சொன்னவாறே செயல்பட்டவர்.  கவிஞர்,  ஓவியர், பெண்ணிய செயற்பாட்டாளர் அவர் வாழ்க.  

77 ஆண்டுகளே வாழ்ந்து 27.11.2008 இல்  இறவாப் புகழை நிலை நிறுத்தி மறைந்தவர். அவர் பிறந்த  நாளில் வாழ்த்துவோம்!


No comments:

Post a Comment