ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி-1:  அ.தி.மு.க. உட்கட்சி நிலைப்பாடுகளில்  பா.ஜ.க.வின் தலையீடு,  அணுகுமுறை குறித்து...?

ச.அருட்செல்வன், பெண்ணாடம்.

பதில்:  ஆட்டுவது டில்லி- (பா.ஜ.க). ஆடுவது இவர்கள், வாட்டுவது காவி - வாடுபவர்கள் ‘ஆவி’யின் அடிமைப் புத்திரர்கள். அடமானத்திலிருந்து என்று மீட்போ, அன்றே அக்கட்சிக்கு மீட்சி!

அதுவரை சொத்து இவர்களிடமில்லையே! டில்லிக்கு ஓடி, ஓடி தீர்வைத் தேடிடும் பரிதாபநிலை! முன்பு லேடி தலைவர், இப்போது - மோடி தலைவர் என்பது ஏற்கத்தக்கதா? கொள்கையுள்ளவர்கள் இருந்தால் சிந்திக்கட்டும். 

----------

கேள்வி-2:  செஞ்சி  பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு  மாநாட்டின் வெற்றி குறித்து...?

வி.முகில்மொழி, செஞ்சி.

பதில்:  அமைச்சர் மனிதநேயர் கே.எஸ்.மஸ்தான் முதல் உழைத்த அனைவருக்கும் பெருமிதத்துடன் நம் உச்சி மோந்த வாழ்த்துக்கள்! ப.க.விற்கென தனி ஒரு இலச்சினை - அடையாளம் கிடைத்த வரலாறு படைத்த மாநாடு!

-----

கேள்வி-3:  குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர், ஆளும் பா.ஜ.க. வேட்பாளர் - ஒப்பிடுகையில் மாநில சுயாட்சி, அரசமைப்புச் சட்டம் காப்பில் உறுதிப்பாடு உள்ளிட்டவை குறித்து...?

க.ஆற்றலரசி, அயப்பாக்கம்.

பதில்:  சமூகநீதி வேஷம் போட்டுத் தீர வேண்டிய கட்டாயத்தால் - இந்த உருமாற்றம்; மற்றபடி, இவரை ரப்பர் ஸ்டாம்ப்பாகவே ஆக்க முடியும் என்பதுதான் உள்ளார்ந்த கருத்து. புறத்தோற்றம் அரசியல் லாபம். தங்களை எதிர்க்கும் பழங்குடி மக்களை ‘தாஜா’ படுத்த ஒரு உத்தி தேர்தல் மூலம் - அதே நேரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் (வெற்றி வாய்ப்பு குறைவு) வெற்றி பெற்றால் நீங்கள் குறிப்பிட்டதற்கு பாதுகாப்பு போதிய அளவு கிடைக்கும்!

என்றாலும் மனுதர்மத்திற்கு, முர்மு அம்மையார்  தேர்வு ஒரு மரண அடி - சனாதனத்துக்கு சரிவும் கூட!

------

கேள்வி-4:  மகாராட்டிராவில் நடைபெறும் சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க.வின் பங்கு உண்டா?

பா.முகிலன், சென்னை.

பதில்:  சூத்திரக் கயிறே அவர்கள்தானே! கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?

------

கேள்வி-5: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கரோனா தொற்று பரவல் அதிகமாகிக் கொண்டு வருகிறதே?

சு.அன்புச்செல்வன், புரசைவாக்கம்.

பதில்: வேதனையான அதிர்ச்சி செய்தி: முகக்கவசம் அணிவது, தடுப்பு ஊசி முதலிய பாதுகாப்பை அனைவரும் செய்து கொள்வது அவசியம் - அவசரம்!

-----

கேள்வி-6: அ.தி.மு.க. பொதுக்குழுவில் அரசியல் பண்பாட்டுக்கு சற்றும் தொடர்பில்லாத செயல்கள் நடந்துள்ளனவே - அதுபற்றி பலரும் விமர்சித்துள்ள நிலையில், தங்களின் கருத்து என்ன?

அசோக்மணி, கோவை.

பதில்: வருத்தமும் - வேதனையும் அடைகிறோம். அண்ணா பெயரில் கட்சி, அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காணாமற்போன துயரமிகு நிகழ்வு! ஓர் எதிர்க்கட்சிக்கு இப்படி ஒரு அவலமா? வெட்கப்பட வேண்டிய செய்தி இது!

கேள்வி-7:  ஸ்பெயின் நாட்டிலும் தீமிதி திருவிழா என்று நடைபெறுகிறதே?

பா.கண்மணி, உடையார்பாளையம்

பதில்: தந்தை பெரியார் சொன்னது மறந்தா விடும்? “முட்டாள்தனம் என்றும் நமக்கே சொந்தமா? அது உலகத்திற்கே சொந்தம்.” என்னே அருமையான பதில் மொழி! 

-----

கேள்வி-8: அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறதே?

ப.இராமலிங்கம், திருவண்ணாமலை.

பதில்: யார் கை ஓங்கி வருகிறது என்பதை விட யார் வந்தால் டில்லியிடம் இருக்கும் அடமானப் பத்திரத்தை மீட்டுத் தரப் பயன்படுவர் என்பதே மில்லியன் டாலர் கேள்வி!

-----

கேள்வி-9: குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை பா.ஜ.க. நிறுத்தியிருப்பது எதைக் காட்டுகிறது?

ந.சொக்கலிங்கம், திருநெல்வேலி.

பதில்: சனாதனம் செல்லாக்காசாகி விட்டதே, மனுதர்மம் மண்டியிட்டுக் கிடக்கிறது - பெண் முதல் குடிமகள் நாட்டின் தலைவராக ஆகிறார் என்பதன் மூலம்.

------

கேள்வி-10:  பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு குற்றச் செயலிலோ அல்லது பிரச்சினைகளிலோ சிக்கி வருகிறார்களே?

மு.வெற்றி, சேலம்! 

பதில்: குற்றம் புரிந்து பாதுகாப்பைத் தேடித்தானே  அங்கே கமலாலயத்தை சரணாலயமாக்கிக் கொள்ள ஓடுகிறார்கள். எனவே அதில் என்ன அதிசயம் இருக்குங்க....!


No comments:

Post a Comment