வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் மருத்துவப் படிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் மருத்துவப் படிப்புகள்

பிளஸ் -2 படித்தவர்கள் டாக்டருக்கு படிப்பது என்றால் அலோபதி மருத்துவமான எம்.பி.பி.எஸ். மட்டுமே என நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ படிப்பு என்பது இன்று பல துறைகளாக பிரிந்து தனித்தனிப் பாடங்களாக கற்பிக்கப்படுகின்றன. ஆடியாலஜி, ஆப்ட்டோமெட்ரி போன்ற மருத்துவப் படிப்புகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்புகள் அதிகம் உள்ள துறைகளாக இருக்கின்றன. அவற்றில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற படிப்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்ற துறையாகும்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவப் படிப்புகள்: நவீன மருத்துவத்திற்கு இணையாக சமீப காலங்களில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் தேவை அதிகரித்து உள்ளது. டெங்கு சிகிச்சைக்கு பப்பாளி இலைச்சாறு, நில வேம்புக் கசாயம் போன்ற பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை சித்த மருத்துவப் பட்டப்படிப்பு உள்ளது. பி.ஏ.எம்.எஸ். என்ற 5 ஆண்டு ஆயுர்வேத மருத்துவ படிப்பு சித்த மருத்துவக் கல்லூரியிலேயே உள்ளது. இது தவிர ஆயுர்வேத மருத்துவத்திற்கு என தனியார் ஆயுர்வேத பல்கலைக்கழகங்களும் உள்ளன.

ஆப்ட்டோமெட்ரி: கண்களின் அமைப்பு, செயல்பாடுகளைப் பற்றிய படிப்பு இது. கண் மருத்துவமனைகளில் கண் டாக்டர்களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும். ரிப்ராக்டிவ் எரர் என்று சொல்லப்படும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்து பரிசோதனைகளையும் செய்து ரிசல்ட் தருபவர்கள் இவர்கள். அரசு கண் மருத்துவமனைகள் தவிர, அகர்வால் கண் மருத்துவமனையில் பி.எஸ்.சி., 4 ஆண்டு படிப்பும் டிப்ளமோ 2 ஆண்டு படிப்பும் உள்ளன. தலா 40 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத  மதிப்பெண்கள்  பெற்றிருக்க வேண்டும். அறிவியலை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, ரிப்ராக்ஷன், ஆப்தால்மிக் நர்சிங் அசிஸ்டெண்ட்  ஆகியவற்றில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு களும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி என்ற 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் சான்றிதழ்களை வழங்கும்.



No comments:

Post a Comment