தமிழர் தலைவர் வேண்டுகோள்
மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு நிரந்தர நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமிழக அரசுக்கு, தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து விளக்கவுரையாற்றினார்.
பனகல் பார்க் அருகிலேதான் வி.பி.சிங் அவர்கள் திராவிடர் கழகப் பொன்விழாவிற்கு வந்தார். அந்த நிகழ்ச்சியிலே அவர்கள் பேசிய நேரத்திலே அற்புதமான ஒரு விளக்கத்தைச் சொன்னார்கள்.
எல்லோரும் வியக்கக்கூடிய ஒரு விளக்கத்தைச் சொன்னார். வியி.சிங் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் கீழே அமர்ந்து அவருடைய உரையைக் கேட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.
ஒருவரைப் பார்த்து கேட்டார். திடீரென்று உங்கள் மீது யாராவது எச்சில் துப்பினால் அல்லது நான் எச்சில் துப்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று பேசும் பொழுது கேட்டார். உடனே எல்லோரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தனர். அருகிலே நடந்த சம்பவம் - சில ஆண்டுகளுக்கு முன்னாலே. இல்லை நீங்கள் தயங்காதீர்கள். இயல்பாக என்ன செய்வீர்கள்? எனக்காக நீங்கள் சொல்ல வேண்டாம். தயங்காமல் உடனடி யாகப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்
அப்பொழுது திடீரென்று ஒரு தோழர் எழுந்திருந்து சொன்னார். என் முகத்தில் யாராவது எச்சில் துப்பினால் ஓங்கி அறைவேன் என்று.
இதற்குப் பெயர்தான் சுயமரியாதை. இந்த சமுதாயத்திலே இன்னொருவர் மீது யார் யார் எச்சில் துப்பினார்களோ அவர்களைத் தூக்கி அறையக் கூடிய அளவுக்கு துணிச்சல் பெற வேண்டும் என்று சொன்னார்.
சுயமரியாதைக்கு இப்படி ஒரு சுருக்கமான விளக்கத்தை வி.பி.சிங் அவர்கள் சொன்னார்.
‘சூத்திரர் என்றால் ஆத்திரம் கொண்டடி’
சூத்திரர் என்று சொன்னால் ஆத்திரம் கொண்டு அடி என்று சுயமரியாதை இயக்க ஆரம்ப காலத்திலே வந்த சுலோகம் அவருக்கும் தெரியாது.
ஆனால் அவர் தந்த விளக்கம் எப்படிப்பட்ட விளக்கம் என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அது மட்டுமல்ல. இன்றைக்குக்கூட வேறு ஒரு தகவல் வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வார ஏடு, அவர் மறைந்த பிற்பாடு கூட அவரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு தமிழ் வார ஏடு இங்கே உண்டு.
அந்த அளவிற்கு மோசமான நிலை. ஆனால் மற்ற ஏடுகளைப் பொறுத்தவரையிலே ஒருவர் மறைந்தார் என்று சொன்னால் அவர் மறைந்த பிறகு அவரைப் பெருமையாகத்தான் எழுதுவது வாடிக்கை.
இன்றைக்குக் கூட ஒரு நண்பர் டில்லியிலே இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே வந்த ஒரு செய்தியை எனக்கு அனுப்பினார்கள்
ஆனால் அது இங்கே இருக்கிற இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைப் பதிப்பிலே வரவில்லை. டில்லியிலே இருக்கின்ற பதிப்பிலே இருந்துதான் வந்தது
The Raja of small things untill his dying day. V.P.Singh lived by commitment to peoples politics என்று இதிலே எழுதியிருக்கிறது.
மக்களுக்கு எங்கெங்கெல்லாம் குறை இருக்கிறதோ அங் கெல்லாம் அவர் முன்னாலே நின்றார். அதுதான் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அதைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.
அருணாராய் மற்றும் லிட்டில் டே என்ற இரண்டு அற்புத மான செய்தியாளர் நண்பர்கள் இதை எழுதியிருக்கின்றார்கள் அதிலே அவர்கள் நல்ல தகவல்களை சொல்லியிருக்கின்றார்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
வி.பி.சிங் அவர்களைப் பொறுத்தவரையிலே அவர் மிகப்பெரிய அளவுக்கு செய்த காரியங்களிலே இரண்டு ரொம்ப மிக முக்கியமானது.
இன்றைக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசினுடைய தலையாய சாதனைகளிலே குறிப்பிடத்தகுந்த ஒன்று தகவல் - அறியும் உரிமை உள்ள ஒரு சட்டம்.
இந்த சட்டம் வரவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து - அவர்கள் ஒரு போராட்டமாக எடுத்துக்கொண்டு செய்த தினுடைய பெருமை இதோ படமாக இருக்கிறாரே அந்த வி.பி.சிங் அவர்களைச் சார்ந்ததாகும்.
அதுபோல, Right to Employment வேலை வாய்ப்பு என்பது இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்.
இப்படி பல துறைகளிலே அவர்களுடைய முத்திரை எங்கும் உண்டு. டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது. அப்பொழுது அவர் மும்பை நகரத்திலே மருத்துவமனையிலே டயாலிசிஸில் இருந்தார்கள்.
இந்தச் செய்தியை அவர்களுக்கு சொன்னவுடனே, நான் சென்னைக்கே வருகிறேன் என்று சொன்னார்.
அங்கேயே வந்து பேசுகிறேன் என்று அவர்கள் சொன்னார்! சென்னை சைதையிலே தான் அவர்கள் முழங்கினார்கள்.
அந்த முழக்கம் இன்னமும் எங்களுடைய காதுகளிலே ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது.
நன்றி செலுத்த வார்த்தைகளே கிடையாது
அதற்கு எப்படி நன்றி செலுத்துவது என்பதற்கு வார்த்தைகளே - கிடையாது. வி.பி.சிங் அவர்கள் சொன்னார். நான் மட்டும் அன்றைக்கு டில்லியிலே இருந்திருப்பேனேயானால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சொன்னார். அப்பொழுது அத்வானிகள் அங்கே இருந்த ஆட்சியின் காரணமாக புல்டோசரை அனுப்பிட டில்லியில் கட்டப்பட்டிருந்த முதல் பெரியார் மய்யத்தை முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் அவர்கள் இடித்துத் தள்ளினார்கள்.
இதைப் பற்றி சொல்லுகிற நேரத்திலே அவர் சொன்னார்.
புல்டோசருக்கு முன்னால் நின்று தடுத்திருப்பேன்
பெரியார் மய்யத்தை இடிக்க வந்த புல்டோசருக்கு முன்னாலே நான் நின்றிருப்பேன் என்னை அழித்து விட்டுத்தான் பிறகு அந்த புல்டோசர் நகர்ந்திருக்க முடியும் என்று வட புலத்திலே பிறந்த - உத்தரப் பிரதேசத்திலே பிறந்த - பெரியாரைப் பார்க்காத, - பொயாரிடம் பழகாத, ஒருவர் சொன்னார் என்று சொன்னால், அவருக்கு எவ்வளவு பெரிய கொள்கை ஈர்ப்பு! எவ்வளவு பெரிய ஈடுபாடு!! எவ்வளவு பெரிய உறுதிப்பாடு!!
இவைகளை எல்லாம் நினைத்து நினைத்து அவருடைய இழப்பிற்காக நாங்கள் ஏங்கித் தவிக்கின்றோம். அவருக்கு நினைவுச்சின்னம் என்பதிருக்கிறதே ஏராளமாக அமைக்க வேண்டும்.
கடைசி ஒடுக்கப்பட்டவன், கடைசி பிற்படுத்தப்பட்டவன் வேலைக்கு முதன் முறையாக உள்ளே போகப் போகிறான். 1990-லே மத்திய அரசு அலுவலகத்திலே பிற்படுத்தப்பட்டவன் நுழைய வி.பி.சிங் அவர்களாலே மண்டல் குழு அறிக்கையினாலே வாய்ப்பு கிடைத்தது.
சீத்தாராம் கேசரி அவர்கள் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார். முதலில் அவர் விசுவ கர்ம சமுதாயத்தைச் சார்ந்த ஒரு ஆச்சாரி ராஜசேகரன் என்பவருக்கு கதவு திறந்து அவரை அழைத்துப் போய் உள்ளே உட்கார வைத்தார்கள்.
அந்த சமயத்திலே வி.பி.சிங் அவர்கள் அமெரிக்காவிலே சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தச் செய்தி வி.பி.சிங் அவர்களுக்குத் தெரியாது.
நான் சீத்தாராம் கேசரி அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது அவர் மத்திய அமைச்சர் சீத்தாராம் கேசரி அவர்கள் மிகப் பெரிய பெரியார் பற்றாளராக தன்னுடைய இறுதிக் காலத்திலே மாறியவர்.
அவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, உடனடியாக இந்தத் தகவலை வி.பி.சிங் அவர்கள் மருத்துவமனையில் இருந்த எண்ணைக் கண்டுபிடித்து அவர்களிடத்திலே பேசினேன்.
வி.பி.சிங் அவர்களிடத்திலே சொன்னபொழுது வி.பி.சிங் அவர்கள் மருத்துவமனைக்குள் இருக்கின்றார். இந்தச் செய்தியை சொன்னோம். அய்யா நீங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு என்று ஆணை போட்ட பொழுது சில தடைகள் இருந்தன. தீர்ப்புகள் என்ற முறையிலே கொஞ்சம் தாமதப்படுத்தினார்கள்.
ஆனால் அவைகளை எல்லாம் தாண்டி இன்றைக்கு நீங்கள் சொன்னீர்கள். நான் பிரதமராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தான் உருவாக்கிய மண்டல் என்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இருக்கிறதே அது நிச்சயமாகத் தாக்கத்தை உருவாக்கும் என்று சொன்னீர்கள்.
அதிலே வெற்றி பெற்றிருக்கின்றீர்கள் அதற்கு அடையாளம் தான் இன்றைக்கு மத்திய அரசிலே வேலை வாய்ப்பிலே முதல் முறையாக உங்கள் ஆணைப்படி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சார்ந்த ராஜசேகரன் என்பவர் மத்திய அமைச்சரின் கையைப் பிடித்துக் கொண்டே மத்திய அமைச்சகத்தின் அலுவல கத்திற்குள்ளே அமர்ந்திருக்கின்றார்.
மிகப்பெரிய அமைதிப் புரட்சி
இதுதான் நீங்கள் செய்த மிகப்பெரிய அமைதிப் புரட்சி - இரத்தம் சிந்தாத புரட்சி என்று சொன்ன பொழுது வி.பி.சிங் அவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து தொலைபேசியிலே சொன்னார், “இப்பொழுது என்னுடைய உடல் நலமே சீராகி விட்டது. நான் உடனடியாசுக் கூடத் திரும்பலாம். அந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று வி.பி.சிங் அவர்கள் அவ்வளவு பெருமையாகக் கருதினார்கள். இப்படி எத்தனையோ செய்திகளைச் சொல்ல முடியும்.
வி.பி.சிங் தமிழிலே போட்ட கையெழுத்து
அது மட்டுமல்ல தமிழிலே அவர்களுக்கு இருந்த ஈடுபாடு எப்படிப்பட்டது. விபி.சிங் என்று அவர்கள் தமிழிலே கையெழுத் துப் போடுவார்கள் இங்கே திறக்கப்பட்டிருக்கின்ற படம் பெரிய படமாக இல்லையே என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் நண்பர்களே அந்தப் படம் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களுடைய படம் அதிலே வி.பிசிங் என்று அவர்கள் தமிழிலே கையெழுத் துப் போட்டிருக்கின்றார்கள் (கைதட்டல்),
தமிழை அவ்வளவு நேசித்தவர்கள். தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர்கள். அவருடைய கவிதைகள் எல்லாம் இந்தியிலே வந்த பொழுது, ஒருமுறை பேசிக் கொண்டிருக்கின்றபொழுது என்னிடத்திலே சொன்னார்கள். இந்தியிலே அவர் கவிஞரும் கூட
கலைஞருக்கும் வி.பி.சிங்கிற்கும் இருக்கின்ற ஒற்றுமை
அந்த வகையிலே கலைஞருக்கும் விபி.சிங்கிற்கும் இருக்கின்ற ஒற்றுமை அபரிமிதமான ஒற்றுமை. ஏனென்றால் பல செய்திகளை கவிதையிலேயே சொல்லி விடக்கூடிய ஆற்றல் படைத்த ஒரே முதலமைச்சர் - இந்தியாவிலே நம்முடைய முதலமைச்சரைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது (கைதட்டல்),
ஆகவே கலைஞர் ஒரு சிறப்பான கவிஞர். வி.பி.சிங் அவர்கள் ஒரு சிறந்த ஓவியர் விபிசிங் அவர்கள் சொன்னார். என்னுடைய கவிதைகள் இந்தியிலே வந்திருக்கின்றன.
அதைவிடப் பெருமையாக வாய்ப்பாக கருதுகிறோம். உங்களுடைய கவிதைகள் தமிழிலே வரவேண்டும் தமிழ்நாட்டு மக்கள் அதைப் படிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்.
பக்கத்திலே இருந்த நாங்கள் உடனே சொன்னோம் அதை வெளியிடுகின்ற பொறுப்பை ஏற்று - அதை செய்வோம் என்று சொல்லி நாங்கள் ஏற்றோம். அவரே இதற்குத் தலைப்பும் கொடுத்தார்.
திருச்சியிலே வி.பி.சிங் கவிதையை வெளியிட்டோம் “ஒரு துளி பூமி ஒரு துளி வானம்“ என்று விபிசிங் அவர்களின் தமிழ்க் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா திருச்சியிலே நடைபெற்றது.
பல கவிதைகள் இதில் அற்புதமாக எழுதியிருக்கின்றார். திருச்சியிலே கவிதை நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடனே நேரடியாக சென்னைக்கு வந்து கலைஞர் அவர்களை வீட்டிலே பார்த்து அவர்களிடம் இதைக் கொடுத்து நேற்று இந்த வெளியீட்டு விழா நடந்தது என்று தெரிவித்தார்.
நான் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கின்றேன். காரணம் தமிழ் நாட்டு மக்களுக்கு என்னுடைய கவிதை போய் சேர்ந்திருக்கிறது என்று வி.பி.சிங் அவர்கள் சொன்னார்கள். ஒன்றே ஒன்று இதிலே இரண்டு செய்திகளைச் சொல்ல வேண்டும்.
வி.பி.சிங் அவர்களுடைய கவிதை நயம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வி.பி.சிங் அவர்கள் எழுதிய கவிதையில் “பிள்ளையார் சாணம்” என்று ஒரு தலைப்பு.
“சாணத்தின் மீது அமர்ந்த ஈ பறக்கிறது
பின்னர் வந்து பிள்ளையார் மீதும் அமர்கிறது
புரோகிதப் பண்டிதர் இதனைப் பார்த்துக் கொண்டே இருந்தார்
பிள்ளையார் மேல் பட்டது சாணம்
புரோகிதருக்குப் பிறந்தது ஞானம்
பொது சமத்துவம் தானே மகத்துவம்...
நல்ல விளையாட்டு இது....
என்று ஒரு கவிதை. இதைத் திரும்பத் திரும்பப் படித்தால் பல பேருக்குப் புரியும். அதுபோலவே ஜோதிடர் என்ற தலைப்பிலே ஒரு கவிதை. அந்தக் கவிதையிலே வி.பி.சிங் அவர்கள் சொல்லு கின்றார்.
‘ஜோதிடர்’ என்று ஒரு கவிதை
“ஜோதிடர்’’ எனது வருங்காலம் பற்றி
வகை வகையாய் சொல்லி வைத்தார்
நான் கேட்டேன் அவ்வளவு தூரம் வேண்டாம்,
இன்று இரவு - ஆம் இன்று இரவு எனக்கு
என்ன கனவு வரும்? ஜோதிடர் மவுனமாகிப் போனார்.
விண்மீன்கள் ஆதிக்கத்தால் கண்ணுறக்கம் இல்லாமல்....
நான் மட்டும் இருக்கிறேன்... என் கனவுகள் இல்லை ...
எனவேதான் ஜோதிடர் மவுனமாகிப் போனார் (கைதட்டல்)
என்று கவிதையை வேடிக்கையாக முடித்திருக்கின்றார்.
ஏனென்றால் இன்றைக்கு பல அரசியல்வாதிகள் ஜோதிடரைத் தான் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் ஆகவே வடபுலத்திலேதான் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வடபுலத்திலே ரொம்ப சர்வ சாதாரணமிது. அதிலே அவர்கள் எழுதியிருக்கின்றார்.
எனவே அற்புதமான கவிஞர் ஆற்றல்மிகு ஓவியர். அதைவிட சமுதாயத்தைப் படம் பிடித்த ஒரு எக்ஸ்ரே கருவியைப் போன்ற உணர்வாளர் அதற்கு நல்ல சிகிச்சை தந்த மாமேதை மறைந்தும் மறையாமல் என்றைக்கும் நம் நெஞ்சங்களிலே
நிறைந்தவர்.
வி.பி. சிங்கிற்கு தமிழகத்திலே நினைவுச் சின்னம்
அவருக்கு தமிழ் நாட்டிலே எப்படி நினைவுச் சின்னத்தை ந உருவாக்குவது என்பதை நாங்கள் கேட்டு நம்முடைய தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் செய்யக் கூடியவர் அல்ல.
அவருக்குத் தெரியும் எப்படிச் செய்வது? (கைதட்டல்)
எப் பொழுது செய்வது (கைதட்டல்) எதைச் செய்வது (கைதட்டல்) இதை எல்லாம் யாரும் கேட்காமலே செய்யக் கூடிய ஆற்றல் படைத்த முதல்வர்.
அதனால்தான் பலபேர் அவரிடத்திலே ஆத்திரப்படுகிறார்கள். நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைகின்றோம். அவருடைய ஆற்றலைக் கருதி - தகுந்த நினைவுச் சின்னத்தை நாம் உருவாக்க வேண்டும். அவருக்கு நினைவுச் சின்னம் மண்டல் கமிசன்தான்,
பிப்ரவரியில்
பெரியார் மய்யம்
வடபுலத்திலே இருக்கிற பெரியார் மய்யம் இடிக்கப்பட்டு - அதன்பின் விரிவாகக் கட்டப்பட்டிருக்கின்ற பெரியார் மய்யத்தை பிப்ரவரியிலே நம்முடைய தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள்தான் திறந்து வைக்க இருக்கின்றார்கள்
. பெரியார் மய்ய அரங்கிற்கு வி.பி.சிங் பெயர்
எனவே டில்லியிலே இருக்கின்ற பெரியார் மய்யத்தில் ஒரு அரங்கத்திற்கு வி.பி.சிங் அரங்கம் என்று பெயரிடக் கூடியதாக அமையும் என்பதை இந்த நேரத்திலே சொல்கிறேன். அது இயக்கம் சார்பானது.
ஆனால் மக்கள் சார்பாக தமிழ்நாட்டின் சார்பாக அவருக்கு எப்படிப்பட்ட பெருமைகளை உருவாக்க வேண்டும் - எப்படிப் பட்ட நினைவுச் சின்னங்களை உருவாக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் அவர்களே கூறுவார்கள். எனவே அதிலே அவர்களுக்குப் பங்குண்டு.
நாங்களும் தொண்டாற்ற இருக்கின்றோம்
அந்த வகையிலே தான் அவர்கள் சொன்னார்கள். இந்த கூட்டமே உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். நாம் அவருக்கு நல்ல மரியாதை செலுத்த வேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.
அந்த வகையிலே வி.பி.சிங் அவர்களுக்கு தமிழ்நாட்டிலே தலைநகரத்திலே எப்படிப்பட்ட ஒரு சிறப்பான நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களோ அவர்களோடு உடன் இருந்து பெரியார் தொண்டர்கள் நாங்கள் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் இருக்கிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
(சென்னை, தியாகராயர் நகரில் நடைபெற்ற வி.பி.சிங்., படத்திறப்பு விழாவில் தமிழர் தலைவர்
கி.வீரமணி பேச்சு)
(விடுதலை, 17.12.2008)

No comments:
Post a Comment